Subscribe to RSS Feed

ந‌ண்ப‌னுக்கொரு ம‌ட‌ல்

on June 10th, 2010 by sakthi

அன்பு நண்பா,

அடுத்தொரு அலை
அடித்து வருவது போல்
துடித்திடும் துயர்கள்
தொடர்ந்திடும் வாழ்வில்
இடர்ந்திடும் மனிதரின்
இடர்தனைக் கண்டேன்

அடுத்தொரு வேளை
ப‌சிக்கு உண‌வின்றித்
த‌வித்திடும் பொழுதுக‌ள்
கொடுத்திடும் ம‌ன‌த்துய‌ர்
தீர்த்திட‌ வ‌ழியின்றி
வ‌ழிந்திடும் விழிநீர்
மொழிந்திடும் நிலைத‌னை

ம‌ழ‌லைக‌ள் ஒருபுற‌ம்
விட‌லைக‌ள் மறுபுற‌ம்
விடிந்திடா இர‌வுக‌ள்
க‌ரைந்திடும் ஓவிய‌ம்
நில‌வின் ஒளியும்
ம‌ழையின் நீரும்
அனைவ‌ர்க்கும் பொதுவென்பார்
அத‌னால் ப‌சி தீருமோ ?

ஆயிர‌ம் மொழிக‌ளில் ஆங்கே
அழ‌க‌ழ‌காய் மேடைப் பேச்சுக‌ள்
புர‌ட்சிப் புய‌லென‌ புதுவெள்ள‌மென‌
ப‌க‌ன்றிடும் க‌ருத்துக்க‌ள் ‍ அவை
ஏட்டினில் ம‌ட்டுமே
ஏங்க‌ ம‌ட்டுமே நண்பா
என்னித‌ய‌த்துக்குத் தெரிகிறது
வார்த்தைக‌ளை ம‌ட்டுமே
வ‌ரைகின்ற‌ன‌ என் கைக‌ள்

புரிய‌வில்லை ந‌ண்பா !
வாழ்வின் அர்த்த‌ம் தெரிய‌வில்லை
பூமியின் மேலே ந‌ட‌க்கும்
புதிதான‌ நாட‌க‌ங்க‌ள் ப‌ல‌
ப‌தியும் க‌ருத்துக்க‌ளோ
பாவ‌ம் மாற்ற‌வில்லை
உழைக்கும் தோழ‌ன‌வ‌ன் வாழ்க்கை

அடுத்தொரு ம‌ட‌லில்

அன்புட‌ன்
ச‌க்தி

| Posted in கவிதை, நண்பனுக்கு ஒரு மடல்

Leave a Reply