சக்தியின் கவிதைப்பக்கம்

on March 19th, 2008 by sakthi

kannadasan2.jpg

என் கவிதைகளின் குரு கண்ணதாசன். இந்தப் பக்கத்தில் வடிக்கும் கவிதைகள் அனைத்தும் கண்ணதாசன் அவர்களுக்கு சமர்ப்பணம்.

______________________________________________________________________________________

சிந்தனைமொட்டு மலர்ந்த வேளை

சிந்தனைப் பூக்களைச் சேர்த்துக் கட்டிய
சந்தன மாலையன்று சாத்திட இன்று
எந்தனை மனத்தினில் இருந்து ஒரு
செந்தீப்பொறியன்று பிறந்ததுவே !

சித்தத்தின் விளைச்சல் அனைத்துமிங்கு
மொத்தத்தில் சிதையில் அடங்குமுண்மை
ரத்தத்தின் துடிப்பில் புரிந்த செயல்கள்
யுத்தத்தில் இறந்த வேளையன்றே நிஜம்

பந்தத்தின் பிணைப்பில் பதிந்த தடங்கள்
சொந்தத்தின் சுமைகள் ஆழ்த்திய நேரங்கள்
விந்தொன்றின் நீச்சல் கொடுத்த வாழ்வில்
பந்தொன்றின் வீச்சாய் உருளும் மனமும்

தோற்றத்தின் வேஷங்கள் காலத்தின் கண்ணாடி
மாற்றத்தின் விளைவுகள் வயதுகள் தேரோட்டம்
வேற்றுமை உணர்வுகள் புலர்கின்ர பொழுதுகள்
சாற்றுமே உலகத்தில் மனிதனின் அவலங்கள்

காலச் சக்கரத்தின் நிச்சய பயணத்தில்
காணும் நிகழ்வுகள் கட்டாயக் கணிப்புகள்
ஞாலத்தில் நடத்திடும் நமது வாழ்வதுவும்
ஞானத்தின் அளவினில் ஒருதுளி நிமிடமே

எனதென்று எதுவுமில்லை புவியினிலே
எதுவெந்தன் கடமையிந்த வாழ்வினிலே
எழுகின்ற வினாக்களுக்கு விடைதேடும்
எழுச்சியோடு போகும் பயணம் வாழ்வதுவே

அன்புடன்
சக்தி

______________________________________________________________________________________

ஆதவனாகிய நான் ….

 

யுகம் யுகமாய் ……
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்

வெளிச்சத்தின் இருட்டில்
வேஷம் போடுமிந்த மானிடர் மந்தை
கண்கேட்டுப் போயினும் ஏனிந்த …..
சூரியநமஸ்காரம் எனக்கு

மேகத்தைக் கலைத்துக் கலைத்து
களைத்துப் போயே, மனிதன் மீது வெறுப்புக் கொண்டே
அந்தியில் நானும் அசந்து போய்
ஆழியில் விழுவேன்……

ஆயினும் ஏனோ
மலர்களின் ஏக்கம், இயற்கையின் வாட்டம்
என்னையும் மாற்றும், உள்ளம் உருகி மீண்டும்
கிழக்கிலிருந்து புதிதாய் முளைப்பேன்….

விழுவதும் எழுவதும் ஆதவன் எனக்கு
வாழ்க்கையின் கணக்கு
இடையினில் நடக்கும் நாடகம் அனைத்தும்
இதயத்தில் பதிக்கும் தடங்கள் வலிக்கும்

இருட்டினைத் துரத்தி உலகிற்கு
வெளிச்சத்தைக் கொடுப்பேன் …..
ஆனால் மனிதன் மட்டும் ….
இதயத்தில் உறைந்த இருளில்
இறுதிவரை அமிழ்ந்தே சாகிறான் …..

கிடைப்பதைச் சுருட்டி வறுமையைப் பெருக்கி
தன்னலச் சேற்றினுள் தானும் புதைந்து
தன்கையைக் கொண்டு தன் கண்ணைக் குத்தி
காட்சி தெரியவில்லையென்று ஏன் தான்
வீண் கோஷமிடுகின்றான்

யுகம் … யுகமாய் …. நானும்
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்
ஓருண்மை உனக்கு எடுத்துச் சொல்வேன்
உலகத்தின் இருப்பை உனதாய் எடுத்து
இயற்கையைக் கற்பழித்து நீ மட்டும் வாழ்ந்தால் ….

அதோ என்மீது காதல் கொண்டு
தன்னைக் குடித்துவிடக் கேட்கும் அந்தப்பனித்துளி …..
அதைக் கொண்டே ………………….
என்னை அணைத்துக் கொள்ளச் சொல்வேன்…

அப்போது ………………………

உலகம் இருண்டு விடும்
உனக்கு விளங்கிவிடும்….. ஆம் மனிதா
இந்த உலகம் உனக்கு மட்டும்
சொந்தமானதல்ல …..
ஆதவனாகிய நானும் எப்போதும்
அழியாமல் இருக்க மாட்டேன்….

ஏனென்றால் ….. நான்
யுகம் யுகமாய் எரிந்து கொண்டே …………….

______________________________________________________________________________________

அன்புநிறை உள்ளங்களே,

நாளை 18/11/2007 எனது தந்தையின் திதி. அவருக்கு வழமைபோல கவிதையாலே துதி செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழும்போது கவிதையால் பூமாலை சூட்ட முடியாமல் போன துயர் மனதை வாட்ட, மறைந்த பின்பு கவி பாடும் மூடனிவன்.

அன்புடன்
சக்தி

என் தந்தையின் நிழலில்

ஆலமரமாய் நீ
அப்பா !
அன்று நீ உன் கிளைகளை
அகல விரித்திருந்தாய் !

வாழ்க்கையின் சுமைகள்
வதைத்தன உன்னைச் சுட்டெரிக்கும்
ஆதவனின் கதிர்களாய்….
ஆனாலும் நீயோ
அத்தனையையும் உன்மேல் தாங்கி
அதனடியில் தங்கியிருந்த எமை
ஆனந்தமாய்த் துயில வைத்தாய்…

உனக்கென நீ வாழ்விலே
உரிமையாய் எடுத்துக் கொண்டவை
உன் மக்கள் எம்மீது நீ கொண்ட பாசமும்
உன் வதனத்தில் எப்போதும் பூத்திருக்கும்
உண்மையான அந்தப் புன்சிரிப்பும்

என்றும் உண்மையே பேசி
எப்போதும் நன்மையே செய்ததால் தானோ
வாழத் தெரியாதவன் நீயென்று
வஞ்சகர் சொல்லி மகிழ்ந்தார்
வசை சொன்னார் முன்னாலே
வகையான வாரிசுகளைத் தந்து
வாழ்ந்து காட்டி மறைந்தவன் நீ ஜயா?

அலைகடல் நுழைவது போலே
அடுத்தடுத்து அளப்பரிய துயரங்கள்
அப்பா நீ அடைந்தாலும் என்றும்
அசையாமல் நிற்கும் தூணாக நின்று
அப்பா என்ற வார்த்தைக்கு அர்த்தம்
ஆணித்தரம் என்று அறிவித்தவன் நீ

இலங்கை நீர்ப்பாசனத்துறையில்
ஈடிலாப் பொறொயியலாளனாக
இணையற்ற கணவனாக
ஈன்ற தாய்க்கு இனியதொரு மகனாக
இணைந்து பிறந்தோர்க்கு நல் சகோதரனாக
நண்பர்க்கு கைகொடுப்போனாய்
இனபச் செல்வங்களுக்கு என்றுமே
இணையிலாத் தந்தையாக
இவறிற்கெல்லாம் மேலாக அப்பா
இகத்தினிலே நல்லதொரு மனிதனாக
வாழ்ந்து மறைந்தாய் எந்நாளும்
வாடாது உன் நினைவுகள் என்னுள்ளத்தே

இன்றுனக்கு ஞாபகார்த்தத் திதி
இளையவன் பாடவந்தேன் துதி
இதயத்தின் ஒரத்தில் கொஞ்சம் சோகம்
அன்பில் ..
இமயத்தின் சிகரத்தை எட்டிப்பிடித்தவனுக்கு
ஒரேயரு மெழுகுவர்த்தி மட்டும்…. ஏனப்பா ….

ஓ ! நீ சிரிக்கிறாய்
புரிகிறது தந்தையே !
மூடனே, சிந்தித்துப்பார்
பொன்னான பாவ்லன் பாரதியின்
புகழுடம்பைப் பார்ப்பதற்கே
பதின்மூன்று பேர்தானே …..
சாதாரணமானவன் தானிந்த
சக்திவேல், எனக்கு நீயருவன்
ஏற்றும் மோட்ச தீபமே போதுமடா…

புரிகிறது அப்பா ….
புரிகிறது
வாழ்க்கையின் அர்த்தமே உங்கள்
வதனத்துப் புன்சிரிப்பில் அடங்கியிருக்கும்
வரலாற்று உண்மை புரிகிறது

என்னைக் கைகொடுத்து தூக்கிவிட்ட
என்னுயிர்த் தீபமே அப்பா…
உங்கள் ஆத்ம சாந்திக்காக
புலம்பெயர்ந்த இவனின்று
புலம்புகிறான் கவிதை என்று

வணக்கத்துடன்
சக்தி

_______________________________________________________________________________________

நின்னைத் துதித்தேன்

நின்னைத் துதித்தேன் – நின்
நினைவில் கலந்தேன்
என்னை மறந்தேன்
எழுத்தாய்ச் சுரந்தேன்

ஆயின நூற்றோடு ஒரு
அகவைகள் இருபத்திஜந்து
அவனியில் நீ பிறந்து
அன்னைத்தமிழின் மைந்தனாய்

தமிழைப் போற்றினாய்
தமிழாய் வீசினாய் – ஜயா
தமிழாய் மணந்தாய்
தமிழைச் சுமந்தாய்

கார் முகிலாய் நீயும்
கவிதை பொழிந்தாய்
கவிதை செய்தே பார்கவி
கர்ஜனை புரிந்தாய்

சுதந்திரக் காற்றாய்
சுந்தரத் தமிழில்
சொரிந்த கவிதைகள்
சிலுப்பின உணர்வினை

கனவாய் நீ கண்ட
கற்பனைச் சுதந்திரம்
நினைவாய் ஆனதொரு
நிகழ்வாய் நீயானாய்

ஆணுக்குப் பெண் உலகில்
அடிமையில்லை என்னும்
அழியாத உண்மையை
அடித்துச் சொன்னவனே

பிறப்பால் வந்ததல்ல
பிழைதான் ஜாதிபேதமென
பகன்றாய் துணிவுடனே
பழித்தார் பித்தனென உன்னை

என்னருமைப் பாரதியே
என்னெஞ்சின் ஒளி நீயே
என்றென்றும் அகிலத்திலே
எரியும் ஞானச்சுவாலை நீயே

பிறந்த தினம் உனக்கு
மறந்ததில்லை உனை ஒரு கணமும்
திறந்த இதயத்தோடு உனை
தியானிக்கிறேன் எந்தையே

வணக்கத்துடன்
சக்தி

______________________________________________________________________________________

அன்பின் பெருநாள்                                              


இதயத்தில் சுரக்கும்
அன்பின் ஊற்றாய்
இருட்டை அகற்றும்
அறிவு விளக்காய்
ஆசையெனும் நிழலை
விரட்டும் ஆதவனாய்
வையகத்தின் வரலாற்றில்
வரமாய் ஜொலித்திடும்
தேவமைந்தன் பிறந்தநாள்
அன்பிற்கோர் திருநாள்
தன்னைப் போலே
பிறனையும் நேசி
தவறாத உண்மையை
வேதமாக ஒப்பித்தான்
மனிதர்களை ரட்சிக்க
மண்ணிலே ஒருயிராய்
மனிதர்கள் மத்தியில்
மாபெரும் ஜோதியாய்
ஞானத்தின் வழி நின்று
வானமாய் விரிந்தவன்
மதங்களின் பெயராலே
மனிதர்களை பிரிப்பது
மனிதாபிமானம் அற்றவர்களே
மாபெரும் உண்மைதனை
மறக்காமல் இருக்க
மற்றையோரையும்
தன்னைப்போல்
மதிக்கச் சொன்னவன்
மேரிமாதா மைந்தனாய்
பாரினிலே விழுந்தவன்
வாடிநின்ர உள்ளங்களை
மாரியாய்ப் பொழிந்து
நனைத்தவன்
ஏழைகளின் காவலனாய்
நாளைகளின் ரட்சகனாய்
நேற்றைகளின் நினைவுகளில்
சுகந்தமாய்க் கலந்தவன்
கிறீஸ்துமஸ் திருநாள்
கிறீஸ்தவர்களுக்கு மட்டுமல்ல
அன்பை மதிக்கும் உள்ளங்கள்
அனைத்துக்கும் பெருநாளே
இனிய இத்திருநாளில்
இதயத்தால் ஒன்றுபட்டு
அனைவரும் மனிதர்களே
அதிரவே கோஷமிடுவோம்

தேவன் யேசுவின் போதனைகள்
மனிதர் அனைவர்க்கும் பொதுவே
அனைத்து நண்பர்களுக்கும்
அன்பான கிறீஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 

அன்புடன்
சக்தி
____________________________________________________________________________________
 
 

காலமகள் மடியில் கனவொன்று கண்டேன்

காலமகள் மடிதனிலே
கண்மூடிக் கொஞ்சம்
களைப்பாறும் போது
கண்டு வந்த கனவதன்
கதை கூறும் நேரம்
அந்தி மஞ்சள் மாலையில்
ஆடிவரும் தென்றலது
ஊஞ்சலாட்டும் மரக்கிளையில்
உட்கார்ந்த கிளியன்று
உருகுகின்ற நிலை கண்டேன்
காரணத்தை நானும் அப்போ
கனிவாக கிளியிடம் கேட்க
கண்நிறைந்த நீரோடு
கலங்கியந்த கிளியதுவும்
கதைபேசத் தொடங்கியதே
நேற்றுவரை நானும் கூட
நேசமிக்க குடும்பத்துடன்
பாசமாக வாழ்ந்திருந்தேன்
மோசமிக்க மனிதர்களின்
நாசமிகு காரியத்தால் …….
விம்மியது கிளி, பொங்கியது கண்ணீர்
சொட்டுகின்ற நீரகற்றி தொடர்ந்தது
இயற்கை தந்த வரமாக நிமிர்ந்ததொரு
இனியதொரு ஆலமரம் … ஆமாம் எனது
இல்லறமும் அதில் தானே, நல்லறமாகியது
இருப்பதையெல்லாம் தனதாக்கி
இன்னும், இன்னும் வேண்டுமென
இதயத்தை கல்லாக்கிய மனிதன்
இயற்கை கொடுத்த கொடையை
இல்லையென்றாக்கினான் வாழ்வை
பச்சைக்கிளி உனக்கேன் இந்தப்
படுசோகம் வந்தது சொல் கிளியே !
பரமன் படைப்பினில்
படைத்தவை
பாரினில் அனைத்தும் சமனே
பகர்வாய் உன் துயரை ……
உன் இனத்தைச் சேர்ந்தவன் தான்
என் இனத்தை அழித்தான் கேளாய்
ஆலமரம் தன் வீட்டின் முன்னிருந்து
அழகைக் கெடுக்குது என்றே அவன்
அடியோடு அறுத்தான் அம்மரத்தை….

வாழ வழிதேடி வகையறியா வேளையில்
வதிய இடங் கொடுத்து ஆதரித்த
அன்பு ஆலமரம், அதில் தானே
அழகாய் நான் அமைத்த குடும்பம்
அன்பாய் வாழ்ந்திருந்தது

ஏன் மனிதா ? ஏனுங்கள் மனிதருக்கு
அளவற்ற ஆசைகள். இயற்கையின் வளத்தை
அழித்து, அழகு காணும் குறுகிய புத்திகள்
அறியமாட்டீரோ இவைதான் உங்கள்
அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதனை

விழுந்த மரத்தோடு மறைந்த சொந்தங்கள்
வதைக்கும் சோகங்கள் வழியும் நெஞ்சத்தில்
விதைத்த இன்பங்கள் புதைந்தே போயின
இன்றோடு நான் ஊமையாய் மாறினேன்
இனியொரு போதும் மனிதரே உம்மோடு பேசேன்

திடுக்கிட்டு விழித்தேன் ! என்னே பயங்கரம் !
எமைக்காக்கும் இயற்கையை நாமே அழிக்கின்றோம்
எத்தனை காலங்கள் எமையே ஏமாற்றுவோம்
என்னருமை மானிதர்காள் விழித்தெழுங்கள்
எப்போதும் காலமகள் மன்னிக்க மாட்டாள்.

 

 

________________________________________________________________________________________________________________________________________________

வாழ வழிதேடி வகையறியா வேளையில்
வதிய இடங் கொடுத்து ஆதரித்த
அன்பு ஆலமரம், அதில் தானே
அழகாய் நான் அமைத்த குடும்பம்
அன்பாய் வாழ்ந்திருந்தது

ஏன் மனிதா ? ஏனுங்கள் மனிதருக்கு
அளவற்ற ஆசைகள். இயற்கையின் வளத்தை
அழித்து, அழகு காணும் குறுகிய புத்திகள்
அறியமாட்டீரோ இவைதான் உங்கள்
அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதனை

விழுந்த மரத்தோடு மறைந்த சொந்தங்கள்
வதைக்கும் சோகங்கள் வழியும் நெஞ்சத்தில்
விதைத்த இன்பங்கள் புதைந்தே போயின
இன்றோடு நான் ஊமையாய் மாறினேன்
இனியொரு போதும் மனிதரே உம்மோடு பேசேன்

திடுக்கிட்டு விழித்தேன் ! என்னே பயங்கரம் !
எமைக்காக்கும் இயற்கையை நாமே அழிக்கின்றோம்
எத்தனை காலங்கள் எமையே ஏமாற்றுவோம்
என்னருமை மானிதர்காள் விழித்தெழுங்கள்
எப்போதும் காலமகள் மன்னிக்க மாட்டாள்.

 

 

________________________________________________________________________________________________________________________________________________

 

 மனமெங்கும் மகனாட

 

 

 

 

 

 

அன்பின் நெஞ்சங்களே எமது மகன் தனது நான்காவது ஆண்டு மருத்துவ பயிற்சிக்காகச் சமீபத்தில் வாஷிங்டன் சென்றுவிட்டான், இம்முறை அவனது பிறந்த தினத்தில்தான் நானும், அவன் அன்னையும் அவனைப் பிரிந்து இருந்த முதலாவது பிறந்ததினம். அப்போது மனதில் எழுந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சந்தர்ப்பம் அளித்தமைக்கு அன்பான வணக்கங்கள்

மனதிலொரு கவிதை
மைந்தனுனைத் தேடி

ஆசை மகனுன்னை
ஆகாயவிமானமது
அழைத்துச் சென்றெமக்கு
அளித்த தனிமை தந்த
அன்புத் தண்டனையால்
பாடும் கவிதையிது

தாலாட்டு உனக்கு
தாய்பாடும் பருவமல்ல
தந்தை மனிதிலின்று
தவழுகின்ற கானமிது

செல்வமகன் நீயும்
சென்றாய் அமேரிக்காவுக்கு
கல்வி வளம் அதனை
கட்டிக் காப்பதற்கு
வாரங்கள் எட்டேதான்
மகனே பிரிந்திருக்கும் காலமிது
பாழும் மனம் அதுவோ
பாவம் அழுகிறது

அன்னை வாயில்
உதிர்க்கும்
வார்த்தையெல்லாம்
அன்புமகன் உந்தன்
ஆசைக் கனவுகளே
உன்னைப்பிரிந்து வாடும்
உள்ளங்கள் இரண்டு
தனிமைக்கூட்டில் நாம்
தவிக்கும் பொழுதுகள்

பிறந்தநாள் வந்தது மகனே – நீ
பிறந்ததுமுதல் இந்நாள்வரை நாம்
பிரிந்து இருந்ததில்லை அறிவாய்
பாவம் அன்னையவள்
பதைத்து இருந்தநிலை
பார்த்து தந்தை இவன்
மறைந்து வருந்தும் கலை

உனைப்பிரிந்த துன்பம் தனை
உனைப்பெற்ற பெற்றோர் நாம்
தாங்கும் வகைசொல்வேன் கேளாய் …

நாம் பெற்ற செல்வம்
நலமாகப் பயின்று
நானிலத்தில் தலைசிறந்த
நல்லதொரு மருத்துவனாகி
மக்களுக்கு சேவை செய்து
மனிதாபிமானம் மிக்க
மருத்துவன் இவன் என
மண்ணுலகம் போற்ற வேண்டும்

அன்று
அன்னை அவள் மனமும்
தந்தை என் மனமும்
விண்ணுலகம் வரை உயர்ந்து
விம்மிப்புடைத்து நிற்கும்
அந்நாள் வரை எமைக்காக்க
ஆண்டவன்
அருள் வேண்டும்

________________________________________________________________________________________________________________________________________________________

 

என்னைத் தொலைத்த(தொலைக்கும்) கணங்கள

 

 

 

 

 

அந்த ஒரு கணத்தில்
அரசமரத்துக் கிளைதனில்
அன்றில் ஒன்று தாவிய
அழகு கண்டு நான்
அந்தக்கணம் எனைத்
தொலைப்பேன்

 

அழகுவிழி மலர் கொண்டு
அம்பொன்று என்மீது
அவளெய்த போதன்று
அரைவினாடிப் பொழுதினிலே
அவசரமாய் நான் எனைத்
தொலைத்தேன்

 

பூவிரியும் சோலையிலே
பூந்தென்றல் வீசுகையில்
பூவிலந்த வண்டமர்ந்து
பொழியுமந்தத் தேனருந்தும்
பொன்மாலையில் நான் என்னைத்
தொலைப்பேன்

 

கைநீட்டி காத்திருக்கும் சிறுவன்
கண்களிலே ஏக்கத்துடன்
கருணை எதிர்பார்க்கையில்
கண்மூடித்திறக்குமுன்னே அவன் கையில்
கச்சிதமாய் ஒரு நோட்டை
கைகளினால் கொடுக்கையிலே
கண்களை நம்பமுடியாமல் திகைத்து
காற்றாய் அவன் பறக்கும் வேளையில்
கண்நேரம் வாஞ்சையிலே நான் என்னைத்
தொலைத்தேன்

 

காற்றோடு காற்றாய் என் அன்னை
கலந்து விட்ட பின்னாலும்
கனவுலகில் சிலநேரம் காட்சியாகிக்
கதைபேசி என்னோடு சேர்ந்து
கவிதைகளை ரசித்திருக்கையில்
கனவு எனும் கானகத்தில் நான் என்னைத்
தொலைப்பேன்

 

காதலினால் என்னைக் கட்டிப்போட்டு
கலியாணம் என்னும் பந்தத்துள் அணைத்து
கருணைமிகு மனதோடு கட்டுண்டு
கடினமெனும் பாதையூடு கைபிடித்து
கவலைதீர்ந்த ஊருக்கு அழைத்துச் சென்ற
கண்மணி என் மனைவி தனை நினைக்கையில்
காலமெல்லாம் நான் எனைத்
தொலைப்பேன்

 

தமிழ் என்னும் கன்னியொருத்தி
தனைக்காட்டி எனை மயக்கி
தரணியிலே வாழுமட்டும் மறக்காமல்
தன்னோடு கலக்க வைத்து
தாகம் தீருமட்டும் கவிதையென்னும் நீரூற்றி
தகமதைத் தீர்க்கையிலெ நான் என்னைத்
தொலைப்பேன்

 

கண்ணதாசன் என்றொரு கவிஞனின்
கவிதையெனும் கானகத்தினுள்
கண்மூடி நான் நடந்து வேண்டுமென்றே
காணமல் வழிதொலைந்து
களைத்துக் கண்மூடும்வரை
கட்டாயமாக நான் என்னைத்
தொலைப்பேன்

 

அன்புதனை பயிரிட்டு
அன்பையே அறுவடை செய்து
அன்புடன் தமிழ் வளர்க்கும்
அன்புடன் குழுமத்துக்குள்
அன்புடனே நான் என்னைத்
தொலைப்பேன்

 

கருவினிலே உருவாகி என்
கைகளில் குழந்தையாய்
கண்களில் ஒளியாகி
கட்டிளம் காளையாக
கடமையுடன் கல்விகற்கும்
கண்ணான என் மகனின்
கவரும் அந்தப் புன்னகையில்
காற்றாகக் கலந்து நான் என்னைத்
தொலைப்பேன்

 

என்னைத் தொலைத்த கணங்கள் பல
என்னைத் தொலைக்கும் கணங்கள் பல்
எப்போதும் தொலைவதில் இன்பம்
என்றும் கொடுப்பது தமிழும் கவிதையும்

சக்தி சக்திதாசன்

______________________________________________________________________________

 

 

 

 

என் இனிய இளைய தலைமுறையே !

காலத்தின் வெள்ளத்தில் அடிபட்டு
காத்திருக்க நேரமின்றி
ஓடிக் கொண்டிருக்கும் என்
இளைய தலைமுறையே ……

அவசரத்தில் தவறுதலாய்
அடிமனதில் தளிர் விடும்
மனிதாபிமானத்தை மட்டும்
மறந்து விட்டு போகாதே…..

நேற்றைகளின் கனவுகளில்
இன்றைய நிகழ்வுகளாய்
நாளைய பாடங்கள் தான்
நம்முன்னே நிற்கின்றன……

அனுபவங்கள் ஆயிரம்
அடைந்த அற்புத மனிதர்
இலவசமாய்த் தருவதால்
இகழாதே புத்திமதிகளை….

கண்முன்னே மின்னிடும்
அத்தனையும் பொன்னல்ல
கூழாங் கற்களும் வெளிச்சத்தில்
மின்னிடும் பாசாங்கு உலகமிது…

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
காதோடு இதனை வாங்கிக்கொள்
நிஜத்தின் பிம்பம்தான் நிழல்
நிழலுக்காக நிஜத்தைக் கொல்லாதே

காளையரின் உரிமை காதல்
காதலின் உடமை கண்ணியம்
கன்னியரின் மனதைப் பூப்போலே
காப்பது காளையரின் கடமையே

சம உரிமைச் சமுதாயம் தானிது
ஆணோடு பெண்ணும் ஒரு தளம்
வாலிபரின் வரம்புகளைக் காப்பது
வனிதையரின் கடமையும் மறக்காதீர்

சித்திரம் போன்ற பல பாவையர் வாழ்வு
சிதைந்தது பூமியில் கண்முன்னே
சீதனம் என்னும் அரக்கனை
சிரச்சேதம் செய்திடுவீர் இகத்தினில்

உழைப்பவர் வாழ்வினில் பெருந்துயர்
உதிருமே அவர் கண்ணில் நீர்த்துளி
உரிமைகள் அவர்க்குக் கிடைத்திட
உழைத்திடும் என் இனிய தலைமுறை

பிறந்தவர் அனைவரும் இறப்பது
பிழைக்காத உண்மை இவ்வுலகிலே
உரைக்காத உண்மைகள் என்னுள்ளத்தில்
உறங்குவதால் யாருக்கு லாபமுண்டு

அன்பாக வேண்டுகின்றேன் உறவுகளே
அகிலத்தில் ப்ருமை சேர்க்க வாழ்ந்திடுவீர்
அன்னை தந்தை உளம் உவக்க சிறந்திடுவீர்
அற்புதமான என் இனிய இளைய தலைமுறையே

______________________________________________________________________________

இடுகாட்டு இதிகாசம்

காதவழிப் பயணம் ஒன்று
கால்கள் சென்றது போல
காலங்கள் என்றொரு
கானகத்தினூடாக
ஜனனத்தில் ஆரம்பித்த பயணமிது
மரணமெனும் ஊரை நோக்கி
கனவேக ரயிலைப்போலே
காற்றாகப் பறக்குதம்மா !

இடையில் பார்த்த காட்சிகள்
இதயத்தைப் பண்படுத்தி
இல்லை என்னும் எல்லை கடந்து
இருப்பதன் நிஜத்தைக் காட்டும்
இயற்கையதன் விளையாட்டை
இன்று கொஞ்சம் ரசித்து விட்டேன்

காயத்தின் வடுக்களுக்கு மருந்தாகக்
காயவைக்கும் தமிழின்பம் என்னை
கவிதை என்னும் கடலினுள்ளே
எனைமறந்து மூழ்கும் இன்பம்
துன்பத்தின் வாலதனில் கட்டி வைத்தான்
இன்பமெனும் உணர்ச்சிதனை

இடுகாட்டு இதிகாசம் என
இதை ஒதுக்கி வைக்கும் நிலையுண்டு
இருக்கின்ற உண்மைதனை
அறிவென்னும் விளக்குக் கொண்டு
இருளதனை விலக்கிப் பார்த்தால்
உளமெனும் விதைநிலத்தில்
உண்மையான நிலை வளரும்
உரைக்கின்ற பொழுதினிலே என்
உள்ளம் கொஞ்சம் உருகி நிற்கும்

______________________________________________________________________________

 

 

 

 

இல்லாத ஒன்றை


இல்லாத ஒன்றைத் தேடி
நில்லாத உலகில் ஓடி
செல்லாத இடங்கள் நாடி
கல்லாத பாடம் கற்றோம்

பொல்லாத எண்ணம் பெருகி
பொன்னான பொழுதை இழந்து
பொருந்தாத வேடம் புனைந்து
புதிதாக எதனைக் கண்டோம்

சொல்லாத எண்ணம் கோடி
சொன்னாலும் கேட்போர் இன்றி
புதைக்கின்றோம் நெஞ்சினுள் மூடி
புரியாதோ வாழ்வின் மந்திரம்

கொல்லாத உணர்வின் ஏக்கம்
கொள்கின்ற நிஜத்தில் மறையும்
கூட்டியும் கழித்தும் பார்க்கும் கணக்கு
சரியாய் முடியுது எரியும் சிதையில்

 

 

 

———————————————
இன்றெனக்கு ஓய்வு தேவை                      

 

கனவுகளால் கொடிகட்டி
நினைவுகளைக் காயவிட்டு
மனவினையின் நிகழ்வுகளால்
மனிதனிவன் புரள்கின்றான்

துணையான உறவுகள்
தூரத்தே அகன்றதும்
இணையாக துன்பங்கள்
இணைந்தின்று வருவதும்

நிழல்தேடி ஓடுகின்றான்
மரங்களில் இலைகளில்லை
தாகத்தில் தவிக்கின்றான்
கண்களில் கானல் நீர்

உழைப்பதை உயர்வாக
உள்ளத்திலே கொண்டதினால்
உதிரத்தை வேர்வையாய்
ஊற்றியதே அவன் கூலி

உணவின்றி தவித்தாலும்
உடையின்றி துடித்தாலும்
உறவான உயிர்களுக்கு
உழைப்பையே அளித்தானே

வாழ்வெல்லாம் ஓடி விட்டு
வந்ததையெல்லாம் தாங்கி விட்டு
எனக்கின்று ஒய்வு தேவை
எண்ணும் போது அவன்
ஏனோ தூங்குகிறான் கல்லறையில்

______________________________________________________________________________

 

 

துணையான உறவுகள்
தூரத்தே அகன்றதும்
இணையாக துன்பங்கள்
இணைந்தின்று வருவதும்

நிழல்தேடி ஓடுகின்றான்
மரங்களில் இலைகளில்லை
தாகத்தில் தவிக்கின்றான்
கண்களில் கானல் நீர்

உழைப்பதை உயர்வாக
உள்ளத்திலே கொண்டதினால்
உதிரத்தை வேர்வையாய்
ஊற்றியதே அவன் கூலி

உணவின்றி தவித்தாலும்
உடையின்றி துடித்தாலும்
உறவான உயிர்களுக்கு
உழைப்பையே அளித்தானே

வாழ்வெல்லாம் ஓடி விட்டு
வந்ததையெல்லாம் தாங்கி விட்டு
எனக்கின்று ஒய்வு தேவை
எண்ணும் போது அவன்
ஏனோ தூங்குகிறான் கல்லறையில்

______________________________________________________________________________

 

  

 

நண்பனுக்கு ஒரு மடல்

அன்பு நண்பா !

உள்ளமெனும் ஆழியிலே
உறங்காமல் அடிக்கும்
உணர்வலைகள் கூறும்
உண்மைகள் உரசுகின்றன

இயற்கையை ரசிக்கத் தெரியா
இதயமற்ற மனிதர்கள்
இறப்பை மறந்து விட்டு
இருப்பை வளர்ப்பதற்கு …

வானமெனும் வீதியில் அழகாய்
வலம் வரும் வெண்மேகங்கள்
வாசம் வீசிக் கொண்டு
விரிந்திருக்கும் வண்ணமலர்கள்

மின்னலென்னும் ஒளி வீசி
இடியாகப் பெரும் ஒலி வீசி
வருணபகவான் தரும் மழையின்
வரவை அறிவிக்கும் இயற்கை

தனைத்தழுவும் மழைநீரை
தான் தழுவும் தரைமகளும்
தமை மறந்த உறவுக்கலப்பில்
தளிர்க்கின்ற மண்வாசம்

கானம் பொழிகின்ற குயிலோசை
கதைபல பேசிடும் கிளியோசை
கரகரக்கும் அந்த அணிலோசை
காணக்கண்ணற்ற மனிதர் கூட்டம்

மலருக்கு மலர் தாவும் வண்டும்
மலர்ந்து அவற்றுக்காய் விரிந்திடும் மலர்கள்
மயங்கி தேனருந்திப் பாடிடும் தேனீக்கள்
மனதை மயக்கிடும் அம்மாலைப்பொழுதுகள்

போதாது ! போதாது ! காலம் போதாது
பொன்னான இயற்கைதனின் பெருமை சொல்ல
பொறுமை சிறிதுமற்று அதைச் சிதைக்கும்
பொல்லாத மனிதர் தம் சிறுமை சொல்ல

அன்புடன்
சக்தி

______________________________________________________________________________

எங்கே அமைதி ?
—————

எதையோ தேடுகிறேன்
எங்கெங்கோ அலைகிறேன்
தேடலும் நிற்கவில்லை
அலைதலும் அடங்கவில்லை

பால் நிலவின் வெளிச்சத்திலே
பனி மூட்ட அணைப்பினிலே
மழைநீரில் நனைந்ததிலே
மனமேனோ அடங்கவில்லை

ஆண்டவனின் சந்நிதியில்
ஆன்மீகக் கூடலிலே
ஆனந்த வெள்ளத்திலே
அடங்கவில்லை மனதின் ஏக்கம்

அன்றொருநாள் காலையிலே
அதிகாலை வேளையிலே
அந்த வீட்டு வாசலிலே
அழகான குழந்தை ஒன்று

கண்களினால் என்னைப் பார்த்து
கைகளை அசைத்துக் கொண்டே
கன்னங் குழிய ஓர் வெள்ளைச்சிரிப்பு
கண்டது என் மனம் அமைதியை அப்போது

அன்புடன்
சக்தி
______________________________________________________________________________

பணிந்தேன் உன்னை பாரதிதாசா !

பாவேந்தா ! பாரதிதாசா !
பாடமறப்பேனோ உனை நானும்
பாடமல் இருப்பேனோ என்றும்
பரதியின் தாசன் நீ …….

தமிழுக்கும் அமுதென்று பெயர்
தந்தெமைத் தாலாட்டினாய்
தமிழையே உயிராக்கி நீயும்
தமிழாகி சிறந்தாயே !

“நாய் என்று பெண்ணை
நவில்வார்க்கும் இப்புவிக்கு
தாய் என்று காட்டாத
தமிழர்க்கு வாய்த்தவளே”

என்ற உன் தாலாட்டு வரிகள்
என்றும் பகரும் உந்தன் நெஞ்சில்
எத்தகைய பெருமை கொண்டாய்
எம்பெண்களைப் பற்றி என்று

பாரதியின் புகழ் பாட
பாரினில் வாய்த்தவன் நீ
பாரதியின் கனவினை
பாரினில் பாவாய்ப் படைத்தவனே

எத்தனை கவி தந்தாய் !
அத்தனையும் முத்துக்களாய் எம்
சித்தங்களில் பதிய வைத்தாய்
சொத்தெனப் போற்றிடுவோம் நின்னையே

செந்தமிழ் மொழியெடுத்து கவிபுனைந்து
செந்தணல் உணர்வுகளை ஊட்டி
செப்பிய செய்திகள் அனைத்துமே
தீந்தமிழர் புகழ் பாடும்

“தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ ”
தாய்மொழியின் வலிமையை பாரதிதாசா நீ
தரமிக்க வகையிலே தந்தாயே !

” புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்”
புவியின் சரித்திரத்தில் வேண்டாம் இனி
புரையோடும் பகுதிகள் என்றவன் நீ

“இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்”
இதைவிட பொதுவுடமைக் கொள்கைதனை யார்
இனிமையாய் இகத்தினில் உரைத்திடுவார் ஜயா

அன்புத் தம்பியவன் என்னிடம் கேட்டான்
அண்ணல் உனக்கோர் கவிதை தரும்படி
அடியேன் மனதில் என்றுமே சுரந்திடும்
அன்புத்தமிழால் உன்னைப் பணிந்தேன்

பாரதியின் அன்புத் தம்பியாய்
பாரினில் வந்து புகழ் படைத்தனை
பராதிதாசன் உனை நான் வனங்குகிறேன்
பாதங்களில் என் சிரம் பதித்தே

நின் புகழ் வாழ்க ! நின் பெயர் வாழ்க
நீ தந்த நல் கொள்கைகள் வாழ்க !

அன்புடன்
சக்தி

____________________________________________________________________________

என்னை மலர விடுங்கள்

மல்லிகைச் செடியில் பிறந்தேனாம்
மல்லிகை மொட்டுக்களில்
மங்கையர் மனதை இழப்பாராம்

அதற்காக …….

மொட்டுக்களாக எங்கள் வாழ்க்கையை
மொத்தமாய் முடித்திடுவீரோ ?

இதழ்கள் விரிந்து இங்கே
இனிமை கொஞ்சும் மலர்களாய்
இன்னும் கொஞ்சம் வாழ ஆசை
இதுவுமா உங்களுக்குப் புரியவில்லை….

என்னை மலர விடுங்கள்……..

அதோ ! அங்கே ஒரு செடி
அதுவும் தான் மலர்கிறது
ஆனால் அது மல்லிகையாய் பிறக்கவில்லை
அதனாலே அழகாய் மலர்கிறது

அம்மலரின் செடிகளை
ஆதவன் கதிரொளி பட்டு மின்னும்
அந்தப் பனித்துளி அழகாய்
அணைத்திடும் காட்சி…..

அப்படியே என் கண்ணுக்குள்
அழியாமல் படிந்திருக்கு…..

நானும் அழகாய் இதழ் விரித்து
நல்ல மலராய் மலர்ந்து என்னிதழில்
மின்னும் பனித்துளியைத் தாங்கிட ஏங்குகிறேன்…..

வேண்டாம்
ஒருவேளைப் பொழுது கூந்தலை
அலங்கரிக்க என்னை மொட்டாகவே
அழித்து விடாதீர்…….

அந்தப் பனித்துளியத் தாங்க வேண்டும்
அதனாலே என்னை மலர விடுங்கள்

அன்புடன்
சக்தி

——————————————————————————

கண்ணில் மையெழுதி

கண்ணிரண்டில் மையெழுதி – எனைக்
கணப்பொழுதில் உன் வசமாக்கி
காணமல் போனவளே ! ஏனெனை
கனகத்தே தவிக்க விட்டாய் ?

கார்முகிலாய் கூந்தல் விரித்து – உன்
கருவிழியால் கதை பேசி
காதல் எனும் கடலினிலே
கவிழ்த்து விட்ட காரிகையே !

வானத்திலே வலம் வரும் அந்த – வட்ட
வண்ண நிலவாக பூவதனம் அமைந்தவளே
வந்திடலாம் அமாவசை நிலவதற்கு
வாராது ! வாராது ! உன் நினைவின் முடிவெனக்கு

வஞ்சியென்று உன்னை நானும் விளித்ததினால் – நீயும்
வஞ்சித்து பார்ப்பதென்று முடிவெடித்தாயோ சொல்?
விஞ்சி நிற்கும் நினைவுகள் எந்தன் நெஞ்சில்
விடையறியா வினாவாக்கி நீயெங்கே சென்றாயோ ?

காலமகள் கணக்கினிலே பொன்மானே ! – உனக்
காணாத பொழுதெல்லாம் சூனியமாய் போகுதடி
காதலது நோய் தானோ ? காலனவன் ஆயிதமோ ?
காத்திருந்து காத்திருந்து காற்றோடு போவேனோ ?

அன்புடன்
சக்தி

——————————————————————————

பாடும் பறவைகளே !

சக்தி சக்திதாசன்

பாடும் பறவைகளே !
கொஞ்சம் நில்லுங்களேன் ….

பறந்து பறந்து நீங்கள்
குச்சிகளைப் பொறுக்கி
இழைத்து இழைத்துக் கட்டும்
கூடுகளைக் கண்டு நான்
வியந்து வியந்து நிற்கிறேன்

நெருங்கி நெருங்கி நீங்கள்
காதில் காதல் பேசும் பொழுதுகளை
கண்டு கண்டு நான்
கண் மயங்கி நிற்கிறேன்

தேடித் தேடி உணவுதனை
குஞ்சுகளின் வாயில் ஊட்டும்
பாசம் பொழியும் வேளைகளைப்
பார்த்துப் பார்த்து நான்
நெகிழ்கின்றேன்

நினைக்கும் வேளைகளில்
சிறகை விரித்து நீங்கள்
வானில் பறக்கும் காட்சிதனை
ஏக்கம் கொண்டே நானும்
நோக்குகின்றேன்

சீற்றம் கொண்டு இயற்கை
வீசும் மாற்றங்களை நீங்கள்
தாங்கும் வகை கண்டு நான்
பேச மறக்கின்றேன்

நாசம் புரியும் மனிதர் தம்
வேஷம் தனை அறியாமல் – அவர்
வீட்டு மரங்களிலே நீங்கள்
வாழும் நிலை கண்டு
கலங்குகிறேன்

20.10.2008
——————————————————————————

கானகத்திலொரு கானம்

சக்தி சக்திதாசன்

காற்றோடு கேட்குதந்த
கானகதின் கானம்
காணாத பொழுதுகளின்
காட்சிகளின் ஏக்கம்

விடியாத இரவுகளின்
விளங்காத வேதம்
முடியாத கதைகளின்
முடிவில்லா ஓலம்

தெரியாத வானத்தின்
கலையாத மேகங்கள்
புரியாத மொழியதன்
புதிதான அர்த்தங்கள்

ஓடாத கடிகாரத்தின்
ஓசையற்ற பொழுதுகள்
ஓடி விட்ட காலத்தின்
ஓயாத நினைவலைகள்

தேடாத சொந்தத்தின்
தேவையற்ற பந்தங்கள்
தேடுகின்ற தேவைகளின்
தொலைந்த கோலங்கள்

மூடாத பாத்திரத்தில்
தளும்பி நிற்கும் நீரலைகள்
முகிழ்க்காத மொட்டொன்றின்
மெளனமான ராகங்கள்

எத்தனையோ சொல்லியும்
எவருக்குமே புரியவில்லை
கானகத்திலொரு கானம்
காதில்லை கேட்பதற்கு

அன்புடன்
சக்தி

20.10.2008
——————————————————————————

 

 

 

 

தோழனின் தோள்களில் மட்டுமா?

 

சக்தி சக்திதாசன்

 

 

தோழனே !

உன் தோள்களில்….

மட்டுமா சுமை?

 

இதயத்தின் மையத்தில்

இறைந்திட்ட துயரத்தின்

சுமை தாங்காமலோ

இதயத் துடிப்பு கொஞ்சம்

தடம் மாறிப்போனது ?

 

உனைக் கேட்டா பெற்றார்

உனதருமை பெற்றார்?

நீ கேட்டா பிறந்தாய் ?

வரம் கேட்டா விந்தாய்

தாயின் கருவில் உறைந்தாய் ?

 

சேற்றினில் மலரும் செந்தாமரை

சேரியில் உதித்த நீ தாமரையா?

 

விழுந்த இடத்திலே குட்டையாகும்

மழைநீரைப் போல

உதித்த இடத்திலே உனக்காய்

விதித்த பாதையில் மாற்றமில்லையே !

 

ஒருவேளை உணவுக்காய்

ஓயாமல் ஓடிய உன் தந்தையின்

ஒருவழிப்பதையே உனக்கும்

ஓடும் வழி காட்டிற்று

 

அடுக்கடுக்காய் மேடைகள்

அலங்காரப் பேச்சுக்கள்

உன் வாழ்க்கை பற்றியே

உளறும் தலைவர்கள் ஆயிரம்

 

ஆண்டுகள் பல ஓடியும்

ஆண்டவர் பலர் மாறியும்

அடுக்களைப் போராட்டம்

அடங்கவில்லை உன் வாழ்வினில்

 

போகட்டும் விட்டுவிடு

பொறுத்திருந்து பார்த்து விடு

தோள்களின் சுமைகளோடு

தொடரட்டும் உன் சந்நதி

சுமைதாங்கும் இதயங்களோடு

 

ஏனேன்றால்….

உன் தோள்கள் சுமக்கும் சுமைகள்

இருதயத்தின் கனமான ராகங்கள்

அரசியல் தலைவர்கள் வெற்றிக்கு

வித்திடும் விதைகளாகின்றன

 

அன்புடன்

சக்தி

30.12.2008

—————————————————————————-

1 Comment, Join in »