Subscribe to RSS Feed

ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும்

on August 24th, 2010 by sakthi

0060-0502-1819-3121

சிந்தனைசெய் மனமே !

செய்தால்தீவினை அகன்றிடுமே !

என்னும்ஒரு பாடலை எம்மில் அநேகம்பேர் கேட்டிருப்போம்.

இப்பாடலின் கருத்துக்கள்  இறையுணர்வையும்,ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டுஅமைக்கப்பட்ட பாடலாதலால் இறைநம்பிக்கை  அற்றோர் இதைக் கணக்கிலெடுக்கத் தயங்கக்கூடும்.

பாடலின் கருத்தையோ,அதுகூறும் சராம்சமான இறையுணர்வையோ தவிர்த்து நான் மேலே குறிப்பிட்ட இரு வரிகளை மட்டும் கவனத்திற் கொள்ளுங்கள்.

அவ்வரிகள் சொல்லும் கருத்து மிகவும் எளிமையாக  இருக்கிறது  அல்லவா?

சிந்தித்துச் செயலாற்றும் போது அச்செயலின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.

சிந்திக்கும் திறன் மனிதராகப் பிறந்த அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம்.எமது பின்புலங்களிலே “திண்ணைப்பேச்சு”என்றொரு பதம் உபயோகிக்கப்படுவதுண்டு. எதற்குமே உபயோகப்படாத பேச்சு என்பதே அப்பதத்தின் பொருளாகும்.

இரண்டுபேர் ஒரு திண்ணையில் உட்கார்ந்து மணிக்கணக்கில் “அதுஅப்படி இருந்தாலென்ன?இதுஇப்படி இருந்தாலென்ன? அவர்அப்படி இருந்தாலென்ன? இவர்இப்படி இருந்தாலென்ன?” என மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கலாம் ஆனால் அவற்றினால் எதுவிதப் பிரயோஜனமுமேயிருக்காது.

தம்மால் மாற்ற முடியாத,தம்மால் காரியம் ஆற்ற முடியாத தமக்கு அதிகாரமோ,பலமோ இல்லாத விடயங்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவது பெரும்பான்மையான நமக்கு கைவந்த கலை.

அதேசமயம் நம்மால் ஆற்றக்கூடிய,மாற்றக்கூடிய செயல்களைப் பற்றிப் பேசக்கூடத் தேவையில்லை ஒரு கண நேரம் சிந்தித்தோமேயானால் அதனால் எவ்வளவோ  பயனுண்டு.

அதை உடனடியாகச் செயலாக்குகிறோமோ இல்லையோ அதைச் செய்து முடிக்ககூடிய வல்லமை எம்மிடம் இருப்பதால் அந்தப் பாதையில் முதலடி வைக்கத் தொடங்கி விட்டோம் என்பதுவே அதன் பொருளாகி விடுகிறது.

அவசரத்தில் முடிவெடுக்கும் போது அம்முடிவின் விளைவுகள் எமக்குத் தீர்மானமாகத் தெரிவதில்லை அதனால் ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறோம் என்று  எண்ணி  மற்றொரு  சிக்கலை நாமாகவே  உருவாக்கி  விடுகிறோம்.

உண்மைகளை மற்றையோரிடம்,தேவையில்லை எம்மிடம்  ஒத்துக்  கொள்வதிலேயே எமக்கு    தயக்கம் இருக்கிறது.வான்கோழி ஒடிச் சென்று  தன் தலையை மணலுக்குள் புதைத்துக்  கொண்டு விட்டதும்  தன்னைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் விலகி விட்டதாக எண்ணுமாம்.

எமது செயற்பாடுகளும் சமயங்களில் இது போலவே அமைந்து விடுகிறது.

மறறவர்களுக்கு நன்மை செய்வதற்கு மட்டுமல்ல எமது நன்மைக்காகக் கூட எமது பழக்கவழக்கங்கள் சிலவற்றை மாற்ற  வேண்டி  இருக்கும்.அதைச் செய்வது எமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும்.இருப்பினும் அதை நிறைவேற்ற வலுவில்லாதவர்கள் போல பலவிதமான நொண்டிச்சாட்டுகளைக் கூறிக்  கொண்டு காலத்தைக் கடத்திக்  கொண்டிருப்போம்.

ஆனால் அதையே  நாம்  செயல்படுத்த  எண்ணி ஒரு கணம்  சிந்தித்தோமானால் அந்தச் செயல் நிகழ்ந்து விடநேரமே எடுக்காது.

உதாரணமாக இரத்த அழுத்தம்,கொழுப்புநோய்,சர்க்கரைவியாதி என்பனவற்றால் பீடிக்கப்பட்டிருப்போருக்கு டாக்டர் உங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்  கொள்ளுங்கள்.உணவு முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்,தேகப்பயிற்சி செய்யுங்கள் எனப் பல அறிவுரை அவர்களது  உடல் உபாதைகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கூறுவார்கள்.

அவையனைத்தையும் கட்டுப்படுத்துவது அவரவர் மனங்களிலேயே தங்கியுள்ளது.அதைச் செயலாக்கக்கூடிய வல்லமை அந்தந்த மனிதர்களின் வசத்திலேயே இருக்கிறது.ஆனால் அதிலே ஒன்றைக் கூட  செயலாக்க முடியாமல்  தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் எத்தனையோ மனிதர்களை  நான் நிஜவாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்.

டாக்டர் கொடுக்கும் அறிவுரைகளின் கனத்தை ஒரு கணம்,ஒரேயொரு கணம் சிந்தித்திருப்பார்களேயாயின் அடுத்த கணமே செயலாக்கும் மனவுறுதியைப்  பெற்றிருப்பார்கள்.

சிந்தனைக்கும்,செயலுக்கும்உள்ள  தொடர்பை விளக்க நான் மேலே குறிப்பிட்டது ஒரு மேலோட்டமான எளிமையான ஆனால் உண்மையான  விளக்கம்.

வெட்டிப்பேச்சு பேசுவதினால் எதுவித பயனும் இல்லை என்பது ஒருபுறமிருக்க அது மற்றைரையோரின் வாழ்வையே பாதிக்கக்கூடிய வகையிலும் சில சமயங்களில் அமைந்துவிடுகிறது.

வெட்டிப்பேச்சென்றால் என்ன? வெறுமையான பேச்சு,உண்மையில்லாத பேச்சு.அதை நிரூபிக்க ஆதாரம் எதுவுமில்லாமல் பேசப்படும் பேச்சு.பலர் பல சமயங்களில் வெட்டிப்பேச்சைஆணித்தரமாகப் பேசுவதின் மூலம் அதைக்  கேட்பவரின் மனங்களில் சந்தேகம் என்னும் விதைகளைத்  தூவி விடுகிறார்கள்.

ஒரு ஆண்,பெண்ணுடன் பேசிக்  கொண்டிருப்பதைக் கண்ட அவனின் நண்பன் தான் காணும் முதலாவது நண்பனிடம் “அவன் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன்”என்பான்.இது முதலாவது வெட்டிப் பேச்சு.

அதைக் கேட்டவனோ தான் காணும் முதல் நண்பனிடம் “அந்த முதல் மனிதன் ஒரு பெண்ணிடம் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தான் “என்பான்.இது இரண்டாவது சுற்று வெட்டிப்பேச்சு.

அந்த மூன்றாமவனோ தனது நண்பனிடம்,”அந்த முதல் மனிதன் தன் காதலியுடன்பேசிக்  கொண்டிருந்தான் “என்பான்.இது மூன்றாவது வெட்டிப்பேச்சு.

மூன்றாவது சுற்று வெட்டிப்பேச்சுடன் எதுவுமறியாத நல்ல இரு அப்பாவி நண்பர்களின் நடத்தையே கன்னாபின்னாவென விமர்சிக்கப்படுகிறது.

வெட்டிப்பேச்சின் வில்லங்கமே  இதுதான்.

முதல் மனிதன் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டவன்உடனடியாக ஒரு மணி நேர வெட்டிப்பேச்சில் ஈடுபட்டதை விட்டு ஒரு கண நேரம் சிந்திக்கத் தலைப்பட்டிருந்தால் அங்கே விவேகம்  வென்றிருக்கும்.

ஆங்கிலத்தில் ஒரு  வாசகம் உண்டு “குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும்வரை அனைவரும் சுற்றவாளிகளே “என்பதே அது.

யாரும் சிந்திக்காமலே எம்மைப் பற்றி அவதூறு கூறும்போது அவர்கள் மீது எமக்கு அளவு கடந்த ஆத்திரம் வருகிறது.ஆனால் அதே நாம் பிறரைப் பற்றிக் கூறும்போது சிந்திக்கத் தலைப்படுகிறோமா? என்பதுவேகேள்வி.

சிந்தனையின் பலத்தை,சிந்தனையின் வல்லமையை  நன்கு  உணர்ந்தவர்கள் கூட  அதைப் பல சமயங்களில் கடைப்பிடிக்கத்  தவறிவிடுகிறோம்.

எமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி மற்றொருவர் ஏதாவது புகழ்ந்தால் உடனடியாக தை எவ்வாறு மழுங்கடிப்பது என்றும், தாக்கினால் அதை எப்படி ஆதரிப்பது என்பதுமே மனிதரின் சராசரி குணங்களாகின்றன.இதற்கு நானொன்றும்  விதிவிலக்கானவன் அல்ல.

அனால் சிந்தனையின் பலத்தை,பாதிக்கப்பட்ட பலசமயங்களில்  நான் வலுவாகஉணர்ந்திருக்கிறேன்.சிந்திக்கும் நேரத்தை விட வெட்டிப்பேச்சுப் பேசும் நேரத்தை அதிகமாகக் கொண்ட ஒரு சூழலிலும் நான் வாழ்ந்திருக்கிறேன்.

காலங் கடந்து சிந்தனையின் ஆதிக்கம் மனதில் வலுப் பெற்றதினால்  கொஞ்சம் உரக்க  உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து  கொண்டேன்.

ஒரு மணி நேர வெட்டிப் பேச்சா ?அன்றி ஒரு  கண நேரச் சிந்தனையா ?

சக்தி சக்திதாசன்

| Posted in உன்னை ஒன்று கேட்பேன் ...., சொல்லத்தான் நினைக்கிறேன், நண்பனுக்கு ஒரு மடல், பிறமொழித் தழுவல்கள்

4 Responses to “ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும்”

 1. Vetha. Elangathilakam.
  April 10th, 2011 at 11:43 pm

  nal vaalthukal…

 2. rajaraja
  July 25th, 2011 at 8:58 am

  nalla sinthanai!

 3. Arthanari Ramasamy
  May 10th, 2012 at 10:56 am

  thinnai peachukku mulukku poda vaikkum sinthanai seithi., Nantri

 4. Uma S
  January 1st, 2013 at 11:07 am

  Villakathirku mikundha nandri.

Leave a Reply