Subscribe to RSS Feed

கண்ணதாசன் கணங்கள்

on March 1st, 2013 by sakthi

index

கவியரசரின் பாடல்களைப் போல அவரது கவிதைகளும் எளிமையானவைகளே ! அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவியரசர் யாத்துத் தந்த கவிதைகள் பலநூறு.

நாத்திகத்தில் தொடங்கிய அவரது இலக்கியப் பயணம் ஆத்திகத்தில் வந்து முடிவுற்ற போது அவரின் மனதில் எழுந்த தாக்கங்கள் அவரின் இலக்கியப் பயணங்களாயின.

அவர் உலகைப் பார்த்த விதம், அவர் பார்த்த விதத்தில் உலகம் அவருக்குக் கொடுத்த அனுபவங்கள் இவைகளை அவரது மனமெனும் பெட்டகத்தினுள் சேகரித்து வைத்தார். காட்ச்சிகளுக்குப் பாடல்கள் எழுதும் போது இந்தப் பெட்டகத்தைத் திறந்து தானும் அந்த உணர்ச்சிகளினூடக ஊர்வலம் வந்தார். அந்த ஊர்வலத்தில் உதிர்ந்த உணர்வுகளை வரிகளாக்கினார்.

அது சாதாரண் மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது. அதுவே பட்டி தொட்டிகளிலெல்லாம் பட்டு இதயத்தின் ஓரங்களை வருடியது.

அவரோடு நான் ஜக்கியப்படும் கணங்கள் பல. அதுவும் குறிப்பாக அவரது கவிதைகள் என்னை எங்கெங்கோ கொண்டு சென்று விடுகின்றன.

இதோ அவற்றில் சிலவற்றோடு உங்கள் முன்னே நான்,

மகாகவி பாரதியினைப் போற்றி தனைப் பாரதிதாசனாக்கினார் சுப்புரத்தினம். அவர்கள் இருவருக்குமிடையே நிகழ்ந்த நெருக்கத்தை, ஒருவரோடு ஒருவருக்கிருந்த தொடர்பைத் துல்லியமாக, எளிமையாக இதைவிடச் சொல்ல வல்லார் யார் ?

நிலைகுலைந்திருந்த நெஞ்சினைத் தூக்கி

நில் எனச் சொன்ன வல்லோன் பாரதி

நிற்க வைத்த நெஞ்சினைத் தட்டி

நிலைக்க வைத்தவர் பாரதிதாசன்

ஒருவரோடு ஒருவரைப் பிணைத்து அவர்களின் தமிழ்ப்பற்றுக் கொடுத்த இலக்கிய உணர்வினை எத்தனை அழகாக எமக்கு விளக்கி விட்டிருக்கிறார் நம் கவியரசர்.

பெருந்தலைவர் காமராஜர் மீது அளவிளாத மரியாதை கொண்டிருந்தவர் கவியரசர். அதே போல கவியரசரின் குழந்தை மனதையும், அதி சிறந்த கவிதையாற்றலையும் கண்டு வியந்தவர் காமராஜர். அப்பெருந்தலைவரைப் பற்றி இப்பெருங்கவிஞனின் வரிகளைப் பார்ப்போமா ?

ஒருமனம்; ஒன்றே எண்ணம்

ஊருக்கே வாழ்ந்த வாழ்வு

திருமணம் அறியா தாகச்

சென்றதோர் அறுபதாண்டு;

பருவமும் காதல் இன்பப்

பாசமும் மறந்து நிற்கும்

ஒருவனைப் பெற்றதாலே

உயர்ந்ததே தமிழர் நாடு!

ஒரு உயர்ந்த தலைவனின் தன்னலமற்ற உன்னதமான நாட்டுக்களித்த சேவையை இதைத்தவிர எளிமையாகவும், இனிமையாகவும் அன்னைத் தமிழின் பெருமை பட யாரால் எடுத்தியம்பிவிட முடியும் ?

மனிதன் ஆசையின் உந்துதலினாலே பல முயற்சிகள் எடுக்கிறான். அதன் வழியிலே அவன் எடுக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் அதியுயர் அவடிவமாக அவன் அயுத வளர்ச்சிக்குள் விழுகிறான். மனிதனுடைய பேராசை அவனை அழிவு எனும் பள்ளத்தாக்கினுள் விழுத்தி விடும் என்பதனை எத்தனை துல்லியமாக கவிதயாக வடித்துத் தருகிறார் கவியரசர் பாருங்கள் ,

ஆசையின் வளர்ச்சி யாலே

ஆயுத வளர்ச்சி! அந்த

ஆயுதம் வளரும் போதே

அணுக்களின் கிளர்ச்சி! அந்த

அணுக்களின் கிளர்ச்சி இன்று

அழித்திடும் முயற்சி யாகித்

தனைக் கொலும் நிலைக்கு வந்த

தலைமுறைத் தம்பீ !

பேராசை பெரிய போர்களை உருவகித்து இந்த உலகத்தையே அழித்துவிடக்கூடிய ஒரு காலகட்டத்தில் நீ வாழுகிறாய் தம்பி என எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு அறைகூவலான எச்சரிக்கை விடுக்கிரார் எமது கவியரசர்.

தனது உள்ளாத்தின் சோகத்தை, தான் வாழ்வில் பட்ட துயரத்தின் எதிரொலியை எப்படி அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் இந்த வித்தகக் கவிஞர் பார்ப்போமா?

வானம் அழுவது மழையெனும் போது

வையம் அழுவது பனியெனும் போது

கானம் அழுவது கலையெனும் போது

கவிஞன் அழுவது கவிதையா காதோ?

என்னை அழவிடு ! என்னை அழவிடு !

அன்னை என்னை அழவே படைத்தாள்

உள்ளத்தின் சோகத்தை சொல்லுவதிலும் ஒரு கலைநயம் ஒரு கவிதைநயம் இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்தியம்பினார் எம் இனிய கவியரசர்.

ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். என் ஞானக்குருவிர்கு நான் தரும் குருதட்சணையாக அவரின் கணங்களை தமிழன்னை தந்த இனிய உறவுகளாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக எல்லாம் வல்ல அனைவர்க்கும் பொதுவான பரம்பொருளுக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

மீண்டும் வருவேன்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

27.02.2013

| Posted in கண்ணதாசனின் நினைவுகளில்

Leave a Reply