Subscribe to RSS Feed

ஓ ! நானும் கூடக் கடனாளியா ?

on July 24th, 2010 by sakthi

  0511-0810-2000-3262

வியப்பான கேள்வி, விரும்பத்தகாத விளக்கம், வினவுகின்ற வினாக்கள், விளக்க முடியா விவேகம்.

 

என்ன இது இவன் பாட்டுக்கு அளந்து கொண்டு போகிறானே ! என்ன மூளை கொஞ்சம் பிசகி இவன் வேற லூசுப் பயலாயிட்டானா? என்று எண்ணாதீர்கள்.

 

இன்று காலை இங்கிலாந்துச் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு செய்தியின் தாக்கம் தான் இவை.

 

அப்படி என்னதான் செய்தி வந்தது என்கிறீர்களா ?

 

இங்கிலாந்து நாட்டின் கடன் தொகை ஏறத்தாழ 4 ட்ரில்லியன்(Trillion – 1000000000000000000) ஸ்ரேலிங் பவுண்ஸ் ஜ எட்டிப் பிடித்து விட்டது என்னும் செய்தியே.

 

அதுமட்டுமல்ல இந்தக் கடன் தரும் செய்தியின் மறு அங்கமாக, இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து மக்களின் மீதும் இக்கடனானது ஆளுக்கு 65,000 ஸ்ரெலிங் பவுண்ஸ் கடனைச் சுமத்தியுள்ளதாம்.

 

இக்கடனை இங்கிலாந்து நாடு செலுத்தி முடிப்பதற்கு ஒவ்வொருவரும் குறைந்தது ஜந்து வருடங்கள் உழைத்து வரி செலுத்தினால் தான் ஆகுமாம்.

 

திடுக்கிட்டு விட்டேன் ! என் நாடு, என் பெயரில், 65,000 பவுண்ஸ் கடன் வாங்கியுள்ளதா? புரியவில்லையே !

 

இது எனக்காக அவர்கள் செலவிடுவதற்காக வாங்கிய பணமா? அப்படி நான் அரசாங்கத்திடமிருந்து எதுவுமே இனாமாகப் பெறவில்லையே !

 

ஏறத்தாழ 36 ஆண்டுகளுக்கு முன்னால் நான் இங்கிலாந்தில் கால் வைத்த காலம் முதல் உழைத்துத்தானே வாழ்ந்தேன் ! அரசாங்கத்திடமிருந்து எதற்குமே உதவிப்பணமே பெறவில்லையே !.

 

என் மனைவி கூட அப்படித்தானே !

 

சரி வைத்தியம் இலவசமாகப் பண்ணுகிறார்கள் என்றாலுமே இந்த முப்பதைந்து வருட காலத்தில் நான் ஏறத்தாழ 2 அல்லது மூன்று முறை எனக்காகவும், என் மனைவி ஒரு நான்கு தடவைகளும், என் மகன் ஒரு நான்கு தடவைகளும் வைத்தியமனைக்குச் சென்றிருப்போம்.

 

குடும்ப வைத்தியரிடம் அனைவருமாகச் சேர்த்து இதுவரை ஒரு ஜம்பது தடவைகள் கூடப் போயிருக்க மாட்டோம்.

 

அதற்குக் கூட எமது ஊதியத்தில் இருந்து வரிப்பணமாகவும், தேசிய சுகாதார காப்புப் பணம் எனவும் இதுவரை நானும் என் மனைவியும். இப்போது என் மகனும் அரசாங்கத்திற்குச் செலுத்திக் கொண்டுதானேயிருக்கிறோம்.

 

அப்புறம் எப்படி இந்த 65,000 பவுண்ஸ் எனது பெயரில் வாங்கப்பட்டிருக்கலாம் ?

வாசகர்களே! நான் இத்தனை உதாரணங்களையும் என்னை மையப்படுத்திக் கூறத் தலைப்பட்டதன் காரணம் இதே கேள்விகள் இன்று இங்கிலாந்து மக்களின் மத்தியில் பலமாக எழுப்பப் படுகிறது. பல வானோலி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காரசாரமாக விவாதிக்கப்படுகின்றன.

 

இங்கேதான் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்குமிடையேயான வேறுபாடு வெளிச்சமாகத் தெரிகின்றது.

 

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன்மீதான செலவா? என்னும் சந்தேகம் எழும்வேளை, இது சமுதாயத்திற்கான அவனுடைய கடப்பாடு என்னும் விடை அவன் முன்னே துள்ளி விழுகிறது.

 

ஆமாம் உழைக்கும் திறனும், சந்தர்ப்பமும் உள்ளவர்களால் அது அற்றவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்காக வழங்கப்பட்ட உதவி என்றே இது எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.

 

ஆனால் எங்கே இந்த உண்மை கசக்கிறது தெரியுமா?

 

உழைக்கும் வலிமை இருந்தும், அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் சந்தர்ப்பங்களின் கதவுகளை தட்டியே பார்க்காமல் தமது இயலாமைக்கு இன்றைய அரசியல் நிலைமையையும், வெளிநாட்டவரின் வருகையையும் குற்றமும், குறையும் கூறிக்கொண்டு அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையில் வாழ்க்கை நடத்தும் ஒட்டுண்ணிகளைப் பார்க்கும் போதுதான் அனைவரினது ரத்தமும் கொதிக்கிறது.

 

இவர்களின் சோம்பெறித்தனத்திற்கு விலையாக, அரசாங்கம் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளினாலும், தீட்டும் கடுமையான சட்டங்களினாலும் உண்மையான வலுவிழந்தோர், உண்மையாக சமுதாயத்தினால் உதவி செய்யத் தேவைப்படுவோர் தான் வாழ்க்கையில் அவதிப்படுகிறார்கள்.

 

ஒருபுறம் உழைத்துப் பிழைக்க முடியாத உடல் உபாதையோடு ,உடல் வலிமை அற்று மனம் குன்றிய வாழ்வை நடத்திக் கொண்டு, மறுபுறம் சமுதாய ஒட்டுண்ணிகள் என்று ஏனையோரோடு சேர்த்து முத்திரை குத்தப்பட்டு மன உளைச்சலுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள.

 

ஒரு அரசாங்கம் பதவியிலிருந்தபோது இத்தகைய நிலைக்கு அவ்வரசாங்கத்தின் மிதமான கொள்கைகளே காரணம் எனத் தமது வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்யும் எதிர்க்கட்சிகள் தாம் பதவிக்கு வந்ததும் தாம் அப்படியல்ல என்று நிரூபிக்கும் முகமாக பல கடுமையான சட்டங்களை அவசரம், அவசரமாக அமுல் படுத்துவதன் மூலம் பல உண்மையான உதவி தேவைப்படுவோர் பாதிக்கப்படும் நிலமை உருவாகிறது.

 

அடுத்து வெளிநாட்டிலிருந்து இலண்டனுக்கு வருவோர் மிகவும் காரசாரமாக விவாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் வரவு இங்கிலாந்து நாட்டுக்காரரின் வேலைவாய்ப்புக்களைக் குறைக்கிறது என்னும் குற்றச்சாட்டு எழுகிறது.

 

இதில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை.

 

ஆனால் எங்கே இது உதைக்கிறது என்பதை உன்னிப்பாகப் பார்த்தால். ஜரோப்பிய ஒன்றியத்தினுள் இருந்து இங்கு வந்து வேலைகளைப் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையே அதிகம் காணப்படுகிறது. இவர்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடையாது. ஏனெனில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது.

 

எனவே அவர்களது முழுக்கவனமும் ஜரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வருவோரின் மீதே விழுகிறது.

 

ஜரோப்பிய ஒன்றியத்தையும், அதற்கு வெளியே இருக்கும் நாடுகளையும் எடுத்துப் பாருங்கள். ஜரோப்பிய நாடுகள் அனைத்திலும் பெரும்பான்மையானவர்கள் வெள்ளை இனத்தவர்களே ! ஆனால் ஜரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே பெரும்பான்மையானோர் கறுப்பு நிறத்தவர்.

 

தெரிந்தோ, தெரியாமலோ இவ்வாதம் நிறவெறி கொண்டவர்களின் சார்பாக அமைவதற்கு ஏதுவாகிறது. அதற்காக இத்தகைய கொள்கையை முன்னெடுக்கும் இங்கிலாந்து அரசாங்கம் இனவாதத்தின் அடிப்படையிலோ அன்றி நிறவெறியின் அடிப்படையிலோ தான் எடுக்கிறார்கள் என்பது எனது கருத்தல்ல, ஆனால் நிறவேற்றுமைக்கு ஆதரவானவர்களின் குரலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைகிறது என்றே கருதுகிறேன்.

 

இதன் மத்தியில் அகதிகளாகவோ அன்றி இல்லை வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறுபவர்களாகவோ இருப்பவர்களில் ஒரு சிறுபகுதியினர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் ஊடகங்களில் மிகவும் பரவலாக செய்திகளாக வெளிவருவதால் உள்நாட்டு மக்களின் கருத்துக்களில் வெளிநாட்டவரின் வருகை பற்றிய ஜயப்பாடுகள் மேலோங்கத் தலைப்படுகிறது.

 

இவையெல்லாம் அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படைக் காரணிகள்.

 

ஆனால் அரசாங்கங்கள் அனைத்தும் எப்போதும் கடன் வாங்காமல்தான் தமது பொருளாதாரத்தை நடத்துகிறார்களா?

 

இல்லை அன்றிலிருந்து இன்றுவரை அரசாங்கத்தின் வருமானத்திற்கும், செலவிற்கும் இருக்கும் உறவு வரவு எட்டணா, செலவு பத்தணா மிகுதி துந்தணா என்னும் வகையிலேயே இருந்திருக்கிறது. துந்தணாவின் அளவை எந்தளவிற்கு ஒரு அரசாங்கம் குறைக்கிறதோ அந்தளவிற்கு அதன் பொருளாதாரக் கொள்கைகள் வெற்றியடைந்துள்ளது என்று கணிக்கப்படுகிறது.

 

அப்படியானால் தோற்றுப்போய்விட்ட இங்கிலாந்து அரசாங்கத்தின் துந்தணாவின் அளவு என்னை 65,000 பவுண்ஸ் ஸ்ரேலிங் கடனாளியாக்குமளவிற்கு எப்படிப் போயிற்று ?

 

அதற்கு அரசாங்கத்தின் பிழையான பொருளாதாரக் கொள்கை மட்டும் காரணமல்ல. ஆரம்பத்தில் மிகவும் பொருளாதாரச் செழிப்பில் இருந்த நேரத்தில் கஷ்டமான காலத்திற்கென சேமிப்பை ஏற்படுதாமல் மக்களின் திருப்திக்காக கையை மீறிய செலவு செய்தது அவர்களின் பொருளாதரக் கொள்கையின் அடிப்படைத் தவறு எனலாம்.

 

ஆனால் வங்கிகளின் மீது இருந்த கண்காணிப்புக் குறைவினால் அவர்கள் எடுத்த மிகவும் அதீத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட வங்கிகளின் வங்குரோத்தைத் தவிர்க்கும் முகமாக அவ்வங்கிகளுக்குள் பணத்தை இறைப்பதற்காக அப்போதைய லேபர் அரசாங்கம் எடுத்த கடனின் காரணமாகவே இன்று என்மீது 65,000 பவுண்ஸ் கடன் தொகை ஏறியிருக்கிறது.

இதற்கு அரசாங்கம் மட்டும் தான் காரணமா? இல்லையே மக்களின் மனங்களில் ஓடிய பேராசையின் அளவு அதிகமாக இருந்ததினாலேயே அரசாங்கம் அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக பணத்தை தண்ணிபோல் வாரியிறைத்தனர்.

 

அப்படிப்பார்த்தால் ! , நானும் கூடக் கடணாளிதானே ! ஏனெனில் அம்மக்களில் ஒருவன் தானே நான். . . .

 

 

சக்தி சக்திதாசன்

24.07.2010

 

| Posted in உள்ளத்தின் ஓசை

Leave a Reply