Subscribe to RSS Feed

அஹிம்சை தேடி எண்ணங்கள் அலையும்

on February 17th, 2016 by sakthi

சித்தத்திலே தமிழ் ஊறும் – என்
சிந்தையிலே தேனூறும்
செந்தமிழின் வனப்பினிலே
செம்மொழியின் மணம் கமழும்

கவியாக்கும் கவிஞனல்ல –யான்
கற்றறிந்த அறிஞனல்ல
நெஞ்சிலெழும் மொழிக் காதலால்
சுரந்திடுமிந்த சொற்கூட்டல்

கவியரசன் பா கேட்டால் – நான்
கானகத்தில் தொலைந்திடுவேன்
மரபொன்றும் அறிந்திலேன்
மன உணர்வினை வடித்திடுவேன்

தமிழ் மணக்கும் மண்ணில் உதித்தேன் – நான்
தமிழன்னை மடியில் தவழ்ந்தேன்
தன்னை அன்று மறந்ததினால்
தாயகம் விட்டுப் புலம் பெயர்ந்தேன்

உள்ளத்திலே தோன்றுவதைத் தமிழாய் – நான்
உணர்வு கூட்டிச் சொல்லிடுவேன்
தமிழறிஞர் உலகில் என்றும் பூஜ்ஜியம் – அந்தப்
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் இருப்பதைப்
பூடகமாய் சொன்ன கவியரசன் சிஷ்யன்

தமிழ், தமிழ் என்று உள்ளம் கூவும் – அங்கே
அன்பு, அன்பு என்றே நெஞ்சம் பாடும்
அமைதி, அமைதி என்று உலகை வேண்டும்
அஹிம்சை தேடி எண்ணங்கள் அலையும்

சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

Leave a Reply