on July 25th, 2010 by sakthi
சிந்திடும் வியர்வையில் தோழா
சிதறிடும் எண்ணங்கள் நாளும்
சிந்தித்துப் பார்த்தால் தோழா
சீற்றமே எழுந்திடும் தானாய்
எத்தனை காலங்கள் தோழா
இத்தரை மீதினை நீயும்
பொற்தரை ஆக்கிட உழைத்தாய்
தரித்திரம் தானே கண்டாய்
பூத்தோரணம் ஆடிடும் மேடையில்
பொய்க் கொள்கைகள் தனையே
பொழிந்திடும் தலைவர்கள்
புரிந்திடுவாரோ உன் சோகம்
காலங்கள் எத்தனை மாறினும் உன்
கோலங்கள் மாறவே இல்லையே
ஞாலத்தின் நியாயங்கள் அனைத்தும்
சாலச் சிறந்தவை ஏட்டிலே
உருளும் பானையின் ஓசையும்
உடைந்த சட்டியின் வாசமும்
உந்தன் அடுப்பங்கரையிலே
உணரா மனிதரின் கேளிக்கை
கல்வியின் பெருமையை உணர்ந்தவர்
கல்விச்சாலையின் வெளியே
காசில் மிதப்பவர் குழந்தைகள்
கசக்கக் கசக்கக் கற்றிடுவார்
வறுமையின் நிறமும் சிவப்பா ?
வறியவர் உதிரம் சிவப்பா ?
வாழ்க்கையின் தத்துவம் புரியாமல்
வாடிடும் கூட்டம் ஏக்கத்திலே
நாளைகளை மாற்றிட வேண்டுமெனில்
இன்றைய இளைஞர் விழித்திடனும்
ஆணும் பெண்ணும் இணைந்திங்கு
அமைதிப் போரை நடத்திடணும்
வன்முறை அற்ற வழிதனிலே
வாழும் முறைதனை மாற்றியமைத்து
கண்ணீர் துடைத்திடும் கருணை கொண்டு
தம்பி, தங்கைகள் புறப்படணும்
உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது
உமது பாதைதானை மூடி இருக்கிறது
அறிவெனும் ஆயுதத்தின் துணையோடு
அரியணை ஏறணும் என் தோழன்
இனியும் தூக்கம் வேண்டாம்
இளைய உலகமே விழித்துக் கொள்
அரசியல் என்பதை உண்மையான
அடிப்படை மனிதனின் ஆயுதமாக்கு
அழுத முகங்கள் சிரித்திடவும்
உழைத்த கரங்கள் சிறந்தடவும்
உதிக்க வேண்டும் புதியதோர் யுகம்
உழைப்போம் அதற்காய் வாரீர் வாரீர்
******* சக்தி சக்திதாசன் ******
| Posted in
கவிதை