Subscribe to RSS Feed

எதைத் தேடுகின்றோம் ?

on March 22nd, 2009 by sakthi

11970858191941124243johnny_automatic_running_homesvgthumb

சிறுபையன் ஒருவன் ஒருநாள் கடைவீதி வழியாக தன் தாயுடன் நடந்து கொண்டிருக்கும் போது அங்கே உள்ள கடை ஒன்றிலே ஓர் அழகான பொம்மைக்கார் ஒன்றைக் காணுகின்றான்.அந்தப் பிஞ்சு மனதினிலே தன் தாய் அந்தக் காரை தனக்கு வாங்கிக்கொடுப்பாள் எனும் ஓர் நம்பிக்கை ஆழமாகப் பதிந்து விடுகின்றது . அந்தக்காரை வைத்து தான் விளையாடப்போகும் காட்சிகள் அவன் மனதினிலே அழகான கனவுகளாக உருவெடுக்கின்றன.அந்தக்காரை அடைவதும் அதனை வைத்துத் தான் விளையாடுவதுமே அத்தருணத்தில் அவனது லட்சியக்கனவாகி விடுகின்றது.

ஒவ்வொரு பிறந்ததினத்தின் போதும் , பண்டிகைநாட்களின் போதும் தன்னுடைய உள்ளக்கிடக்கையை தனது தாய்க்கு ஜாடைமாடையாக வெளிப்படுத்துகின்றான். இறுதியாக ஓர்நாள் அவனது அன்னை அந்த பொம்மைக்காருடன் வீடு வருகின்றாள்.அந்த சிறுவனின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கித்தாண்டவமாடுகின்றது.அவனுடைய இலட்சியக்கனவு பலித்துவிடுகின்றது.அடுத்தடுத்து பலநாட்கள் அந்தக்காரை தனது கனவுகளுக்கேற்ப பலவிதமாக விளையாடிப்பார்க்கின்றான்.சிலநாட்களிலே அவனைப்பொறுத்தமட்டிலே அது வெறும் பொம்மைக்கார் ஆகிவிடுகின்றது.

மேலே குறிப்பிடப்பட்டது ஓர் கற்பனைக்கதை. நாமெல்லோரும் எதையோ ஒன்றைத்தேடி ஓடிக்கொண்டிருகின்றோம் என்பதுவே ஓர் நிதர்சனமான உண்மை.எம்மில் எத்தனைபேரின் வாழ்க்கையிலே நாம் தேடி ஓடும் அந்த இலட்சியக்கனவு மேற்கூறிய அந்தச்சிறுவனின் பொம்மைக்காரைப்போன்றதாகும் ? .

இலட்சியமில்லாத வாழ்க்கை ஓர் பாலைவனம் போன்றதாகும் ஆனல் வாழ்க்கையின் ஒரு கட்டத்திலே இருக்கும் இலட்சியம் இன்னொரு கட்டத்திலே  அர்த்தமற்றதாகிவிடுகின்றது . அப்போது அதைத்தேடி அடைய நாமெடுத்த முயற்சிகள் , அதற்காக செலவழித்த காலங்கள் விழலுக்கிரைத்த நீராகின்றது.

நாம் வாழ்க்கையிலே கொண்டிருக்கும் இலட்சியம் எந்த வகையிலே ? எப்போது ? எப்படி ? எமக்கு மனத்திருப்தி அளிக்கப்போகின்றது என்பதுவே முக்கியம். ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம் .

மூன்று நண்பர்கள் செல்வந்தர்களாவதற்காக தெய்வத்தை நோக்கி தவம் புரிகின்றார்கள் , தெய்வமும் அவர்களின் தவ
த்திற்கிரங்கி அவர்களின் முன் தோன்றி ஒவ்வொருவரையும் நோக்கி ,” நீங்கள் மூவரும் என்ன காரணத்திற்காக பணத்தை தேடுகின்றீர்கள் எனும் காரணத்தைக் கூறுங்கள் அதன் பின்பு நான் உங்களுக்கு வேண்டியதை அளிப்பேன்” என்று கூறுகின்றது.

அதற்கு முதலாமவன் ” நான் பெரிய செல்வந்தனாகி வீடு ,காருக்கு சொந்தக்காரனாகி செல்வந்தர்கள் மத்தியில் நடமாட வேண்டும் ” என்றான் . இரண்டாமவனோ ” நான் செல்வந்தனாகி , அழகிய மனைவியை அடைந்து , புத்தியிற் சிறந்த பிள்ளைகளைப்பெற்று மகிழ்வுடன் வாழவேண்டும்” என்றான் .மூன்றாமவனோ ” நான் அளவான செல்வத்தை அடைந்து , எனக்கும் , எனது மனவி பிள்ளைகளுக்கும் கஸ்டமின்றி வாழத்தேவையானதை வைத்துக்கொண்டு மீதியின் மூலம் , திறமையிருந்தும் வாழ்வில் முன்னேற சந்தர்ப்பம் இன்றி தவிக்கும் ஒருசிலரின் வாழ்விலாவது ஓர் மகிழ்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்” என்றான்.

அவர்களின் விருப்பப்படியே வரத்தை அளித்த தெய்வம் , 10 வருடங்களின் பின் மீண்டும் இதே இடத்தில் தன்னைச் சந்திக்கலாம் எனக்கூறி மறைந்தது.முதலாவது மனிதன் விரைந்து சென்று ஒர் லாட்டரி டிக்கட் வாங்கினான் அடுத்தவாரமே லட்சாதிபதியானான் , இரண்டாமவன் தன்னிடமிருந்த பணத்தை ஓரு குதிரையின் மீது கட்டினான் அதன் பயனாக பெரும்வெற்றியீட்டி மிகுந்த செல்வங்களுக்கு அதிபதியானான்.மூன்றாமவனோ ஓர் திடகாத்திரமான ஓர் பெயர் பெற்ற கம்பெனியிலே ஓர் சாதாரண ஊழியனானான்.

பத்துவருடங்களின் பின்னர் தெய்வம் அவர்களுக்கு காட்சியளித்த இடத்தில் முதலாமவனும் , இரண்டாமவனும் சந்தித்தார்கள்.மூன்றாமவனைக்காணாதது அவர்களுக்கு ஓர் புதிராகவே இருந்தது.தெய்வமும் அவர்களின் முன்னே காட்சியளித்தது.
அந்த இரண்டுபேரையும் பார்த்து தெய்வம் , உங்கள் ஆசை நிறைவேறியதா? எனக்கேட்டது . அதற்கு முதலாமவன் ” இறைவா நான் வேண்டிய அளவிற்கு அதிகமாகவே பணம் கிடைத்தது , நானும் செல்வந்தர்கள் மத்தியில்தான் நடமாடிக்கொண்டிருக்கின்றேன் ஆனால் என்னருகே உண்மையானவர்களைக் காணோமே? அவர்களின் அருகே நான் எப்போதுமே எனது முதுகுப்புறம் அவதானமாகவே இருக்கவேண்டியுள்ளது,நான் நானாக இருக்கமுடியவில்லையே ” என்றான்.

இரண்டாமவனோ ” இறைவா எனக்கும் பணம் கிடைத்தது , செல்வந்தனாகினேன் அழகான மனைவியும் கிடைத்தாள் , புத்தியுள்ள பிள்ளைகளையும் அடைந்தேன் ஆனால் ஒருவரிடமும் உண்மை அன்பைப் பெறமுடியவில்லையே ” என்றான்.
அவர்களைப்பார்த்து தெய்வம் சிரித்தது.அப்போது இரண்டாமவன் “இறைவா எம்முடன் அன்று உன்னைச் சந்தித்த அந்த மூன்றாவது மனிதன் என்ன ஆனான் ?” என்று கேட்டான். அதற்கு தெய்வம் ” அவன் தனது தகுதிக்கேற்ற ஓர் வேலையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் , ஓர் பெரிய பதவியில் இருக்கின்றான்.. தனக்கும் தனது குடும்பத்திற்கும் வசதியாக வாழத்தேவையானது போக , மீதியின் மூலம் பல கஸ்டப்பட்ட மனிதர்களின் வாழ்வை உயர்த்தியிருக்கின்றான்.” என்றது.

“அவன் ஏன் இங்கே வரவில்லை ?” எனறான் முதலாமவன் . புன்னகைத்த இறைவன்” உங்கள் ஆசைகளிலே முழுவதையும் இழந்த நீங்கள் , மனத்திருப்தி என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டீர்கள் , இன்று உங்களை நீங்களே அறிந்துகொள்ள நான் தெவைப்படுகின்றேன் ஆனால் அவனோ , மனத்திருப்தியே தெய்வம் எனும் உண்மையை அன்றே அறிந்துகொண்டான்,தன்னைத்தானே அறிந்துகொண்டவன் என்னைத்தேடி வரவேதேவையில்லை “என்றான்.

மேலேகூறியது ஓர் கற்பனைக்கதையே ஆனால் நாம் வாழ்க்கையில் தேடுவது எந்தவகையில் எமக்குத்திருப்தி அழித்தாலும் அது எமது உள்ளத்தின் உண்மைவடிவை எமக்கு காட்டக்கூடியதா? எனபதுவே முக்கியம் என்பதையே அது விளக்குகின்றதுழ். வாழ்க்கையின் வசதி எனும் அந்தக்கோபுரத்தை அடைய நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொருஅடியும் பணிவு , கருணை , பாசம் எனும் குணங்களின் வழியாக என்றால் அந்தக்கோபுரத்தை நாம் , மெய்யறிவு எனும் விளக்கின் ஒளியிலே அடந்தோம் என்றே பொருள்.

எமது லட்சியத்தை அடைய மனட்சாட்சியை அடகு வைக்கக்கூடாது.நிம்மதியை விற்று வசதியை வாங்கக்கூடாது . கண்களை விற்றுவரும் பணத்தில் வாங்கும் சித்திரத்தை எப்படி ரசிக்கப்போகின்றோம். எமது கனவுகள் நியாமாக இருக்கவேண்டும்.

| Posted in உன்னை ஒன்று கேட்பேன் ....

Leave a Reply