Subscribe to RSS Feed

தொடங்க எடுக்கும் முடிவே சாதனையின் ஆரம்பம்

on April 5th, 2010 by sakthi

 0511-0712-2114-0704_hands_together_in_prayer_clipart_image

 

ஆரம்பமும் முடிவும் , முடிவும் ஆரம்பமும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடக்கிறது. சாதனை என்றால் என்ன ? அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் தொலைபேசியைக் கண்டு பிடித்ததோ அன்றி ஆக்கிமிடிஸ் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்ததோ மட்டும் தான் சாதனையா?

 

ஒரு மனிதன் தன் வாழ்வை மனிதனாகவாழ்ந்து முடிப்பதும் சாதனையே ! வாழ்க்கை என்பது சிக்கல்கள் பல நிறைந்த புதிர் போன்றது. ஒவ்வொரு சிக்கல்களாக அவிழ்த்துக் கொண்டு போகும்போது புதிய சிக்கல்கள், புதிய வடிவில் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

 

மனதில் ஒன்றை வரித்துக் கொண்டு அதைச் செயலாக்கப் போகிறோம் என்ற திடகாத்திரமான முடிவு மனதில் எப்போது நிலைபெறுகிறதோ அப்போதே சாதிக்கப்போகும் விடயம் ஆரம்பமாகி விட்டது என்று பொருள்.

 

மாணவனொருவன் தான் தனது இறுதிப் பரீட்சைக்காக பயிலத் தொடங்க எடுக்கும் முடிவே அவன் தான் அவ்வருடம் காணப்போகும் சாதனையின் ஆரம்பம். ஒரு ஆண் ப்ரு பெண்ணையோ, அன்றி ஒரு பெண் ஒரு ஆணையோ மணக்க எடுக்கும் முடிவு அவர்களின் வாழ்க்கை என்னும் சாதனையின் ஆரம்பமாகிறது.

 

ஆனால் பலபேர் இந்தத் தொடங்க எடுக்கும் முடிவைத் தள்ளிப்போட்டுக் கொண்டே ஏன் தம்மால் எதனையும் சாதிக்க முடிவதில்லை என்று வேதனைப்பட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.

 

தொடக்கம் என்னும் புள்லியில் ஆரம்பித்து முடிவு என்னும் முற்றுப்புள்ளி வரை வரையும் கோலம்தான் ஒவ்வொரு மனிதனினதும் சாதனையாக அமைகிறது. சே ! நான் பெரிதாக எதைச் சாதித்து விட்டேன், இப்படியே எனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்று சலித்துக் கொள்பவர்கள் ஒன்றை எண்ணிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

தினமும் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வதும், அன்றாடம் தனது கடமைகளை முடிப்பதும் பின்னர் இரவு படுக்கைக்குப் போவதும் தான் வாழ்க்கை என்றிருந்தாலும் அவ்வாழ்க்கையில் மற்றையோருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்து, அடுத்தவரின் அழிவில் தனது முன்னேற்றத்தை அமைக்காமல் ஒருவன் வாழ்ந்து விட்டால் அவன் கூட ஒரு பெரிய சாதனையாளன் தான்.

 

பலர் தம்முடைய வாழ்நாளில் மற்றும் பலருக்கு வாழ்க்கையில் முன்னேற கைகொடுத்திருப்பார்கள். காலம் என்னும் சக்கரத்தின் சுழற்சியில் அவர்களுடைய உண்மையான உதவிகள் அழிந்து,பட்டும் மறக்கப்பட்டும் போகலாம் ஆனால் சாதனை என்னும் அளவுகோல் கொண்டு அளக்கப்படும் போது அம்மனிதர்கள் மிகவும் உயர்ந்த நிலையிலேயே இருப்பார்கள்.

 

நல்ல விடயங்களை ஆரம்பிப்பதற்கு நாளும், கோளும் தேவையில்லை என்பார்கள். ஆனல் அவைகள் செயலாக்கம் பெற்றுவதற்கு அவற்றின் ஆரம்பம் நிர்ணயிக்கப்படவேண்டும்.

 

எது சரி, எது நியாயமானது என்பதை தீர்மானிப்பது மனிதாபிமானத்தின் அடித்தளமே. ஆனால் அந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவைகளை நிறுத்துப்பார்க்கும் தராசு மனிதாபிமானம் மிக்கவர்களின் கைகளில் இருக்கின்றதா என்பதுவே கேள்வி ?

 

ஒரு செயலைச் செய்வதற்கு அதை ஆரம்பிக்க எடுக்கும் முடிவு ஆணித்தரமாக இருப்பது மட்டுமில்லாமல், அவைகள் மனித தர்மங்களுக்கு உட்பட்டவையாக இருக்கின்றனவா என்பதும் முக்கியம்.

 

அப்படி ஆரம்பிக்கப்பட்ட விடயங்களின் வழியில் தனது வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் அனைவரும் நிச்சயம் நல்ல மனிதர்களாக வாழ்ந்து முடிப்பார்கள் என்பதுவும் நிச்சயமே.

 

அப்படி வாழ்ந்து முடித்த ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் ஒரு சாதனையாளராக அமைவார்கள் என்பது உறுதி.

 

அன்புடன்

சக்தி

 

| Posted in சொல்லச் சொல்ல இனிக்குதடா

Leave a Reply