Subscribe to RSS Feed

சித்தர்களின் சித்தத்திலே …… (4)

on February 26th, 2010 by sakthi

சித்தர்கள் என்போர் யார் ? இவர்கள் இருந்தார்களா ? இல்லையா ? . சித்து வித்தைகள் எல்லாம் மாயாஜாலம். மனிதனை மனிதன் ஏமாற்றும் வகை என்றெல்லாம் பகுதறிவிற் சிறந்த பலரால் வாதிடப்படுவதை அறியாதவனல்ல நான்.

அனைத்தையும் புறந்தள்ளி எதனையும் அழகாக கருத்தியல் மூலம் பொய்யாக்க முனைந்து என்னையும் அறிவுடையவனாகக் காட்டிக் கொள்ளும் ஒரு தீவிரமான நாத்திக்கக் கொள்கையைக் கொண்ட ஒருவனாக நான் ஒரு காலத்தில் இருந்தவன்.

வாழ்க்கையில் பட்ட அடிகள் கொடுத்த வலிகள் புகட்டிய பாடத்தின் மூலம் உண்மைகளைக் காண விளைந்த போது என்னை எண்ணி நானே வெட்கப்பட்டேன். என்னுள் நான் கொண்டிருந்த தற்பெருமை, மற்றவர்கள் முன்னால் நான் அறிவுள்ளவன் என்று காட்டிக் கொள்ள என்னுள் இருந்த வேகம் என்பன என்னைப் பார்த்து எள்ளி நகையாடின.

அதற்காக நாத்திகம் பேசுபவர்கள் எல்லாம் அடித்தளமின்றியோ அல்லாவிடில் பொழுது போக்கிற்காகவோ பேசுகிறார்கள் என்பதல்ல என் கருத்து. என்னைப் பொறுத்த மட்டில் நான் வைத்த வாதங்கள் வெறும் வாதங்களாக இருந்தன என்பதுவே உண்மை.

இந்தப் பின்னனியில் தான் சித்தர்களைப் பற்றி அறிவதில் சிறிது ஆர்வம் கொண்டேன். அப்போது நான் அறிந்து கொண்ட உண்மை ஒன்று. சித்தர்கள் என்பவர்கள் இருந்தார்களா? இல்லையா? என்ற வாதத்தை ஒருபுறந் தள்ளி வைத்துவிட்டு, அவர்களின் சித்து விளையாட்டுக்களை ஒதுக்கி விட்டு அவர்களது பாடல்களை மட்டும் தனியே எடுத்துப் பார்த்தோமானால் அவற்ரில் புதைந்திருக்கும் கருத்துக்களின் கனம் என்னைச் சிந்திக்கத் தூண்டியது.

வாழ்க்கையின் தத்துவங்களை அவர்கள் தெள்ளத்தெளிவாக இயம்பியிருக்கும் முறை என்னை வியக்க வைக்கிறது. அந்த அடிப்படையில் இதோ நான் இங்கே பார்க்க விழைவது,

காஞ்சிபுரத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் கடுவெளிச்சித்தரின் பாடல் ஒன்றையே நான் வியந்து நோக்குகிறேன்.

உலகையே சுத்தவெளியாக நோக்கி தனது தத்துவப்பாடல்களை யாத்ததினால் இவர் கடுவெளிச்சித்தர் என அழைக்கப்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள்.

மற்றும் சிலரே சோழநாட்டிலுள்ள கடுவெளி என்னும் ஊரத் தனது பிறப்பிடமாகக் கொண்டததினால் இவர் கடுவெளிச்சித்தர் எனறழைக்கப்படுகிறார் என்கிறார்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் வகையில் அமைந்த இவரது ஒரு பாடலைத் தழுவிய என் மழலை வரிகள்,

பசுந்சோலைதனில்
மலர்களினடுவே
மனமயங்கியிருந்த
மதிகெட்ட மனிதனவன்
மனதிலொரு ஆசை கொண்டு
கட்டிலிலே மனையாளொடு
குழாவியொரு சிறு
தொட்டிலை நிரப்ப
ஜயிரண்டு மாதமன்றோ
அவதிYஇறாள் மங்கையவள்
முல்லையாய் மலர்ந்த அம்மழலை
முதிர்ந்ததும் ஜயகோ
மூளைகெட்ட மானிடனாய்
தாய்தந்தை தவமிருந்து
தாமடைந்த அப்பூவுடலை
மண்குடம் போட்டுடைப்பதைப் போலே
மண்மீது வீணடித்தானே !

சக்தி

வாழ்க்கைக்கு தேவையான தத்துவத்தை அழகான சிறிய ஓர் படைப்பாக்கி இக்கடுவெளிச்சித்தர் எப்படித் தருகிறார் என்று பார்ப்போமா !

நந்தவனத்திலொரு ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி

இத்தகிய அற்புத தத்துவ முத்துக்கள் விளைந்த உள்ளத்தில் ஊறிக்கிடந்த சமுதாய விழிப்புணர்ச்சி இவரது மற்றொரு பாடலில் தெரிகிறது.

நல்லவனைப் போலே நடிக்காதே – மனிதா
கள்வனின் வடிவாகாதே
தப்பான வழி உறவுகளை – மனிதா
தவறிக்கூட நீ இழைக்க எண்ணாதே
உன் சொந்தம் இல்லாப் பொருளை – மனிதா
உன் வசம் ஆக்க முனையாதே
நண்பனைப் போல் உறவாடி – மனிதா
நயவஞ்சகமாய் பகை மூட்டாதே

ஆமாம் உலகில் மனிதனின் உள்ளம் அவனுக்குக் கொடுக்கும் உபத்திரவங்களை அவன் அடையும் மார்க்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, கடுவெளிச் சித்தர் பகரும் பாடல் அறிவூட்டுகிறது.

ஆக மொத்தம் சித்தர் என்போர் மனிதர்களின் சிருஸ்டிப்பா என்னும் கேள்வியை விடுத்து சித்தர்கள் கூறும் பொருள் மிக்க பாடல்களை ஒஉரிந்து கொள்வது மனதின் மென்மையை வளர்க்கும் என்பதே உண்மை.

(மீண்டும் சந்திப்போம்)

சக்தி சக்திதாசன்

| Posted in இலக்கியத்திடல்

2 Responses to “சித்தர்களின் சித்தத்திலே …… (4)”

 1. நிகழ்காலத்தில்..
  February 26th, 2010 at 7:35 am

  மனிதனாக இருந்து மகானாக மாற்றம் பெற்றவர்கள் சித்தர் பெருமக்கள். அவர்களை தாங்கள் இங்கே குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி

  வாழ்த்துகள்

 2. udayakumar
  February 26th, 2010 at 7:40 am

  கட்டுரை மிகவும் அருமை. எல்லோரும் கடவுள் என்ற ஒன்றை தூலமாக காண முடியாததால் கடவுள் இல்லை என்ற தர்க்கத்திற்கு வந்து விடுகிறார்கள். சித்தர்களின் பாடல்களில் ஞானத் தீயினை வளர்க்கும் அறிவு மிகுந்த கருத்துக்கள் நம்மை உண்மைத் தளத்திற்கு அழைத்து செல்லும் என்பதுநிதர்சனம்

Leave a Reply