Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on April 6th, 2013 by sakthi

அன்பு நண்பா !

நலமோடிருப்பாய் என
நானும் நயமான
நம்பிக்கையுடனே வரைகின்றேன்
நட்பு மடலை உனக்கே

நானிலத்தில் தினமும்
நான் காணும் காட்சிகள்
சோதனைக்குள் உள்ளத்தை
சேர்த்து விடுகின்ற நிலை தன்னை
சிறிதாகப் பகரவென்றே
சிறியேனின் இக்கடிதம்

எத்தனை நிறங்கள் நண்பா ?
தோட்டத்து மலர்களிலே !
எத்தனை விதம் நண்பா
பூவுலக மாந்தர் தம்முள்

நெஞ்சொன்று நினைத்திருக்க
வாயொன்று பகர்ந்திருக்க
கையொன்று புரிந்திருக்க
தான் பெரியோன் என நினைந்து

உதாசீனம் செய்கின்றார் அவரும்
உண்மையான உள்ளம் கொண்டோரை
உதடுகளின் விரிப்புகள் அவை வெறும்
உணர்வற்ற போலிப் புன்னகைகள்

நாளும் தம் தோள் வலிக்க
நலிந்தே உழைத்திடும் தோழனவன்
நிம்மதியற்ற வாழ்வதைப் பார்த்தும்
நிம்மதியாகத் தூங்குகிறார்

கை நிறையப் பணம் கொண்டு
கண் நிறையப் பேராசை கொண்டு
ஆலயங்கள் தோறும் தேடுகின்றார்
ஆண்டவனின் அருள் தன்னை

நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில் எனும்
நல்ல பல கருத்துக்களை அவரும்
நினைவில் கூட நிறுத்த மாட்டார்

ஆன்மீகப் பாதைதனில்
ஆண்டவனின் பார்வைதனில்
அனைத்து மக்களும் , அனைத்து மதங்களும்
அளிக்கும் செய்தி ஒன்றுதான் அறியார் அவரே !

சிரித்து வாழ்வது அவசியம் ஆனால் பிறர்
சிரிக்க வாழ்வது அநாகரீகம்
உழைத்து வாழ்வது உத்தமம் பிறர்
உழைப்பில் வாழ்வது அதர்மம்
உண்மை வாழ்வின் தத்துவம் இதுவே
உலகில் எனும் உண்மையும் அறியார்

காதலித்து வாழ்வது அவசியம் ஆனால்
காமமுற்று வாழ்வது மூர்க்கத்தனம்
அழகை ரசித்து ஆராதிப்பது மனிதம் ஆனால்
அதனை விரசமாய் விபரித்து மகிழ்வது மிருகத்தனம்

எத்தனை புதிர்கல் உலகட்ய்ஹ்திலே நண்பா
அதனை இலக்கிய இரசனையுடன் ஏற்று
அகிலத்தின் ஏற்றத்துக்காய் உழைப்பது ஒன்றே
அழைப்பாஉ இளையோருக்கு விடுப்பதை மறப்பார்

மனதை உலுப்பிய மனிதரின் நிறங்களை
மனம் நிறைந்த நண்பன் உன்னுடன்
மனந்திறந்து பகிர்ந்து கொண்டேன்
மனமுவந்த நன்றிகள் அன்பு நண்பா

மடலுக்கு பதில் கண்டு நானும்
மறுமடல் வரகின்றேன் நண்பா
அதுவரை விடை கொடு

அன்பு நண்பன்
சக்தி சக்திதாசன்

| Posted in நண்பனுக்கு ஒரு மடல்

Leave a Reply