Subscribe to RSS Feed

நண்பனே ! ஆருயிர் நண்பனே !

on August 3rd, 2010 by sakthi
உறவுகளே நேற்று 03.08 அன்று எனது ஆருயிர் நண்பன் ரவிக்கு பிறந்தநாள். ஈழத்தில் நான் இளம் வயதில் துள்ளித் திரிந்த நாள் கூடி எனக்குத் தோள்ள் கொடுத்த உற்ற நண்பன். நட்பு என்னும் உண்மையான பாசம் உதிரத்தின் உறவைக்கூட மிஞ்சக்கூடியது என்பதை எனக்கு உணர்த்திய அற்புத, அபரித நட்புக்கு உரியவன்.

எனது “”நண்பனுக்கு ஒரு மடல்”” என்னும் கவிதைகளில் பெரும்பான்மையானவை அவனுடன் சம்பாஷிப்பதைப் போன்ற ஒரு நினைவினிலே தான் வரையப்படுகின்றன.

இதோ அவனது பிறந்த நாளின் போது எனது நெஞ்சில் தெறித்த நினைவு மலர்களை மாலையாக்கி அவனுக்கு அன்பளிப்புச் செய்தேன். அதன் நகலை எனது இந்த அன்பு நண்பர், பாசக் குழுமத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புநிறை நண்பனே !

ரம்மியமான உனது நட்பை
ரசித்துக் கொண்டே இன்று
ரவி என் நண்பா
உனது பிறந்தநாளிற்கான எனது
ரஞ்சகமான வாழ்த்துக்கள்

அன்பு, பாசம், நேசம் என்ற
அடிப்படையில் கட்டி
அழகாய் எழுப்பிய எமது நட்பு
அழியாக் காவியமாய்
எம் நெஞ்சினிலே

எம்மிடம் எதுவுமே இல்லாத போது
எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
ஆலமர விருட்சமாய் எழுந்து
ஆட்கொண்ட நட்பல்லவோ இது

நிறைவேறா ஆசைகளை நெஞ்சில்
நிலைகொள்ள வைத்து தரையில் விழும்
நிழலைப் பிடிக்க விரைந்த ஒரு
வலிமையான வாலிப நாட்களது

என்னெஞ்சின் ஆசைச்சுமைகளை நண்பா
உன்னெஞ்சில் நானும்,
உன்னெஞ்சின் கனவுகளை
என்னெஞ்சில் நீயும்
ஏற்றி வைத்து
போற்றியிருந்த காலமடா
தோழா !

என் பசுமையான
நினைவுகளால்
உன் பாச நினைவுகளுக்குள்
விழுந்து
நீந்துகின்ற வேளையிது
இன்றுனக்கு
பிறந்தநாள்,
என் நெஞ்சினிக்கும் நாள்

நண்பரென்றால் இவர் போலன்றோ
என்று ஊர் வியக்க
நாமிருந்த நிலமையன்று
காலங்கள் ஓடின ; காட்சிகள் மாறின
நண்பனே உன் நெஞ்சும், என் நெஞ்சும்
மாறவேயில்லை !

காளயராய், கன்னியரின் பின்னே அன்று
களைத்து ஓடிய காலம் போய்
கைப்பிடித்த மனைவியுடன் கண்ணிறைந்த
குழந்தைச் செல்வங்களுடன் மீண்டும்
இனியதோர் களைப்பை இன்பமாய்
பகிர்ந்து கொள்ளும் வேளையிது

அன்பு மனமும், பணிவான குணமும்
நிறைந்த நட்பும் கொண்ட என் ஆருயிர் நண்பா
ரவீந்திரன் என்னும் ரம்பியமானவனே
வாழ்க ! வாழ்க ! உன் பிறந்தாளில்
அன்பும், இன்பமும் நிறைந்து பெற்று
நீடுழி….. நீடூழி…… வாழ்க

அன்புடன்
சக்தி சக்திதாசன்

| Posted in உள்ளத்தின் ஓசை, கவிதை

Leave a Reply