Subscribe to RSS Feed

புதியதோர் அரசியல் அத்தியாயம் ஆரம்பம்

on May 21st, 2010 by sakthi

POLITICS Coalition 151181                                                                                                                   1354513127-brown-planned-quit-election

கூட்டரசாங்கம் என்பது எமது பின்புல நாடுகளைப் பொறுத்தவரை ஒரு புதிய சம்பவம் அல்ல. ஆனால் இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 6ம் திகதி நடைபெர்று முடிந்த தேர்தல் முடிவுகள், இங்கிலாந்து நாட்டு மக்களைப் பொறுத்தவரை ஒரு புதுவகையான அரசியல் மாற்றத்துக்கு அவர்களை உள்ளாக்கியிருக்கின்றது.

ஜனநாயகத்தின் உயிர்மூச்சு சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுவதிலேயே தங்கியுள்ளது. இங்கிலாந்திலே கடந்த பதின்மூன்று வருடங்களாக தொடர்ந்து ஆட்சியிலிருந்த லேபர் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது..

18 வருட காலமாக வனவாசத்தை அனுபவித்தது போல எதிர்க்கட்சி என்னும் முத்திரையைத் தன்மீது நிரந்தரமாகக் குத்திக் கொண்டதைப் போல இருந்த லேபர் கட்சி, அதன் தலைவராக டோனி பிளேயர் தெரிவு செய்யப்பட்டதும் ஒரு புத்துணர்வுடன் 1997ம் ஆண்டு ஆட்சியிலமர்ந்தது.

ஒரு நாட்டின் உண்மையான ஜனநாயகம் அதன் அரசாங்கங்களின் சுழற்சி முறையிலேயே அமைந்துள்ளது. . ஒரே கட்சி தொடர்ந்து பலவருடங்கள் அரசாட்சியிலமர்ந்திருந்தால் அது ஜனநாயகத்துக்கு சத்தாக அமையாது. ஓரிடத்தில் தங்கியிருக்கும் நீர் குட்டை ஆகிவிடும், ஓடும் நீரினாலேயே அதிக உபயோகமுண்டு.

அவ்வகையில் லேபர் கட்சியின் வெற்றியை மக்கள் கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்புக்களோடு நோக்கினார்கள். பிரதமாரக வந்த டோனி பிளேயரும் அவர்களது எதிர்பார்ப்பு என்னும் சுவாலைக்கு எண்ணெய் வார்ப்பது போல மிகவும் சுறுசுறுப்பாக தனது நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

ஆனால் ஜக்கிய அமெரிக்க ராச்சியத்துடன் ஜக்கிய இராச்சியம் (யு.கே) பேணி வந்த விசேட உறவுக்கு மேலும் வலுவான அர்த்ததை கற்பிக்க டோனி பிளேயரின் அரசாங்கம் முயற்சித்ததே அவருக்கு கிடைத்த முதல் அடி சறுக்கலாகும்.

தீர விசாரிக்காமல், ஜக்கிய நாடுகள் சபையின் முழு ஆதரவையும் பெற வழி கோணாமல், அமெரிக்க எடுத்த தனிப்பட்ட ஈராக்கிற்கு எதிரான  யுத்தத்தில் மிகவும் சத்தத்தோடு டோனி பிளேயர் இங்கிலாந்தை இணைத்துக் கொண்டார்.

விளைவு ,

வெறுமையான வெளியினூடக பயணம் செய்யும் ஒலி ஓர் மதிலை அடைந்தால் திரும்ப எதிரொலியாக வருவது போல, டோனி பிளேயரின் இந்நடவடிக்கை அவரை எதிரொலியாகத் திருப்பித் தாக்கியது.

இவ்வேளையில் எதிர்கட்சியாக இருந்த கன்சர்வேடிவ் கட்சியும், மூன்றாவது பெரிய கட்சியான லிபரல் கட்சியும் தமது தலைவர்களை மாற்றிக் கொண்டேயிருந்ததால் அவர்களுக்கு மக்களிடையே இருந்த செல்வாக்குக் குறைந்தே இருந்தது.
எதிர்க்கட்சிகளின் பலவீனத்தாலும். மக்களுக்கு உகந்த சில நடவடிக்கைகளை  எடுத்ததினாலும் லேபர் கட்சி தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் ஜெயித்து அரசமைக்கும் வாய்ப்பைப் பெற்றது.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களின் வெற்றியின் பெரும்பான்மை குறைந்து கொண்டே போனது.

இந்தப் பின்னனியில் உலகப் பொருளாதாரச் சரிவென்னும் பாதாளத்திலே சறுக்கிக் கொண்டிருந்த இங்கிலாந்துக்கு கோர்டன் பிறவுண் அவர்களது தலமைத்துவம் பெரிதாக ஒன்றையும் வெளிப்படுத்தவில்லை. நிதியமைச்சராக இருந்தபோது அவரைத் திறமைசாலி என்று ஏற்றுக்கொண்ட மக்கள், அவர் பிரதமராகியதும் ஏனோ அவரை ஒரு திறமை மிக்கவராக ஏற்றுக்கொள்லத் தயங்கினார்கள்.

இதற்கு அரசியல் அவதானிகளால் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அன்றைய அரசியல் அரங்கிற்கும், இன்றைய அரசியல் அரங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஊடகத்துறை. அன்று அரசியல்வாதிகளை பெரும்பான்மையாக அவர்களது கொள்கைகளில் இருந்தே கணித்தார்கள் ஏனெனில் அன்றைய ஊடகத்துறை பத்திரிகை வாயிலாகவே வெளிவந்தது.

ஆனால் இன்றோ இலத்திரனியல் யுகத்தில், தொலைக்காட்சி, இணையத்தளம், செல்பேசி என இவைகளின் ஆக்கிரமிப்பே அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் ஒரு அரசியல்வாதி தன்னைக் கொள்கைகளினால் மட்டும் வெளிக்காட்டமுடியாது.. அவரின், பேச்சு, நடைபாவனை என்பனவற்றை மிகவும் வசீகரமாக மைந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

தொலைக்காட்சி, இணையத்தளம் என்பன அரசியல் தலைவர்களை 24 மணிநேரமும் மக்கள் முன் எடுத்து வருகின்றன. அரசியல் வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் ஆழமாக அலசி ஆராயப்ப்படுகிறது.

இங்கேதான் கோர்டன் பிரவுண் என்னும் தனிப்பட்ட மனிதரின் பலவீனம் துல்லியமாகத் தெரிகிறது. மிகவும் ஆழமான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் மக்களை வசீகரிக்கக்கூடிய வகையில் அவரால் தொலைக்காட்சியையோ அன்றி மற்றைய ஊடகங்களையோ வயப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பொருளாதரச் சரிவு, தனிப்பட்ட செல்வாக்கு இழப்பு, 13 வருடகால தொடர்ந்த ஆட்சியால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு புதிய மாறுதலுக்கான தேடல் என்பவையே 2010ம் ஆண்டு லேபர் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியின் முக்கிய காரணங்கள்.

அதற்கு மேலாக எதிர்க்கட்சியிலிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கமரன் மக்களை வசீகரிக்ககூடிய வகையில் பேசும் வல்லமை கொண்டிருந்தார். அத்தோடு லேபர் அரசாங்கத்தில் மக்கள் எந்தெந்த விடயங்களில் விரக்தி கொண்டிருந்தார்களோ அவைகளை மிகவும் நுணுக்கமாகத் தெரிந்தெடுத்து தான் அவற்றை மாற்றியமைப்பேன் என்று உறுதியளித்தார்.
அத்தோடு மூன்றாவது பெரிய கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் நிக் கிளேக் வேறு சில மாற்றுக் கொள்கைகளை மிகவும் நயமாக மக்கள் முன்வைத்தார்.

விளைவு ,

மக்கள் இங்கிலாந்து அரசியல் சரித்திரத்தில் 70 ஆண்டுகளின் பின்னர் எந்தவொரு கட்சிக்குமே தனியாக ஆட்சியமைக்கும் வகையில் பெரும்பான்மை கிடைக்காதவாறு வாக்களித்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி விட்டார்கள்.

தேர்தல் முடிவுகளின்படி மூன்று வகையான நிகழ்வுகள் சாத்தியமானது.

முதாலாவதாக ஆகக்கூடிய பாரளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிய கன்சர்வேடிவ் கட்சி தனிமையாக ஒரு சிறுபான்மை அரசை அமைத்திருக்கலாம். ஆனால் அவர்களது ஒவ்வொரு சட்டமூலமும் நிரைவேறுமா இல்லையா என்பதும், அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எப்போது எடுப்பார்கள் என்னும் பீதியும் தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கும்.

ஏற்கனவே பொருளாரச் சிக்கலில் இருந்து வெளிவரத் தத்தளித்துக் கொண்டிருக்கும் பங்குச்சந்தைகளுக்கும், இங்கிலாந்தின் பொருளாதாரத்துக்கும் இது உகந்ததல்ல.

இரண்டாவது மூன்றாவது கட்சியாக 57 ஆசனங்களைக் கைப்பற்றிய லிபரல் கட்சி, 258 ஆசனங்களைக் கைப்பற்றிய லேபர் கட்சியுடன் இணைந்து , மேலும் சில சிறிய கட்சிகளின் துணையுடன் ஒரு கூட்டரசாங்கம் அமைப்பது..

307 ஆசனங்களை எடுத்து முன்னனியிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி அரசில் எந்தப்பங்கும் வகிக்காது, இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள கட்சிகள் அரசமைப்பது என்பது மக்களிடையே விரக்தியைத் தோற்றுவிக்கும்.

அத்தோடு இரு கட்சிகளின் கூட்டரசாங்கத்தை விட பல கட்சிகளின் கூட்டரசாங்கம் என்பது நிலையற்றதாகவே கணிக்கப்படும். இந்த கணிப்பீட்டின் விளைவாக  நாட்டின் நிதி நிலைமையில் நம்பிக்கை குறைந்து அதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

இந்தக் காரணங்களினால் யாருமே எதிர்பார்த்திராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பரம வைரிகள் என்று அரசியல் அவதானிகளால் வருணிக்கப்பட்ட கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் கட்சியும் சேர்ந்து ஒரு கூட்டரசாங்கம் அமைந்தது.

இது எப்படி நடக்கலாம் ? எப்படி நடக்க முடியும் ? என்று பல அரசியல் ஆய்வுகள் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் ஆமாம் நாம் எதிர்க்கொள்கைகளைத்தான் கொண்டிருந்தோம்,. ஆனால் நாடு இன்ற் இதுவரை சரித்திரத்தில் கண்டிராத ஒரு பொளாதாரச் சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
இந்நிலையிலிருந்து மீண்டு, பொருளாதார சுபீட்சத்தைக் காண கட்சி நலன்களை பின் தள்ளி விட்டு, நாம் நாட்டின் நன்மையை மனதில் கொண்டு இணைந்திருக்கிறோம். வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, ஒற்றுமை காணக்கூடிய முக்கிய கொள்கைகளை முன்னெடுப்போம் என்று உறுதியளித்துள்ளார்கள்.

இது எமது நாட்டு அரசியல் நடைமுறையையே மாற்றியமைக்கும் ஒரு சரித்திர சாதனை என்கிறார்கள் இவ்விரு தலைவர்களும்.

எத்தனை காலம் தான் ஒன்றாக இருப்பார்கள், இது ஒரு கண்கட்டி வித்தை.  ஆறுமாத காலம்தான் இவ்வரசாங்கம் நிலைக்கும் என்று ஊடகத்திரையினரின் ஒருபகுதியினர் வெளுத்து வாங்குகிறார்கள். சறுக்கும் போது இன்னும் விசையாகக் கிழே தள்ளி விடுவோம் என்று ஒரு கூட்டம் காத்துக்கொண்டு விமர்சிக்கிறது..

இந்நிலையில் நாம் கொஞ்சம் சிந்திப்போமே !

இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்ப்போமே !

ஒரு சமயம் அவர்கள் சொல்வது போல் இங்கிலாந்து அரசியல் சரித்திரத்தில் இது ஒரு புது அத்தியாயமாக இருக்கலாம்.

வலதுசாரக் கொள்கையின் ஒரு முனையிலிருக்கும் ஒரு கட்சி, இடதுசாரக் கொள்கையின் மையக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியோடு இணைவது ஏன் ஒரு நடுநிலைமையான அரசை மக்களுக்குக் கொடுக்கக் கூடாது ?

கூட்டரசாங்கம் என்பது கட்டுக்கோப்பான அரசியல் அமைப்புக்கு உகந்ததல்ல என்னும் ஒரு அபிப்பிராயத்திலிருந்து பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் வெளியேற இது ஒரு உந்துசக்தியாகக் கூட அமையலாம்.

அரசியல் என்பது ஒரு சாக்கடை அதிலே ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதுதான் நிகழக்கூடிய ஒரு நிகழ்வு என்னும் பொதுப்படையான அபிப்பிராயம் மாறக்கூடாதா ? என்ன.

இருவேறு மாற்றுக் கருத்துக் கொண்ட அரசியல் கட்சிகள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளை ஏற்றுக் கொண்டு பொதுவான கருத்துக்களின் அடிப்படியில் இணைந்து ஒரு திடகாத்திரமான அரசாங்கத்தை மக்களுக்கு அளிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?

அரசியலில் மாற்றங்கள் ஏற்படவேண்டியது அவசியம். ஆனால் அந்த மாற்றங்கள் என்ன காரணத்துக்காக யாரால் ஏற்படுத்தப்படுகின்றது என்பதுவே கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயம்..

இங்கிலாந்திலே கூட்டரசாங்கம் ஏற்பட்டது அக்கூட்டரசாங்கத்திலே இருப்பவர்கள் தாம் பதவிக்கு எப்படியாவது வந்து விட வேண்டும் என்னும் ஆதங்கத்தின் அடிப்படையிலா? அன்றி அவர்கள் கூறுவது போல நாட்டின் நன்மையை முதன்மைப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையிலா? என்பதுவே கேள்வி.

பதவிக்கு வந்துவிடவேண்டும் என்னும் ஆதங்கத்தில் தான் என்கிறார்கள் இக்கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அதிதீவிர மாற்றுக் கொள்கைக்காரர்கள்.

இக்கட்ச்சிகளின் அதிதீவிர ஆத்ரவாளர்களும், சார்பான ஊடகத்துரைகளும் கூட இக்கூட்டரசாங்கத்தைக் கொஞ்சம் கசப்போடுதான் பார்ப்பது போலிருக்கிறது.

கூட்டரசாங்கம் அமைப்பதற்காக தமது கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் பிரகடனத்தில் முக்கியமானவை பலதை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம் என்னும் ஆத்திர உணர்வினால் ஏற்பட்ட கசப்பு.

மக்கள்தானே இப்படியான ஒரு நிலையை வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுத்தார்கள். மக்களின் அபிலாஷையையே இக்கட்சிகள் கூட்டரசாங்கம் அமைத்ததன் மூலம் பிரதிபலித்துள்ளன என்கிறார்கள் இக்கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மிதவாதிகளும், கூட்டரசாங்க முரையை ஆதரிப்பவர்களும்.

இவர்களில் யார் சரி என்பதை இனி இங்கிலாந்தின் கூட்டரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளின் வாயிலாகவே நாம் அறிந்து கொள்ள வேண்டும்..

திடகாத்திரமான ஒரு அரசாங்கம் அமையவேண்டுமானல் அங்கே மிகவும் வலுவான எதிர்க்கட்சி பாராளுமன்றத்திலே இருக்கவேண்டும்.

தன் கட்சிக்குத் தேர்தலில் கிடைத்த தோல்விக்குத் தலைவர் என்னும் வகையில் தானே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி லேபர் கட்சியின் தலைவர் கோர்டன் பிறவுண் உடனடியாக தனது தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இப்போது லேபர் கட்சி மும்மரமாகத் தன் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உட்கட்சித் தேர்தலில் ஈடுபட்டிருக்கிறது.

யார் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் உண்மையான மக்களின் நலனை முன்னெடுக்கக் கூடிய ஒரு வலுவான எதிர்க்கட்சித் த்லைவராக விளங்க வேண்டும் என்பதுவே மக்களின் எதிர்பார்ப்பு.

தமது தோல்வியின் காரணத்தை உண்மையான மனதுடன் அலசி ஆரய்ந்து ஏற்றுக் கொண்டு, அம்மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தம்மைப் பலப்படுத்திக் கொள்ள லேபர் கட்சிக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எப்போது தாம் விட்ட தவறுகளை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்களால் முன்னேற்றப் பாதையில் மேலும் நகரமுடியும்.

கொஞ்சம் தெளிவாகச் சிந்திப்போம், உணர்ச்சிகளைக் கொஞ்சம் நாட்டின் நன்மையைக் கருதி அடக்கி வைப்போம்.

மாற்றத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்ப்போம்,

இல்லையேல் இருக்கவே இருக்கிறது அடுத்த தேர்தல் !

சக்தி சக்திதாசன்
லண்டன்
21.05.2010

| Posted in Uncategorized

Leave a Reply