Subscribe to RSS Feed

வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

on March 7th, 2013 by sakthi

sn_120509135153000000

சிந்தனை செய்யுங்கள் தோழர்களே
சித்தத்தில் உண்மையைக் காணுங்கள்
மாதர் தம் பெருமைகளை உணர்ந்து
மகளிர்க்கோர் தினத்தைக் கொடுத்து

அன்னையாய் ஒரு வடிவம் கொண்டு
அன்பை எமக்கு பாலோடு ஊட்டியவள்
சகோதரியராய் உடன்பிறந்து அணைத்து
சாத்திரங்கள் பலவும் ஓதியவள்

காதலியாய் கண்களிலே புகுந்து எமை
கைபிடித்து மனையாளாய் மகிழ்விப்பாள்
எத்தனை வடிவங்கள் எடுத்திடும் மாதர்களை
ஏற்றி நாமும் போற்ருவதற்கு ஒருநாள்

அன்றொருநாள் எம் பாட்டன் பாரதியும்
அநீதி கண்டு ஆர்ப்பரித்து எழுந்திட்டான்
கொழுந்து விட்டெறியும் கவிதைகளால்
கொளுத்தினான் பெண்ணடிமைக் கருத்துக்களை

இன்றொரு புது யுகமாய் பிறந்திட்டு
இகத்தினிலே மகளீர் பலர் உயர்ந்திட்டார்
இருப்பினும் இன்னும் சில மனங்களில்
இருள் சூழ்ந்த எண்ணங்கள் உறையுது

ஆணுக்கு பெண் என்றும் சளைத்தவளல்ல
அவனியிலே நாமெல்லாம் சமனென்றே
அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுத்து
அர்ப்பணிப்போம் இந்நாளை மகளீர்க்காய்

புதுமைப் பெண்களாய் மிளிர்ந்திடும் தோழியரே
புதுமைகள் படைத்து நீரும் சிறந்திடவே
பூரிப்புடன் வாழ்த்துகிறேன் உமையெல்லாம்
புரட்சி மலர்களாய் பூமியிலே பூத்திடுவீர்

இந்நாளில் என்னெஞ்சக் கருத்தொன்றை
இயல்பாக உம்முடனே பகிர்ந்திடுவேன்
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் உலகில்
பண்போடு உயர்ந்திட்ட புரட்சிக் கண்கள்

புரியாத சிலபேர்கள் வாழும் வகை
புண்ணாகும் நெஞ்சம் அதைக் கண்டு கண்டு
அரைகுறை ஆடையல்ல அடையாளம்
அதுவல்ல புது உலக நாகரீகம்

நிலையான உள்லம் கொண்டு உலகில்
நீவீர் சமதளத்தில் ஆண்களோடு பணிபுரிந்து
மடந்தையர் என்பது அழகேயன்றி வெறும்
மடமையல்ல என்பதனை உணர்த்திடுவீர்

சர்வதேச மகளீர் தினத்திலின்று நானும்
சந்தோஷம் பொங்க நண்பனாக அண்ணனாக
தம்பியாக , தோழியரை, சகோதரியரை
தங்கமான வாழ்த்துகள் பொழிந்து வாழ்த்துகிறேன்

வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

அன்புடன்
சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

Leave a Reply