Subscribe to RSS Feed

நிறைகுடமென நிலைத்திடும் உன் வாழ்க்கை

on April 11th, 2013 by sakthi

நெஞ்சினில் ஆசையை வளர்த்து

நேசத்தின் ஆழத்தில் புதைந்து

நிஜத்தின் நீளத்தை மறந்த

நங்கையே இதைக் கேளாய்

உள்ளத்தைக் கொடுத்து மறு

உள்ளத்தை வாங்கிடும் உறவே

உண்மைக் காதல் உணர்ந்திடுவாய்

உலகின் நிகழ்வுகளை அறிந்திடுவாய்

இளமையின் வேகத்தின் சுழற்சியில்

இளைஞர்கள் செப்பிடும் மொழிகளில்

இதயத்தை இழந்திட்ட பின்னால்

இழப்பின் மிஞ்சுவது வலியே !

ஒட்டிப் பிறந்த உறவுகளும உன்னை

ஒப்பிலாப் பெண்ணாக்கிய தாயவளும்

ஒப்பற்ற மகிழ்வினை டைந்திடும் வகையில்

ஒருத்தியாய் உயர்ந்திட உழைத்திடுவாய்

அழியாக் காதல் உன்னது என்றால்

அழுத்தமான மனதை உடையவனே உன்

அன்புக்குரியவன் என்றிருந்தால் பெண்ணே

அசையாது நிற்பான் தன் கருத்தினில்

பாவிகள் நிறைந்த உலகம் அம்மா நானும்

பார்த்து விட்டேன் பாரினில் பசப்புகளை

பகட்டினில் நீயும் மனதினைப் பாவம்

பறிகொடுத்துத் தவித்திடாதே

காதல் மகத்தானது தான் நானறிவேன் அதைக்

கையாளுவோர் மனைதாபிமானம் கொண்டவரானால்

காதலை வெறும் பொழுது போக்காய் நோக்கும்

காளையரும் உலகில் வலம் வருகின்றார்

கண்களைத் துடைத்து விடு கண்மணியே

கருத்தினில் உறுதி பூண்டிடு நெஞ்சில்

கொண்டவன் கோழைதானென்றால் நீயும்

களைந்திடு அவன் எண்ணங்களை

நாளை உனக்காய் விடிந்திடும் அம்மா

நலமாய் நீயும் வாழ்ந்திட வென்றே

நிறைந்திட்ட சொந்தங்கள் வாழ்த்திடும் உன்னை

நிறைகுடமென நிலைத்திடும் உன் வாழ்க்கை

சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

Leave a Reply