Subscribe to RSS Feed

மனதோடுதான் நான் பேசுவேன்

on February 29th, 2016 by sakthi

மனதோடுதான் நான் பேசுவேன்

நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் மனதோடு பேச விழைகிறேன்

தாயின் வயிற்றில் கருவாய் முகிழ்த்து பத்து மாதங்களில் புவியில் ஜனனிக்கிறோம். அந்த ஜனனத்தின் முடிவு மட்டும் தெரியாமல் வாழ்கிறோம். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏதோ எம் வாழ்வு என்றுமே நிலைத்திருக்கும் ஒரு நம்பிக்கையில் வாழ்வது போல வாழத் தலைப்பட்டு விடுகிறோம். இதுதான் சராசரி மனிதனின் வாழ்க்கை,

இவ்வாழ்க்கையில் எம்முள் பல தேடல்கள் எழுந்தாலும் அவற்றின் யதார்த்தங்களை பல சமயங்களில் மூடிவைத்து வாழ முயற்சிக்கிறோம். ஏனெனில் அதற்காக நாம் காணப்போகும் விடை எமது உள்ளத்தை வேதனைப்படுத்தும் எனும் காரணத்தினால். ஆமாம் உண்மை, உண்மை என்று பேசும் நாம் பல சமயங்களில் அவ்வுண்மை எமது உள்ளத்தைக் காயப்படுத்தி விடக்கூடியது என்றால் அதை மெதுவாக ஒதுக்கி வைத்து வாழ்வதை விவேகம் என்று எடுத்துக்கொள்கிறோம்.

இதற்கு நான் ஏதோ விதி விலக்கானவன் அல்ல. எனது வாழ்வின் அனுபவத்தின் அடித்தளமே எனது மனதில் எழுந்த இச்சிந்தனைகளுக்கு காரணமாகிறது. வாலிப வயதின் முறுக்குத் தளர்ந்து வயோதிப வாசலுக்குள் நுழைந்து விட்ட எனக்கு நான் வாலிப வயதில் வாழ்ந்த வாழ்க்கையின் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கும் அவகாசம் கிடைத்திருக்கிறது.

உண்மைகௐள் முன்னால் ஆகாசமளவிற்கு விரிந்து கிடந்தாலும் அதன் ஏற்பினால் எங்கே எனது நிலையில் ஏதாவது மாற்றம் வந்து விடுமோ எனும் காரணத்தினால் அதை உதாசினாப்படுத்தி நடந்துகொள்ளும் நிலைகளைக் கடந்து வந்த அனுபவங்கள் நெஞ்சில் அலை அலையாய் அடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரபஞ்சத்தின் காலவோட்டத்தின் முன்னே எமது வாழ்வின் நீளம் நீர்க்குமிழி போன்றதே எனும் எண்ணம் உள்ளத்தில் இருந்து மறைந்து விடுகிறது. கண்முன்னே காணும் மாயத்திரையில் அரங்கேறும் நாடகங்கள் நிஜத்தோற்றம் அளித்து மனதில் நீங்காத வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன.

நான் எனும் அகந்தை உள்ளத்தில் உண்மை ஏற்படுத்தும் தாக்கங்களை உருக்குலைத்து விடுகின்றது.

இராமாயணத்தில் படித்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. மகாபாரத யுத்தம் முடிந்து விடுகிறது. பாண்டவர்கள் அரியணை ஏறிவிடுகிறார்கள்.

அப்போது ஒருவரால் கிருஷ்ண பகவானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம்.

“கிருஷ்ணா நீ பாண்டவர்கள் மீது அதீத அன்பு கொண்டவன் அது மட்டுமின்றி உனது தங்கையை அர்ச்சுனனுக்கு மணம் செய்து கொடுத்திருக்கிறாய், அவர்கள் சூதாடி நாட்டை இழந்து காட்டில் அலைவதை அச்சூதாட்டத்தைத் தடுப்பதன் மூலம் உன்னால் தடுத்திருக்க முடியாதா ? “ என்பதே அக்கேள்வியாம்.

அதற்கு கிருஷ்ணரோ,

“சூதாடுவது அரசதர்மம், தருமன் சூதாடியதிஒல் தவறில்லை ஆனால் துரியோதனன் சூதாட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது தன் சார்பாக சகுனி ஆடுவான் என்று கூறினான் அதற்கு தருமன் தன் சார்பாக கிருஷ்ணன் ஆடுவான் என்று கூறாமல் “தான்” ஆடி வெற்றி பெறுவேன் என்று அகந்தை கொண்டான். அவர்களது அந்நில்லை அகந்தையின் காரணமே ! “ என்றாராம்.

உண்மைதான் எத்தனையோ அற்புதமான சந்தர்ப்பங்கள் அகந்தையினால் அகன்று போய்விடுகிறது. எம்மைவிட மற்றொருவரால் ஒரு காரியத்தைத் திறம்பட செய்ய முடியுமென்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதால் சில சமயங்களில் பெரிய சிக்கலுக்கு வித்திட்டு விடுகிறோம்.

“அறிவால் உணர்ந்து விடு இல்லையேல் அனுபவம் காட்டிவிடும் ” என்பார் கவியரசர் கண்ணதாசன்.

உள்ளத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டு அதனை ஒருநிலைப்படுத்தி இலட்சியத்தை நோக்கிப் பயணிப்பதற்கு முக்கியமான தேவை உண்மைகளை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமே ! நாம் ஏற்றுக்கொண்ட உண்மையை அப்படியே ஏற்றுக் கொண்டோம் என்பதனை வெளியே காட்டிக்கொள்ள விரும்பாவிட்டாலும் எம்முள் அதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது.

சத்தமாக எழும் மனதின் சுய அலசல்கள் மங்களின் சிந்தனைத்தூண்டுதலை உந்துகிறது.

மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

| Posted in கட்டுரை

Leave a Reply