Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on April 29th, 2010 by sakthi

1386-0804-0812-1704

அன்பு நண்பா,

உள்ளத்தைத் திறந்து
உன்னிடம்
உண்மையைப் பேசிட
உள்ளம் துடிக்கிறது

ஆனாலும்  ஏதோ
அச்சம்
உள்ளத்து உணர்வுகளுக்கு
பூட்டுப் போட்டுள்ளது

ஏன் நண்பா ?

உண்மைகள் இந்த
உலகத்துக்கு ஒவ்வாததால்
உரைப்பவரைச் சாடுவார்களே எனும்
உள்ளுறுத்தும் எண்ணம் தானா
உண்மைக்குப் பூட்டிடுகிறது ?

விதம் விதமான மேடைகளில்
வித்தியாசமான தோற்றங்களில்
ஒரே மனிதன் நடித்திடும் போது
திரைவிழுந்து காட்சிகள் மாறும்போது
தனை மறந்து ரசித்திடும் கூட்டத்தைப் போல
பார்த்துக் கொண்டே நாம்
மெளனமாய் நடக்கிறோம் …..

என்னை முழுதாய் புரிந்தவன்
நீயொருவன் என்பதால் தானோ
என்னெஞ்சம் உன் முற்றத்தில்
உணர்வுகளை மழையாய்ப்
பொழிகிறது ?

மெய்வருத்தித் தன்நிலை உயர்த்தும்
தோழனவன் வசதிகளை
பட்டதுயர் உணராத நெஞ்சங்கள்
பழிக்கின்ற வேளைகளைக்
காணுகிறேன் நண்பா !

விளம்பரம் எதுவுமில்லாமல்
வியாக்கியானம் எதுவும் சொல்லாமல்
வருந்தும் உள்ளங்களுக்கு
மருந்திடும் மனிதர்களை
தடையின்றி விமர்ச்சித்திடும்
தரமிக்க மனிதர் பலரை
தினந்தோறும் காணுகிறேன் ….

இவ்வளவுதான் உலகம் என்று
எவ்வளவுதன் உள்ளம் சொன்னாலும்
எள்ளளவாவது உன்னுடன்
என்னுணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாவிடில்
என்விழிகள் மூட மாட்டா நண்பனே !

மீண்டும் வருவேன்
அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

| Posted in நண்பனுக்கு ஒரு மடல்

Leave a Reply