Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on May 28th, 2010 by sakthi

அன்பு நண்பா !

உன் உள்ளத்தினடியில்
புதைந்திருக்கும்
உணர்ச்சிக் கொதிப்புகளின்
வெப்பத்தை நானறிவேன்

நெஞ்சப் புத்தகத்தின்
அத்தியாயங்களில் வரையப்பட்டிருக்கும்
வேதனைச் சித்திரங்கள்
ஒவ்வொன்றினதும் கோடுகள்
ஆழமாய்க் கீறிய வடுக்களின்
சோகத்தை நானறிவேன்

போகட்டும் விட்டுவிடு
ஆவதைப் பார்த்து விடு என
இலகுவாய் அறிவுரைகள் சொல்லிவிட்டு
கடமை முடிந்ததென
கண்மூடித் தூங்கிவிடும் நண்பனல்ல நான்

வாழ்க்கை என்னும்
இவ்விளையாட்டு மைதானத்தில்
ஒவ்வொரு புறமும் ஒவ்வொருவர்
தமக்கே வெற்றியென
தாம் போட்ட விதிகளின்படி
தனித்தனியாய் விளையாடுகின்றார்

நண்பா !

தமக்கே வெற்றியென
எக்காளச் சிரிப்புடன் ஓடிய
எத்தனை பேர் ; அடுத்தொரு பள்ளத்தில்
தலைகீழாய் விழுந்ததை
நானும் நீயும் பார்த்திருப்போம். .

உன் வேதனைக்கு மருந்து
மற்றொருவரின் வேதனை அல்ல
உன் வழக்கிற்குத் தீர்ப்பு
நீயே நீதிபதியாய் ஆவது அல்ல

உன் வாழ்வின் மகிழ்ச்சியை
உன்னிடமிருந்து பறித்தது யார் ?
தெரியாமல் இன்று நீயும் யார் யாரோ மீது
நியாய வஞ்சம் தீர்க்கும் போராட்டம்
நடத்துகின்றாய் ……..

வேண்டாம் நண்பா !

மன்னிப்பது வேறு ! மறப்பது வேறு !

மன்னிப்பது மகாத்துவத்துவம் ….
மறப்பதோ வெகுளித்தனம் …..

மன்னித்து விடு ஏனெனில்
அது உன் மனதினைக் கோவிலாக்கிவிடும்
மறந்து விடாதே ! ஏனெனில் அது உன்னை
மடையனாக்கிவிடும்

நெஞ்சில் பட்டதை
நேராக உன்னிடம் எடுத்துச் சொல்லுவதே
நட்பின் உண்மையான வடிவம் என்பதால்
உள்ளதைச் சொல்கிறேன் நண்பா … உன்
உள்ளத்தில் அலசிப்பார்

அடுத்த மடலில்
அவசியம் சந்திப்போம்

அன்புடன்
சக்தி

| Posted in கவிதை, நண்பனுக்கு ஒரு மடல்

Leave a Reply