Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on June 23rd, 2010 by sakthi

 26063

 

 

அன்பு நண்பா !

 

விளைவுகள் தெரியாமல்

வளைவுகள் புரியாமல்

இதுதான் பாதையென்றும்

அதிலே பயணமென்றும்

எத்தனை கண்ணுள்ள குருடர்கள்

என் முன்னே இடறினர்

அறிவாயா ?

 

தவறென்னும் வழியினிலே

அடம்பிடித்துச் செல்வதும்

அங்கொரு குழியினில்

ஆழமாய் விழுவதும் ; அப்பப்பா !

இவர்களின் பிடிவாதப் போக்குகள்

முடியாத வழக்குகள்

தீர்க்காத கணக்குகள்

 

இன்றொரு கோடிட்டால் அது

நாளையெனும் வரைபடத்தில்

நீ வரையும் சித்திரம்

அது அழகாக அமைவதும்

அலங்கோலமாய் அழிவதும்

நீ போடும் கோட்டினால்

புரியாதோர் ஆயிரம்

 

அன்பெனும் ஆயுதம்

அதனால் அடைவதென்றும்

அமைதி எனும் பூங்காவனம்

அடிப்படை உண்மை இது

அறியாமல் ஏனிவர் ஆத்திரம் ?

யார் சொன்ன சாத்திரம் ?

எது அங்கே சூத்திரம்

அடுக்கடுக்காய் கேள்விகள்

ஆகுமே அவர்க்கு மாத்திரம்

 

நெஞ்சத்திலே எம்பிடும்

அலைபோல எண்ணங்கள்

அதனாலே தான் நண்பா

அனுப்புகிறேன் மடல் உனக்கு

 

என் மனம் நீயறிவாய்

உன் மனம் நானறிவேன்

விடைகாணும் முயற்சியல்ல நண்பா

மடை திறக்கும் நினைவு வெள்ளம்

நடைபோட அமைக்கும் வடிகாலே !

 

அன்புடன்

சக்தி

| Posted in கவிதை, நண்பனுக்கு ஒரு மடல்

Leave a Reply