Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on July 20th, 2010 by sakthi

 

அன்பு நண்பா !

 

ஈரத்தின் வாசத்தை

உணரமுடியாமல்

நேசத்தின் பஞ்சத்தில்

சுவாசிக்கும் கும்பலின்

கூட்டத்துக்கு பெயர்தானாம்

சமுதாயம் ?

 

நாளைய சந்ததியின்

இருப்புகளை

நிர்ணயிக்கும் காரணிகளை

இல்லாமல் ஆக்கிக் கொண்டே

சமுதாய உணர்வுகளைப் பற்றி

சந்தி சந்தியாய்

உபதேசிக்கிறார்

 

உன்னிடத்தில் உறிஞ்சிக் கொண்டு

என்னிடத்தில் வறுகிக் கொண்டு

வளமான வாழ்க்கை வாழும்

வகைக்கோர் உதாரணத்தை வெறும்

வார்த்தையால் அழகாய்

அள்ளி வீசுகின்றார்

 

பெண்களின் முன்னேற்றப் பாதையெங்கும்

முற்களையும், கற்களையும் தூவிக்கொண்டு

சம உரிமைச் சந்தையில் பெண்களை

பலிகடாக்களாக்கிக் கொண்டு

உன்மத்தர் இவர் உலகில்

உனக்கும் எனக்கும் அறிவுரைகள்

ஊதித்தள்ளுகிறார்

 

எழுந்து விடு நண்பா !

உறக்கம் உனக்கு இனித் தேவையில்லை

உலகம் உன் விழிப்புணர்வைத் தேடி

ஏங்குகிறது

ஜனநாயக அரங்குகளிலே உண்மை

ஜனங்களைக் காணாமல்

பதட்டமாக இருக்கிறது

அரசியல் என்னும் போர்வையிலே

வியாபாரம் நடத்தும் பல

வியாபாரிகளின் நடுவே தோழா !

உன்னைப் போல உண்மை உள்ளங்கள்

உலாவத் தொடங்கினால் தான்

உலகம் இனி உருப்படும்

 

ஒதுங்கி இருந்த காலங்களை\

ஒதுக்கித் தள்ளிவிட்டு

ஓங்கார ஓசையுடன் முழங்கிக் கொண்டே

ஓங்கிக் கைகளை உயர்த்திக் கொண்டே

ஒருமித்த குரலில் உன் உரிமைகளுக்காய்

ஓலமிட இன்றே நீ எழுந்து வா !

 

இதயத்தின் ஓலங்கள்

இனிய நண்பன் உன் செவிகளில்

இன்னிசையாய் ஒலிக்கட்டும்

தூக்கத்தை கலைத்து விட்டு

துணிந்து நீயும் எழுந்து வா

அராஜகம் எதுவுமின்றி

அட்டூழியங்கள் புரியாமலே

அன்பு உறவுகளின் வாழ்க்கையில்

அழகான செழிப்புக்கான

அமைதி வழியில் உன்

தைரியத்தை விளக்கி விடு

அப்போதாவது இருண்ட இவ்வுலகில்

விடியல் பிறக்கின்றதா எனப் பார்ப்போம்

 

அன்புடன்

சக்தி

 

| Posted in கவிதை, நண்பனுக்கு ஒரு மடல்

Leave a Reply