Subscribe to RSS Feed

சுற்றத்தின் அழகு சூழ இருக்கும்

on March 20th, 2010 by sakthi

0511-0711-2522-5246 

ஒரு மனிதனின் சொந்தம், உறவு அவனது சுற்றம் என்று கருதப்படுகிறது. மனிதர்களாக நாம் பிறக்கும் போது எமது சுற்றத்தை நாம் தெரிவு செய்வதில்லை. எமக்கும் மேலே உள்ள ஒரு சக்தியால் எமது சுற்றம் நிர்ணயிக்கப்படுகிறது.

 

அந்தச் சுற்றங்கள் வகுத்த எல்லைக் கோட்டினுள் நாம் எமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். இதுதான் உனது வாழ்க்கை முறை என்று எமது கலாச்சார வரம்புக்கள் அந்தச் சுற்றங்களினால் போதிக்கப்படுகின்றன. எமது பாரம்பரிய வழக்கங்கள் அந்தச் சுற்றியுள்ள சொந்தங்களின் செயற்பாடுகளினால் எமது மனங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

 

காலச்சக்கரத்தின் ஓட்டத்தோடு உள்ளமும், உருவமும் வளர்ந்த நிலையில் அகப்புறச் சுழல்களின் தாக்கங்கள் எம் மனங்களில் எமக்கேயுரிய தனிப்பட்ட அபிப்பிராயங்களை வளர்க்கின்றன. தனிப்பட்ட அபிப்பிராயங்களை தனக்குள் வளர்த்துக் கொள்ளாத மனங்கள் சாதாரண மனங்களாக இருக்க முடியாது.

 

எங்கே மனதுக்கு மனம், மனிதனுக்கு மனிதன் மனம் வேறுபடுகிறது ? சிந்திக்க வைக்கிறது அல்லவா ? தான் தனக்குள் வளர்த்த அபிப்பிராயத்தை தனது சுற்றங்கள் தன்மீது திணித்த கலாச்சார அடையாளங்களுக்கு அடகு வைத்துவிடும் ம்னங்கள் தன் மச்னதி அபிப்பிராயத்தின் போக்கில் நடக்கும் மனதினின்றும் வேறுபடுகிறது.

 

இங்கேதான், கலாச்சாரத்துக்கும் சுயசிந்தைக்கும் பலமான மோதல் வெடிக்கிறது. இந்த மோதலில் எது வெற்றியடைகிறது என்பதைப் பொறுத்தே ஒருவனது வாழ்க்கை நடைமுறைகள் இருக்கும்.

 

அப்படியாயின் சுயசிந்தையின் பிரகாரம் நடப்பவன் கலாச்சார அடையாளங்களை நிராகரித்தவன் என்னும் அர்த்தம் கொள்ளலாமா? இவ்வினாவின் விடையை எது கலாச்சாரம் என்பதை சரியான வகையில் புரிந்து கொண்டாலே அறிய முடியும்.

 

கலாச்சார அடையாளங்கள் என்பதை ஒரு மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் இறகாகவும் உபயோகிக்கலாம் அதேசமயம் ஒரு மனதைக் குத்திக் கிழிக்கும் ஆயுதமாகவும் உபயோகிக்கலாம்.

 

தன்னுடைய ஆணிவேரின் அச்சாரத்தைத் தொலைக்காமல் அதேவேளை கலாச்சாரம் என்னும் பெயரால் தன்மீது திணிக்கப்படும் விதிகளின் நீதியை விசாரிக்கத் தலைப்படும் ஒருவனின் மீது சுற்றம் என்னும் பெயருடன் சூழ இருப்பவர்கள் கொடுக்கும் அழுத்தம் நியாயமானதா? என்பது பூதாகரமான கேள்வி.

 

இத்தகைய கேள்விகளின் அடிப்படையில் சுற்றத்தின் அழகு சூழ இருக்கும்என்னும் கூற்றை ஆராயத் தலைப்படும் போது அவர்ரின் அர்த்தங்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்க வேண்டிய தேவையின் நியாயம் புரிகிறது.

 

சூழ இருக்கும் சுர்றத்தின் புரிந்துணர்தலின் அளவினிலேயே அதன் அழகு அடக்கம் என்பதே உண்மையாகும்.

 

அன்புடன்

சக்தி சக்திதாசன்

20.03.2010

| Posted in சொல்லச் சொல்ல இனிக்குதடா

Leave a Reply