Subscribe to RSS Feed

நண்பனுக்கோரு மடல்

on April 5th, 2010 by sakthi

 அன்பு நண்பா !

 

உள்ளத்தின் உள்ளே

துளித்துளியாய் உணர்வுகள்

எண்ணங்களாய்ப் பொழிந்து

வெள்ளமாய்ப் பாயுதடா !

 

சத்தமாய்க் கொஞ்சம்

சங்கீதம் பாட

சிந்தனையில் ராகம்

எந்தனையே இழுக்குதடா !

 

நீலவானின் நிர்வாணம்

நீந்துமொரு வெண்மேகம்

மெல்லினிய பூங்காற்று

மீட்டுதொரு தேன்கானம்

 

பசும்புல்லின் மேலே

பாதம்பட்டு உருவாக்கும்

கோலத்தைக் கலைக்க

சிலிர்த்தெழும் புல்நுனிகள்

இசைக்குமொரு பூபாளம்

 

பொன்மாலைப் பொழுதினிலே

பூங்காற்றின் துணையோடு

அசைந்தாடும் பச்சிலைகள்

உருவாக்கும் சங்கீதம்

உணர்வோடு சங்கமிக்கும்

 

ஆலமரப் பொந்தினுள்ளே

ஆலங்கிளிக் குஞ்சுகள்

அன்னைதனின் வரவுதேடி

கிள்ளைமொழி பேசுதடா !

 

சோலைக்குயில் ஜோடி

சேர்ந்து ஒன்றாய்

காதல்பாட்டு பாடியென்னை

கண்மயங்கச் செய்யுதடா !

 

உலகில் என்னைப் படைத்து

உயர்ந்த நல்லுணர்வுகளை

இயற்கை துணை கொண்டு

இதயத்தினில் உலவச் செய்த

இறைவனவன் பாதம் தேடி

கவிதை நானும் புனைந்தேனடா !

 

அன்புடன்

சக்தி

| Posted in கவிதை, நண்பனுக்கு ஒரு மடல்

Leave a Reply