Subscribe to RSS Feed

இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்

on April 21st, 2015 by sakthi

இனியதொரு காலையில்
இன்பமுறு வேளையில்
இதயமெனும் சுனையில்
ஊற்றெடுக்கும் ராகமிது

இயற்கையீந்த வரமாம்
இனிமையான அகிலமதில்
தந்தை விதைத்த விதையில்
தாயின் கருவில் செடியாய்

முகிழ்த்து நாமும் வளர்ந்து
முழுமரமாய் விரிந்தோம்
முத்தமிழின் சுவையறிந்து
மூழ்கி அதில் முத்தெடுத்து

அழகியதொரு மாலையாய்
ஆக்கியிங்கு மகிழ்ந்திருந்தோம்
அன்னைத்தமிழின் செழிப்பினிலே
அழிந்தது அனைத்துத் துயரும்

இல்லையென்ற சொல்லெதற்கு
இயற்கையெனும் இல்லமதில்
இருப்பதெல்லாம் அமைதியெனில்
இல்லை ஒரு துன்பமென்பேன்

தவழுகின்ற தென்றலோடு
தத்திச் செல்லும் மேகம் கண்டு
கூவும் அந்தக் குயிலின் இசையில்
கூட்டுகின்ற கானம் இனிக்கும்

நேற்றைகளில் பூத்த ஞானம்
இன்றைகளின் நாரில் தொடுத்த
நாளைகளின் மாலைகளாக
நம்மிடையே கமழும் சுகந்தம்

இதயம் எனும் வீணை தனில்
இன்பமெனும் ராகம் கூட்டி
இசைக்கின்றேன் ஆனந்தலகரி
இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்

சக்தி சக்திதாசன்

| Posted in Uncategorized

2 Responses to “இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்”

  1. K.S.Nagarajan.
    May 15th, 2015 at 12:12 am

    Yes I have large in put to a right Sakthi kavithaiyai vatikkave patikkave.

    Anputan Nagaraja Chithappa.
    Chennai.

  2. K.S.Nagarajan.
    July 31st, 2015 at 9:15 pm

    சிவானந்தலஹரியில் சங்கரர் உணர்த்தும் கருத்து ஓ சிவனே நீயோ பிச்சை ஓட்டுடன் அலைகிறாய். அலை பாயும் என் மனமெனும் குரங்கு உன்னை பற்றி கொள்ளாமல் கிளை கிளையாய் தாவி தாவி செல்கிறது. என் மனமெனும் குரங்கு தன் தாய் குரங்கை இருக பற்றி, தாய் குரங்கு கிளைக்கு கிளை, மரத்துக்கு மரம் தாவி தாவி பாய்ந்தாலும் குட்டி தாயின் பால் (ஓ சிவனே உன் பால்) தன் பற்றை தளராது பற்றும் நிலை பெற மறுக்கிறது என் மனமெனும் குரங்கை, புலியும், பூனையும் தன் குட்டியை பல் படாது வாயில் கவ்வி தாவி தாவி பாய்வது போல் ஓ சிவனே உன் கையில் பிடித்து கொண்டு போவாயானால் அன் மனமும் உன்னிடம் அடங்கும், ஓ சிவனே உனக்கும் பிச்சை சற்று அதிகம் கிடைக்குமே. என ஆதி சங்கரர் சிவானந்த லஹரியில் சிவன்பால் நாம் கொள்ளவேண்டிய லாஹிரி வஸ்துவை வைக்கிறார்.

    தங்களின் லாஹிரி எனும் ஒரு வார்த்தை என்னை சிந்திக்க வைத்தது சிவானந்தலாஹிரி பற்றி இனிய காலை பொழுதினிலே!

    அன்புடன் நாகராஜ சித்தப்பா.

Leave a Reply