Subscribe to RSS Feed

இதுவும் ஒரு ஓலம் தான் !

on March 3rd, 2010 by sakthi

veda-vyasa-maharshi

ஒன்றா இரண்டா மனதில் உளையும் உணர்வுகள்? வாழ்க்கையின் திருப்பங்கள், எதிர்பாரா வளைவுகள் எத்தனை, எத்தனை அத்தனையும் ஒரு சிறு இதயம் தாங்கிக் கொண்டு நாளுக்கு ஒரு இலட்சம் முறை துடிக்கிறதாமே! அதன் ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு அர்த்தம் இருந்தால் எத்தனை பாகங்கள் உள்ளடங்கிய புத்தகப் பதிவுகளாயிருந்திருக்கும்?

வருட ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் முடிவதற்குள் மூன்றி உயிர்களைக் காலன் காவு கொண்டு விட்டான். அவ்வுயிர்கள் மூன்றும் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு நிலைகளுக்குள்ளாகிய உயிர்கள்.

22வயது கூட நிரம்பாத தன் இளவயது மகனை, அதுவும் குடும்பத்தின் ஒரேயொரு குழந்தையை ஜந்து வருடங்களுக்கு முன்னால் பறிகொடுத்த தமிழகம் ஈன்றெடுத்த நல் நண்பன், ஈழத்திலே வாழ்க்கையில் கணவனின் அரவணைப்பில் கதகதப்பாக வாழ்ந்து, பின்னர் கணவனை இழந்து ஈழத்தின் போர்ச்சூழல்களினால் தனது மகள்களுடன் வாழ்வதற்காக லண்டனுக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக இடம்பெயர்ந்து, உடல்நலமின்மையால் கடந்த பத்து வருடங்களை நர்ஸிங்ஹோமில் கழித்த என் அனையின் அன்புத்தங்கை என் சிற்றன்னை. இளவயதுக் கனவுகளுடன் தனது இளவயது மனைவியுடன் ஈழத்திலிருந்து இலண்டனுக்கு சுமார் ஜம்பது வருடங்களுக்கு முன்னால் புலம்பெயர்ந்து, இரு இளவயது மகன்களையும் மணக்கோலத்தில் பார்த்து, வீட்டுக்கும், தனது சமூகத்திற்கும் தனது கடமைகளை ஆற்றி, தொடர்ந்து மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த மனோதத்துவ டாக்டர், என் ஒன்று விட்ட சகோதரியின் கணவர்.

ஆமாம் இந்த மூன்று உயிர்களின் இழப்பும் இதயத்தை இயற்கை மூன்று முறை ஓங்கிக் குத்தினாற் போன்றதொரு உணர்வையே தந்திருக்கிறது.

இவ்வுலகில் பிறந்த நாமெல்லோரும் ஒருநாள் மடிவது நிச்சயம் என்பது அனைவர்க்கும் வெள்ளிடை மலை.யாக்கையின் நிலையாமையைப் பற்றி ஆயிரம் தத்துவங்கள் அறிந்திருக்கிறோம். சித்தர்கள் சொல்லிய தத்துவங்கள், புத்தரின் ஞான போதனை, நபிகளின் வாழ்க்கைத் தத்துவங்களின் ஞானம் கிறீஸ்துவின் உலகஞானம் என அனைத்தையும் படித்து அதனுள் புதைந்திருக்கும் பொருள் கண்டு வியந்திருக்கிறேன். இருப்பினும் இந்த இழப்புக்களை ஏற்க முடியாமல் மனம் எகிறிப்பாய்வது நிற்கவில்லை.

ஏதோ ஒரு ஏக்கம் நெஞ்சத்தின் அடியை நிகக்கூரினால் கீறுவது போன்றதொரு வதை வாட்டுகிறது. இழப்புக்களை மனிதன் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது நியதியா ? இழப்புக்களுக்காக இதயம் தனது துடிப்புக்கள் ஒவ்வொன்றிலும் சோகத்தைத் தீட்டுவது நியதியா ? புரியாத கோலங்கள், விடை தெரியாத வினாக்கள்.

இவைதான் நம் அனைவர்க்கும் பொதுவான இறை எமது நெஞ்சத்தின்  அசுத்தங்களை அகற்ற கையிலெடுத்த துடைப்பக் கட்டையா? பல கேள்விகள் உள்ளத்தில் ஆழமாய்ப் பாய்ந்து விடைதேடித் தவிக்கிறது.

ஒரேயொரு மகன், அவனது வம்சத்தின் வாரிசே அவன் தான் அவனைப் பறிகொடுத்த என் நண்பனின் சோகத்தை, அதேபோல ஒரே வரிசைக் கொண்ட என்னால் ஓரளவிற்கு (ஓரளவிற்குத்தான்) உணர முடிகிறது. ஆனால் அதே சமயம் தன்னுடைய வயிற்றில் பத்துமாதம் சுமந்து அன்புதீரக் கொஞ்சி மகிழ்ந்த தன் அருமை மகனை இழந்து புத்திரசோகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் அன்னையை, தன்னையே தன்னுடைய எஞ்சிய வாழ்விற்கு ஆதாரமாய் நம்பியிருக்கும் தன் மனைவியின் நிலையை மறக்கும் அளவிற்கு அவன் புத்திரசோகம் அவனை வாட்டியது தான் என் நெஞ்சைக் கொஞ்சம் நெருடுகிறது.

இன்று மகனையும் இழந்து, கணவனையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் அந்தத் தங்கையின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் வேதனையால் விம்முகிறது. இத்தனைக்கும் அவளது மகனுக்கு ஆறுவய்தாக இருக்கும் போது புற்றுநோயினால் தாக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்குட்பட்டு தனது வாழ்விற்காய் போராடி தன் மகனுக்காவும், கணவனுக்காகவும் விதியுடன் போராடி வாழ்ந்து வருபவள் அத்தங்கை.

அப்பப்பா  வாழ்வில் வளைவுகள் தான் எத்தனை ?

என்னுடைய சின்னம்மா, வாழ்வில் வசதிகளின் செல்லக்குழந்தையாய் வாழ்ந்தவள். அன்பான கணவன், அன்பும், அறிவும் நிறைந்த குழந்தைகள் எனச் செழிப்பாக மகிழ்வுடன் வாழ்ந்தவள்.

என்றுமே கணவனின் அரவணைப்பின் பாதுகாப்பில் தன்னை மையப்படுத்திக் கொண்டிருந்தவள் அவளின் வாழ்க்கையின் திருப்பங்கள் தான் எத்தனை ? மனம் போல இரு பெண்பிள்ளைகளுக்கும் கண்ணான கணவன் கிடைப்பதைக் கண்டு மகிழ்ந்திருந்தாள்.

விட்டதா விதி ? வாழ்வின் வசதிதேடி லண்டனுக்கு புலம் பெயர்ந்தாள் மூத்த மகள், ஈழத்தின் சரித்திரச் சாபமான தமிழர்களின் தலைவிதியை மாற்றியமைத்த போரினால் புலம் பெயர்ந்தாள் அடுத்தமகள். சும்மா இருப்பானா காலன், கவர்ந்து விட்டான் கணவன் உயிரை. இடிந்து விட்டாள் சின்னம்மா. அவளது உலகமே இருண்டு விட்டது. தாயின் துயர் துடைக்க தம்முடன் இங்கிலாந்து அழைத்துக் கொண்டனர் பிள்ளைகள்.

இழந்து விட்டாள் அவள் மண் அவளுக்குக் கொடுத்த தன்னம்பிக்கை நிறைந்த அவள் வாழ்க்கையை. அப்புறம் என்ன? வசதிகள் பலவற்றின் நடுவே வாழ்ந்தாலும் வாடிய அவள் மகிழ்வெனும் பயிர் மறுபடி துளிர்க்குமா? பேரப்பிள்ளைகள் மத்தியில் சிறிது காலம் தன்னை மறந்திருந்தாலும், நோய் என்னும் தீர்க்க முடியாத் தாக்கம் அவளைத் தழுவிக்கொள்ள அவளும் இரு வாரங்களின் முன்னே காலனின் வண்டியில் முன்வரிசையில் ஏறிக் கொண்டாள்.

என் சிற்றன்னையின் இறுதியாத்திரையின் போது எனதருகே அமர்ந்திருந்தார் என் ஒன்று விட்ட சகோதரியின் கணவர். அவர் கூட ஒரு டாக்டர் தான். விளங்க முடியா வில்லங்களுக்குள் தம் மனதைச் சங்கிலியால் பிணைத்து வைத்து வாடும் மனநோயாளிகளின் மனதை மாற்றியமைக்கப் பாடுபடும் உன்னதமான மனோதத்துவ டாக்டர் அவர்.

எனது ஒன்று விட்ட சகோதரியின் திருமணத்தின் போது நான் சிறுவனாக ஈழத்தில் இருந்தேன். அப்போது அவரைப் பார்க்கும் போது அவர் மிகவும் அமைதியானவர் யாருடனும் அதிகம் பேசமாட்டார் என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அந்த அடிப்படையிலேயே அவரிப் பற்றிய எனது அபிப்பிராயத்தை வளர்த்திருந்தேன். ஒரு மனிதரைப் பற்றிய அபிப்பிராயம் அவருடன் நாம் பழகும் போது அவர் எம்முடன் பழகும் விதத்தின் அடிப்படியிலேயே வகுக்கப்படவேண்டும், மற்றவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலே அல்ல என்னும் உண்மையை உணரக்கூடிய வயதோ அனுபவமோ எனக்கு இருக்கவில்லை.

அவருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்கு நான் லண்டன் வந்த பின்பே ஏற்பட்டது. அதுவும் எனது திருமணத்தின் பின்னரே ஏற்பட்டது. நான் மண்முடித்த பின்னர் அப்போது புது மணமக்களாகிய எனக்கும் எனது மனைவிக்கும் தம்முடைய வீட்டிலே விருந்து வைத்த மிகவும் சொற்பமான உறவினர்களில் இவர்களும் ஒருவர் என்பதை மிகவும் நன்றியறிதலுடன் இப்போது நினைகூருகிறேன்.

அப்போதும் கூட என்னை விட மிகவும் வயதில் முதிர்ந்த ஒரு நெருங்கிய உறவினர் என்னும் வகையிலும், இவர் மீது நான் சிறுவயதில் ஏற்படுத்தியிருந்த பிழையான அபிப்பிராயத்திலும் எனது பழகும் விதம் கொஞ்சம் அந்நியப்பட்டிருந்தது.

83ம் ஆண்டளவில் தான் நான் இவரைப்பற்றி முழுமையாக அறியக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. ஈழத்திலே நடந்த 83ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னால் உணர்ச்சியால் உந்தப்பட்டு பல ஈழத்தமிழ் சமூக, அரசியல் நிகழ்வுகளை முன்னின்று ஒழுங்கு செய்து கொண்டிருந்த வேளையில் இவரும் அதே அரங்குகளில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதைக் கண்டதும் தான் எனக்கு இவரது உண்மையான உள்ளத்து உணர்வு புரிந்தது.

மனிதாபிமான உணர்வுகளில் அவருக்கு இருந்த அதீத அபிமானத்தைக் கண்டு வியந்தேன். மற்றையோரின் அபிப்பிராயங்களை வைத்து ஒருவரை எடை போடுவதில் உள்ள தவறைக் கண்டு என்மீது நானே கோபம் கொண்டேன்.

வாழ்க்கையின் மத்திய பருவத்தை அடைந்த பின்னால் குடும்ப நிகழ்வுகளின் முக்கியத்துவம் புரிந்த பின்னால், பங்கு பற்றிய குடும்ப நிகழ்வுகள் அனைத்திலும் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின்பு நான் “தமிழ்ப்பூங்கா” இதழை ஆரம்பித்ததும் அவருக்கு முதல் இதழை அனுப்பி வைத்தேன் மிகவும் ஆவலாக அதைப்படித்துத் தனது கருத்தைக் கூறினார். அன்றிலிருந்து தமிழ்ப்பூங்கா வாசகர்களில் முக்கியமானவராகவும் ஆகி விட்டார்.

வாசகராக இருந்த அவரை மருத்துவத் துறையில், மனோ தத்துவத்துடன் சம்பந்தப்பட்டவைகளை ஏன்
நீங்கள் தமிழ்ப்பூங்காவில் எழுதக்கூடாது என்று அவருக்கு தூண்டுதல் கொடுத்து தமிழ்ப்பூங்கா இதழ்கள் சிலவற்றில் அவருடைய ஆக்கங்களை இட்டேன்.

அவ்வாக்கங்களைக் கண்ணுற்ற ஈழத்து முன்னனி எழுத்தாளர் அண்ணன் அ.முத்துலிங்கம், ” ஓ இது என் பள்ளித் தோழனல்லவா? அவரை எழுதத்துண்டியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதக் கண்ணுற்றதும் நாம் எமது பள்ளி நாட்களில் நடத்திய கையெழுத்துப் பிரதி ஞாபகத்திற்கு வருகிறது ” என்று கூறி தனது நண்பனின் நினைவுகளில் மூழ்கித் திளைத்தார்.

அப்போதுதான் அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய பள்ளித்தோழர்கள் என்பதை அறிந்தேன். அதன் பின்பு அவருடன் பேசும் போது மிகவும் சந்தோஷமாக அண்ணன் முத்துலிங்கத்தைப் பற்றி இருவரும் பேசுவோம். தனது நண்பனின் அதீத எழுத்துத் திறமையைப் பற்றி அவர் மிகவும் மகிழ்ந்து பேசுவார்.

ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு தமிழ்நூல் வெளியீட்டு விழாவிவ் ஆய்வுரையைத் தயார் செய்வதற்காக என்னிடம் தமிழ் எழுத்திருவைப் பெற்றுக்கொள்ள ஆலோசனை கூறினார். சுமார் ஒரு மணிநேரம் இருவரும் தொலைபேசி வாயிலாக சம்பாஷித்து அவருடைய கணனியில் தமிழ் எழுத்துருவை இறக்க என்னாலான உதவிகளைப் புரிந்தேன்.

என்னுடைய “தமிழ்ப்பூங்காவில் வண்ணமலர்கள்” வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கடந்த இருவாரங்களுக்கு முன்னால் எனது சிற்றன்னையின் இறுதியாத்திரையின் போது என்னருகே அமர்ந்திருந்து அவர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பைபிளைப் பார்த்து அதைபற்றிய ஒரு ஆழ்ந்த சம்பாஷணையில் ஈடுபட்டார்.

ஜயகோ, அந்த அற்புத மனிதநேயம் மிக்க மனிதர், எனது ஒன்றுவிட்ட சகோதரியின் கணவர் நேற்று அதிகாலை மாரடைப்பால் தீடிரென மரணமான செய்தி கேட்டு என் உள்ளம் துடித்தது. இப்போதும் கூட அவரது ஆணித்தரமான ஆனால் அமைதியான குரல் என் செவிகளினுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

அடுக்கடுக்காகத் துயரைத் தந்த இறைவனின் நோக்கமறியாது மனதினுள் விளையும் கேள்விகளோடு அல்லாடுவதுதான் எனது இன்றைய நிலை.

உள்ளத்து உணர்வுகளைக் கொஞ்சம் சத்தமாய்ப் பகிர்ந்து கொண்டேன்.

உணர்வின் ஓசைகள்
உள்ளத்தின் மொழிகள்
இசைக்கின்ற ராகமோ
இப்போது முகாரிதான்

தப்பாமல் தெரியும் உண்மை
எப்போதும் கசப்புத்தான்
நிற்காதோ கால ஓட்டம்
கற்காத பாடம் வலிக்கும்

கண்முன்னே தெரிந்த சொந்தம்
கற்றாகிக் கலந்த நேரம்
கண்ணீரின் கதைகள் கூறும்
காணாத உலகின் தூரம்

புரிந்ததைச் சொன்னேனா?
சொன்னதைப் புரிந்தேனா ?
முன்னதை அறியாததால்
பின்னதில் மனவோலம்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

| Posted in கட்டுரை

Leave a Reply