Subscribe to RSS Feed

நெஞ்சத்தைப் புண்ணாக்கிய உதயத்துத் தாரகை

on March 1st, 2010 by sakthi

உள்ளத்தின் உள்ளே ஒரு உதயத்துத் தாரகை – கண்ணே
உன்மத்தம் கொள்ள வைக்குதடி
உன்வசமாகிய என்மனம் என்னுடன் யுத்தம் புரியுதடி – கண்ணே
உன்னைத் தேடியலையுதடி

பல்வகைக் கனிகளின் ரசத்தைக் கலந்ததொரு பானம் போல – கண்ணே
பச்சைக்கிளி யுந்தன் எண்ணம் என்னை மயக்குதடி
புல்வெளி மீது உச்சி வெய்யிலில் உருள்வது போல – கண்ணே
புதுப்புது உணர்ச்சிகள் ஊறுதடி

மஞ்சள் மாலைப் பொழுதினில் வீசிடும் தென்றலைப் போல – கண்ணே
மெல்லியதாயொரு இனிய சுகம் உடலைத் தழுவுதடி
மங்கையுந்தன் செவ்விதழின் வடிவம் கண்ணில் – கண்ணே
மீட்டிடும் ராகங்கள் கீதமாய்ப் பொழியுதடி

வெறும் வார்த்தைகள் வீசி உந்தன் இதயத்தைத் தழுவி – கண்ணே
வாழ்க்கையில் கண்டதொன்றுமில்லையென நெஞ்சம் கூவுதடி
வெஞ்சமர் தன்னில் பொருதிப் புண்ணாகிய மார்பு போல – கண்ணே
நெஞ்சம் என் நெஞ்சம் உன் நினைவுகள் கீறி வலிக்குதடி

| Posted in கவிதை

Leave a Reply