Subscribe to RSS Feed

தவறான பதிலைக் காட்டிலும் மெளனம் சிறந்தது

on April 29th, 2010 by sakthi

break-time_brk_time

வாதிடுவது என்பது சிலருக்கு ஒரு போதை வஸ்து போன்றது. உள்ள‌த்தின் கருத்தை தெளிவாக மற்றையோருக்கு புரியவைக்கும் போது, அதனோடு ஒத்துப் போகமுடியாதவர்களோடு ஆக்கபூர்வமாகப் புரியும் தர்க்கம் ஆரோக்கியமானதுவே.

ஆனால் ஆரோக்கியமான தர்க்கம் என்னும் எல்லைக்கோட்டைக் கடந்து நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடும் நிலைக்குப் போய்விட்டால் அங்கேதான் தர்க்கம் ஒரு போதைமருந்தாகி விடுகிறது.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என்றோ அன்றி எல்லோராலும் எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட முடியும் என்றோ நம்பும் ஒருவரும் இருக்க முடியாது.

அப்படியானின் ஏன் சிலசமயங்களில் சிலர் தமக்குத் தெரியாது என்று சொல்வதைக் காட்டிலும் தமது பதில் தவறானது என்று தெரிந்திருந்தும் அதைப்பதிலாகக் கொடுக்கிறார்கள் என்னும் கேள்வி எழுவது சகஜமே.

பலர் “கெளரவம்” என்னும் சொல்லுக்கு தேவையற்ற அளவு முக்கியத்துவம் தேவையில்லாத நேரங்களில் கொடுப்பதனாலேயே இத்தகைய நிலை ஏற்படுகிறது.

ஒரு மனிதனுக்குக் கெளரவம் அவசியம் ஆனால் சிலசமயங்களில் நாம் சில தனிப்பட்ட‌வர்களுக்கு முன்னால் எமக்குத் தெரியாத விடயத்தை தெரியாது என்று சொல்வது எமக்குக் கெளரவக் குறைச்சல் என்று எண்ணுகிறோம். அதனாலேயே எமக்குத் தவறு என்று தெரிந்தும் கூட சில கருத்துக்களை முன் வைக்கிறோம்.அவ்விடத்தில் அப்போது நாம் சொல்வது தவறு என்று நிச்சயம் அறிந்த ஒரு மனிதர் இருந்து விட்டால் அவர் அதனை மறுதலிக்கும் போது நாம் வீண் தர்க்கங்களில் ஈடுபடுகிறோம்.

நண்பர்களே ! இது ஏதோ நான் முழுவதும் அறிந்தவன் போன்றதொரு பாணியில் கூற விளையவில்லை. இத்தகைய சூழலில் நானே நேரிடையாக இருந்திருக்கிறேன், தேவையற்ற வீண்விதண்டாவாதங்களில் என் கெளரவம் குறைந்துவிடும் என்னும் ஒரு தவறான புரிந்துணர்தலினால் ஈடுபட்டு இருந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் என்னையே நான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கவில்லை. பல சமயங்களில் என் உற்ற தோழியாகிய என் மனைவி என்னுடன் கூட இருந்தமையால் எனது தவறை எனக்குச் சுட்டிக்காட்டும் போது உடனடியாக அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அப்போது எனக்கு இல்லாதிருந்தாலும், தனியாக நான் இருக்கும் சமயங்களில் என் மன‌தில் மீண்டுன் அதனை அசைபோட்டு என்னை எண்ணி நானே வெட்கியுள்ளேன்.

ஆனால் வயது ஏற, ஏற வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் கொடுக்கும் பாடங்களும் இனிமையான கணங்கள் கொடுக்கும் வெகுமதிகளும் அனைத்தையும் எடைபோட பழக்கி விடுகின்றன.

அப்போதுதான் கெளரவத்தின் உண்மையான அர்த்தம் விளங்கிக் கொள்ள‌ப்படுகிறது. ஒரு மனிதனின் உண்மையான கெளரவம் தானே தன்னை கெளரவிக்கப் பழகிக் கொள்வதில் தான் தங்கியுள்ளது.

பொய் சொல்கிறேன், தவறை நியாயப் படுத்துகிறேன் என்று தெரிந்து கொண்டே தவறான பதில்களைக் கொடுப்பவன் ஊருக்கு வேண்டுமானல் கெள‌ரவமிக்கவனாகக் காட்டிக்கொள்ளலாம். ஆனால் தன்ன்னைத் தானே நியாயப்படுத்திக் கொள்ள‌ முடியுமா? அப்படிப்பட்ட ஒருவனால் தனக்குத் தானே கெளரவம் அளிக்க முடியுமா?

இங்குதான் ஒரு மனிதனுக்கு உண்மையான கெளரவம் என்ன என்பது தெளிவாகிறது.

பொது இடத்தில் ஒரு கருத்து பகிரப்படும் போது தெரியாவிட்டால் தெரியாது என்று கூடச் சொல்லத் தேவையில்லை மெளனமாக இருந்து விட்டாலே அது உன்னதமான செய்கையாகி விடுகிறது.

அன்புடன்
சக்தி

| Posted in உன்னை ஒன்று கேட்பேன் ....

Leave a Reply