Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on February 12th, 2016 by sakthi

அன்பு நண்பா ?

நலமா ? என்றே
நான் கேட்கும் நேரம்
நலமே ! என்றே நீ
கூற வேண்டும்

மடலுக்கு மடல்
மாதங்கள் பலவாயின
வாழ்வென்னும் படகின்
தளராத பயணம்
பாதையில் மட்டும்
பல்வேறு மாற்றங்கள்

நீயென்றும்
நானென்றும்
நாமன்று வாழ்ந்த
அற்புதக் காலங்கள்

கலைந்து விட்ட
மேகங்களாய் . . . .
மறைந்து விட்ட
மாயங்கள் !

வேஷங்களை மாற்றினோம்
மேடை மட்டும் ஒன்றுதான்
நாடகத்தின் கதாசிரியனோ
கண்ணுக்கெட்டா தொலைவினில்

காட்சிகள் மாறுவதையும்
காணமுடியா தூரத்தில் . . . .
ஆடுகின்றோம் பொம்மைகளாய்
ஆட்டுவிப்போன் சிரிக்கின்றான்

தோற்று விட்ட ஞானங்கள்
போதித்த பாடங்கள்
தோற்காத உண்மைகளை
எழுதிவைத்த நேரங்கள்

விழுந்து விட்ட போதிலும்
எழுந்து நிற்கும் விந்தைகள்
விழுத்தி விட்டோம் என்றவர்கள்
வியந்து நிற்கும் காட்சிகள்

இதுதானோ வாழ்க்கை என்று
நீயும் நானும் நகைக்கின்றோம்
அத்தனையும் பார்த்ததினால்
அனுபவத்தை ரசிக்கின்றோம்

பொழுதொன்று சாய்வதினால்
இத்தோடு முடிக்கின்றேன்
பதிலொன்று கண்ட பின்னால்
மடல் மீண்டும் வரைகின்றேன்

அன்பு நண்பன்
சக்தி சக்திதாசன்

| Posted in Uncategorized

Leave a Reply