Subscribe to RSS Feed

மனதோடுதான் நான் பேசுவேன் . . .

on March 30th, 2015 by sakthi

வாழ்க்கை எனும் இந்த வலையினுள் விழுந்த நாமனைவரும் அவ்வலையிலிருந்து வெளியேறும் ஓர் இலக்கை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறோம் .

ஆயினும் நாம் அவ்வலையினுள் விழுந்ததிலிருந்து அதிலிருந்து வெளியேறும் நாள் வரை நாம் எமக்கு என பல பாத்திரங்களை வகுத்து அவற்றை உலகமேடையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். .

நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்நாடகம் அரங்கேறியபடிதான் இருக்கிறது ஆனால் நாம் மனமிசைந்து நடித்தால் அவ்வலிக்குள் நாம் கழிக்கும் காலங்கள் மிகவும் மகிழ்வாக முடியக்கூடியதாக இருக்கும்.

சிக்கல்கள் இல்லா வாழ்க்கை மனிதருக்கு அமைந்து விடுவது இல்லை. பின் எப்படி சிலர் மட்டும் எமது பார்வையில் சிக்கல்களே இல்லாமல் வாழ்ந்து விடுவது போலத் தென்படுகிறார்கள் ?

அதைத்தான் பாரதி சொன்ன “காட்சிப் பிழை” என்று கொள்ள வேண்டும். தமக்கு முன்னால் விழும் சிக்கல்களின் முடிச்சை அவிழ்ப்பதையே ஒரு சவாலாக எடுத்து அதில் வெற்றி காணுவதை மகிழ்வாக எண்ணுவோர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வது போலத்தான் தென்படும்.

அதற்காக அவர்கள் வாழ்வில் எதுவித சிக்கல்களுமே இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது .

எதனை வாழ்வில் மிகப்பெரிதாக நினைக்கிறோமோ அதைவிடப் பெரிய விடயத்தை எதிர்கொள்ளும் போது முந்தையது அதன் முன்னால் மிகச் சிறிதாகி விடுகிறது.

ப்பூ ! இதென்ன பிரமாதம் என்று எண்ணத் தோன்றுகிறது.

எனக்கித் தெரிந்த நண்பர் ஒருவர் தான் வெளிநாடு வந்து விட்டு தனும் தன்னுடைய குடும்பத்தினரும் ஒன்றாக ஏதாவது வெளிநாட்டில் வாழ வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளை எடுத்தார்.

அம்முயற்சிகள் ஏறத்தாழ நான்கு தடவைகள் தோல்வியுற்றன அவருக்கு பணச்சிக்கல் ஏற்பட்டது.

கலங்கவில்லை. முகத்தில் புன்னகை மாறாமலே காட்சியளித்தார். தன்னுடைய முயற்சிகளை மீண்டும் தீவிரமாக்கினார். முன்னைய விடக் கடினமாக உழைத்து மீண்டும் முயற்சிப்பதற்கு ஏற்ற நிதிகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் முயன்றார்.

என்னே ஆச்சரியம் தனது முயற்சியில் வெற்றி கண்டு. வெளிநாடொன்றில் தன்னோடு தன் குடும்பத்தினரையும் இணத்து புது வாழ்வைத் தொடங்கினார்.

ஏன் அங்கு கூட ” எனக்கு அதிர்ஷ்டம் இல்லை ” என்று அவரை விட நல்ல நிலையில் இருந்து கொண்டு முனகுவோர் மத்தியில் தானே தனது சொந்த வியாபாரத்தை நிறுவி தன்னுடைய குழந்தைகளுக்கு மேம்பட்ட கல்விச் செல்வத்தை அளித்து தனது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டார்.

அப்போதும் அவர் முகத்தில் அதே புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. தான் தன்னுடைய முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது தனக்கு இடையூறு செய்யாமல் ஒத்தாசையாக இருந்தவர்களை அவர் எப்போதும் மறந்ததில்லை.

இது நடந்து ஏறத்தாழ ஒரு முபது வருடங்கள் இருக்கும். இன்றும் அப்போது நான் அவருக்கு ஏதோ சில சிறு உதவிகளைச் செய்தேன் என்பதற்காக என்னுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்.

எதற்காக இதனைக் கூறுகிறேன் என்றால் வாழ்க்கையில் சலிப்பு எனும் குதிரையில்; நாம் சவாரி செய்யக்கூடாது . முயற்சி எனும் குதிரையைத் தெரி செய்து அதனை உழைப்பு எனும் கடிவாளத்தினூடு செலுத்த வேண்டும். ஆனால் நாம் பயணிக்கும் அந்தப்பயணத்தில் எம்முன்னே எதிர்ப்படும் தருணங்களில் உள்ள நல்லவற்றை ரசித்து மகிழும் மனப்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் காலங்கடந்து உணர்ந்து கொண்ட ஒரு முட்டாள் நான் எனும் யோக்கிதையின் அடிப்படையிலேயே உங்களுடன் மனந்திறக்கிறேன்.

எப்படியும் வாழலாம் என்பது ஒரு அந்தம், இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மறு அந்தம். இரு அந்தங்களிலும் வாழும் வாழ்க்கை மிகவும் சிக்கலானது. ஆனால் இதன் இரண்டுக்குமிடையே எமக்குகந்த கலவையில் வாழ்வை வாழப்பழகிக் கொள்வதே எமது அறிவின் அடையாளம்

எமது முதுகில் இருக்கும் அழுக்கு என்றுமே எமது கண்களுக்குப் புலப்படுவதில்லை ஆனால் அடுத்தவரின் அழுக்குகளைக் கண்டுபிடிப்பதில் நாம் வல்லவர்களாகி விடுகிறோம்.

மனித வாழ்வு என்பது மிருகத்திர்கும், தெய்வத்திற்கும் இடைப்பட்டதாகும். நாம் மிருகமாக மாறுவது சுலபம் ஆனால் தெய்வமாக மாறுவது முடியாத காரியம்.

வாழ்வின் போக்கு மிருகப்பாதையிலிருந்து தெய்வப்பாதையை நோக்கிய பயணமாக இருப்பின் அதுவே நாம் வாழ்வில் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டோம் என்பதன் அறிகுறி.

வாழ்க்கை அனுபவிக்கப்பட வேண்டியது, ஆனந்தப்பட வேண்டியது , ஆராதிக்கப் பட வேண்டியது. ஆனால் எனது அனுபவிப்புக்கள் , ஆனந்தம் , ஆராதிப்பு அனைத்துமே மனிதம் எனும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் வாழப் பழகிக் கொள்வதே சரியான வாழ்க்கை நெறியாகும்.

எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களின் கனத்தைப் புரியாமல் கைநழுவ விட்ட அனுபவங்கள் பலவுண்டு .
ஆனால் வாழ்க்கைப் பாதையில் என்னை விட்டு வெகுதூரம் போன பின் தான் அதனை அடையாளம் காணக்கூடிய அளைவில் அறிவுமுதிர்ச்சி அற்ற நிலையிலிருந்தேன்.

இப்போ மட்டும் என்ன , அறிவு முதிர்ந்து விட்டதா ? இல்லையே ! ஆனால் அதனை நோக்கிய ஒரு பயணத்தில் பல உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெளிவாகின்றன.

அத்தெளிந்த உண்மைகளை என் அனு உள்ளங்களுடன் பகிர்ந்து கொண்டே பயணிப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது.

மீண்டும் பேசுவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

| Posted in Uncategorized

Leave a Reply