Subscribe to RSS Feed

தேடுகின்ற பதில் எங்கே ?

on April 1st, 2014 by sakthi

அந்தநாளின் ஞாபகங்கள்

ஆழமாக அடிமனதில்

ஆனந்த அனுபவங்கள்

அந்தரங்க சிலிர்ப்புகள்

உனக்குள்ளும் எனக்குள்ளும்

உறைந்திருக்கும் உணர்வுகள்

உடல் தளர்ந்து போயினும்

உலுக்குகின்ற சில கணங்கள்

என் பார்வையின் வினாக்களுக்கு

உன் பார்வையில் விடைகளோ ?

விளக்கமில்லா உறவது அப்போ

விவேகமில்லா வயதெமக்கு

கல்லிலே வரைவதெல்லாம்

காலமெலாம் சிற்பமாய் வாழ்வதுண்டு

கண்ணிலே வரைவதெல்லாம் ஏனோ

கண்ணீராய்க் கரைவதுண்டு

காளையந்த வயதினிலே

காதலென்னும் கோரிக்கை

களைத்துப் போன முதுமையிலோ

கேட்பதுந்தன் நட்புத் தானே

தோழியடி நீ எனக்கு இன்று

தோற்காத அன்பிருக்கு

தேடிக் கொண்ட அனுபவங்கள்

தேடுகின்ற பதில் எங்கே ?

சக்தி சக்திதாசன்

| Posted in Uncategorized

Leave a Reply