Subscribe to RSS Feed

தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள்

on April 6th, 2013 by sakthi

வானகத்தின் மேனியிலே நட்சத்திரங்கள்
வீற்றிருக்கும் வண்ண விளக்குகளாய்
கானகத்தின் மரத்திலெல்லாம் ஆடி நிற்கும்
காற்றிலந்த பச்சை இளந்தளிர்கள்

தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள்
தொலைவில் போகும் ஊர்கோலங்கள்
பட்டுவிடச் சிலிர்க்கும் இளந் தென்றல்
பட்டுடலை மெல்ல வருடிச் செல்லும்

சொட்டுகின்ற பனித்துகள்கள் ஒளியில்
சொக்கி மிளிரும் ஒளிர் பொன் துகளாய்
மீடும் அந்த பறவைகள் கானங்களை
மிதக்க வைக்குமெமை வான் வெளியில்

பூட்டி வைத்த கற்பனைத் தேர் தானாக
பூட்டுடைத்து பவனி வரும் வானுலகில்
ஏட்டிலொரு கவி படைக்க எனக்கிங்கே
எழில்மிகு பசுந்தரை விரிந்தது கம்பளமாய்

செம்மொழி தொடுத்தொரு கவிமாலை பின்ன
செந்தமிழ்த்தேன் நெஞ்சில் சுரந்தே இனித்தது
செந்துரம் ஜொலித்திருக்க என் தமிழன்னை
செழிப்புடனே சிரித்து எனை வாழ்த்திட்டாள்

சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

Leave a Reply