நண்பனுக்கு ஒரு மடல்

on September 25th, 2008 by sakthi

நண்பனுக்கு ஒரு மடல்

அன்பு நண்பா !

ஆசையென்னும் அலையினிலே
ஆடி ஆடி காத தூரம் கடந்து
அனுபவம் தனைத் திரட்டி
அடுத்த கரையை நெருங்குகிறோம்

கடந்து வந்த பாதையில் கண்ட
கனத்த நினைவுகள் நெஞ்சை அமுக்குகின்றன
களிப்போடு நீயும் நானும் சேர்ந்து
கழித்த நாட்களின் நினைவுகள் தான்
களிம்பாய் மாறி காக்கின்றன

இளமையில் கல்வி கல்லில் எழுத்து
இயம்பினர் எமது முன்னோர்கள்
இளமையின் நட்பு இறுதிவரைக்கும்
இயம்புது உந்தன் நினைவுகள்

எக்கத்தின் வாசலிலே காத்திருக்கும்
ஏதுமற்ற மக்கள் படும் துயரம்
எமது நெஞ்சை அன்றே தாக்கிற்று
ஏனோ அவர்கள் இன்னும் அதே வாசலிலே !

வாழ்க்கையெல்லாம் ஓடி ஓடி
வந்தத்தைத் தேடித் தேடி
வாடி நாமும் வாழ்ந்து இன்று
வசதி என்னும் கரையில் ஓரடி
வைப்பதற்குள் எத்தனை இடர்கள்

கண்களிலே கண்ணீர் காய்ந்து
கோடிட்ட பொழுதுகளை யார்தான்
கண்டிட்டார் புவியினிலே; எம் நிலையும்
தண்ணீரிலே அழுத மீனைப் போலவே

உள்ளத்தின் ஓரத்தில் உராய்கின்ற
உறவுகள் கொடுத்த உறுத்தல்கள்
உண்மையின் உறக்கத்தால் ஏனோ
உள்ளேயே புதைந்து போகின்றன

எது வந்த போதிலும் என்னோடு
எப்போதும் கைகோர்த்து உன் நினைவுகள்
எனைக்காக்கும் கவசமாய் நண்பனே
அது போதும் ! அது போதும் !

அன்புடன்
சக்தி
——————————————————————————

அன்பு நண்பா !

உள்ளம் துடிக்கிறதே !
உணர்வுகள் கிளர்கின்றனவே !
உன் நினைவுகள் என்னை
உறக்கத்தினிறும் உலுப்புகின்றனவே !

என்னை நான் தொலைக்கும்
எண்ணற்ற பொழுதுகளில்
எண்ணச் சுழற்சிக்குள்
எப்படியோ நீ சிக்கிக்கொள்கிறாய்

நானென்றும் நீயென்றும்
சந்தித்த பொழுதொன்றில்
நட்பென்னும் அன்புப்பிணைப்பு
நாமென்று எமை மாற்றிய பொழுது….

கனமான எண்ணச் சுமைகளை
கணமொன்றில் இறக்கி வைத்திடும்
கனிவான பொழுதுகள் பல இன்றும்
காலச்சுவடுகளில் காட்சியாய் துலங்குகின்றன

ஏனென்று கேட்காமல் நாமன்று
ஆமென்று சொல்லிடுவோம் அறிவாயா ?
அப்பொழுது நாம் கொண்ட ஆயுதம்
அசையாத நம்பிக்கை ஒன்றேதான்

நெஞ்சத்து உணர்வுகளின் ஓசைகளை
மஞ்சத்தில் காணுகின்ற கனவுகளை
கிஞ்சிற்றும் அஞ்சாமல் பகிர்ந்திடுவோம்
சிந்தித்து பார்க்கையிலே இனிக்குதடா

இன்றுன்னைத் தேடுகிறேன்
இதயத்துள் வாடுகிறேன்
இனிப்பான பொழுதுகளை
இளமையுடன் தொலைத்திட்டேன்

அன்புடன்
சக்தி

20.10.2008
——————————————————————————

 

நண்பனுக்கு ஒரு மடல்

 

 

அன்பு நண்பா !

 

காற்றிலேறிப் பறப்பதுபோல்

காலமதுவும் பறந்ததுவே

நேற்று நடந்த நிகழ்வுகள் போல்

நேசம் நெஞ்சில் புரள்கிறது

 

பாசம் என்னும் சொல்லுக்கு

பாரில் இன்று அர்த்தம் என்ன

தேடித் தேடிக் களைத்து இன்று

தோற்றுவிட்டேன் நண்பனே !

 

அன்னை, தந்தை உறவுகளை

இழந்த பின்பு அனாதைதான்

இருக்கும் மிச்ச உறவுகளின்

இதயங்களும் கருமைதான்

 

நானும் நீயும் கண்ட உலகம்

நம்முடனே மறைந்ததடா

நட்பு தரும் நிம்மதி

நாலு சொந்தம் தருவதில்லை

 

இல்லாததைத் துரத்தியே இவர்கள்

இருப்பதெல்லாம் இழக்கின்றார்

இரக்கம் தனைக் கடைகளிலே

இறாத்தல் கணக்காய் விற்கின்றார்

 

தினசரி தாள்களிலே நானின்று

தினம்தோறும் படிக்கும் செய்திகள்

திகிலாக இருக்குதடா ஏனோ

திரைக்காட்சி வாழ்க்கையடா

 

போதும் போதும் என்றே மனமும்

பொறுக்காமல் பதைக்குதடா

பேராசை மனிதர்களி எம்மை

பெருமளவில் சுற்றுகின்றார்

 

நீயும் பாவம் என்ன செய்வாய்

நான் வார்க்கும் துயரையெல்லாம்

உன்னெஞ்சில் ஏந்துகிறாய்

உனை நீயே தேற்றுகிறாய்

 

காலங்கள் மாறுமென்ற வெறும்

கனவுடனே வாழுகிறோம்

காணுகின்ற பொழுதில் மட்டும்

கைதாங்கி தூக்குகின்றோம்

 

பதில் வேண்டாம் நண்பனே

பரிபாஷை ஒன்று போதும்

உனை நானும் எனை நீயும்

உணர்ந்துள்ளோம் அதுவே போதும்

 

அன்புடன்

சக்தி

 

 

1 Comment, Join in »