Subscribe to RSS Feed

காலத்தோடு சந்தித்த மாற்றங்கள் – இங்கிலாந்து

on March 19th, 2009 by sakthi

 

 

 

 

thinkingmanstatue.gif Thinking man statue image by nataschamarie

என் மனமெனும் புத்தகத்தை 34 பக்கங்கள் பின்னால் புரட்டுகின்றேன் .1975ம் ஆண்டு ஜனவரி மாதம் , 19 வ்யது
வாலிபனாக உயர் கல்வி கற்பதற்காக  இங்கிலாந்தில் நான் கால் பதித்த அந்த நாள் மனதினில் படம் போல் இன்னும் நிழலாடுகின்றது .

 

என் சுற்றத்தைப் பிரிந்து , மனதினில் வசந்தகால நினைவுகளை நிலையாக்கிய என் உயிர் நண்பர்களைப் பிரிந்து
நான் தவழ்ந்து மகிழ்ந்த அந்தத் தாய் மண்ணைப் பிரிந்து பல ஆயிரம் மைல்களுக்கப்பால் சுமந்து கொண்டு வந்து
என்னை புது உலகில் தத்தளிக்க விட்ட அந்த  ஆகாயவிமானத்தின் மீதும் எனக்கு ஏனோ இனம் தெரியா வெறுப்புத்தான்.

 

எதற்காக இங்கிலாந்து வந்தேன் ? நியாயமான கேள்வி .

 

ஈழத்திலே உயர் கல்வியைத் தொடர முடியா நிலையில் பல ஆயிரம் மாணவர்கள் தவித்த காலகட்டம் ஆனால் நானோ எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தாமல் என் சொந்த ஊரில் கோட்டை விட்ட எதிர்காலத்தை அந்நிய தேசத்தில் தேடி ஓடி வந்தேன் என்பதுவே உண்மை. உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம் தன்னைப் புடம் போட முடியாது என்பது எனது தாழ்ந்த அபிப்பிராயம்.

 

பல வருடங்கள் ஓடிய பின்னால் நான் ஒரு தந்தை எனும் அந்த ஸ்தானத்தை என் மகன் எனக்களித்ததின்
பின்னால் இன்று காலத்தோடு நான் சந்தித்த மாற்றங்கள் – இங்கிலாந்தைப் பொறுத்த வரையிலே எப்படியானது
என்பதை என் கருத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் ஓர் சிறு முயற்சிதான் இது.

 

அந்தக் காலகட்டத்திலே இங்கிலாந்தில் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் இரண்டு வகையான சூழலில் தன்னைப்
பிணைத்திருந்தது . இந்தியாவோ , இலங்கையோ தமது பட்டப்படிப்புக்களை முடித்த பின் , வளமான வாழ்வு தேடி இங்கிலாந்திலே நிலைபெற்றவர் ஒருவகை , மேற்படிப்புக்காக தமது நாடுகளில் இருந்து இங்கிலாந்து வந்து தமது கல்வித்தகமைகளைப் பெற்றுப் பின் இங்கேயே தமது வாழ்க்கைகளை ஸ்திரப்படுத்தியவர்கள்
மற்றொருவகை.

 

இதைத்தவிர மூன்றாவது வகை , மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்து தொடர்ந்தும் தமது கல்வியைத்
தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவ சமுதாயம் . அப்போதைய நான் இந்த மூன்றாவது வகையினிலேயே
அடங்கினேன்.

 

அப்போதைய இங்கிலாந்து வித்தியாசமானதாகவே இருந்தது . அந்த தமிழ் மாணவ சமுதாயத்தினிடையே என்னவென்று விபரிக்க முடியாத நட்பு , பாசம் மலர்ந்திருந்தது . காலேஜிலே தான் பரீட்சையில் சித்தியடைவது மட்டுமல்ல மற்றையோரும் சித்தியடைய வேண்டும் எனும் எண்ணம் மேலோங்கி இருந்தது போன்ற ஓர் நிலமை தென்பட்டது.

 

படிப்பது மட்டுமன்றி எம்மைப் பராமரிக்கும் வண்ணம் மாணவர்கள் எல்லோருமே பகுதிநேர ஊழியம் புரிபவர்களாக இருந்தார்கள் . ஆனால் அது என்னைப் பொறுத்தவரை ஒரு வித்தியாசமான , விரும்பத்தக்க , அதிசயமான
அனுபவமாகவே இருந்தது.

 

ஆமாம் , அன்னை நாட்டை விட்டு வெளியேறும்வரை , தாய்தந்தையராலே பராமரிக்கப் பட்டு வந்த நான்
திடீரென பரந்த அந்த உலகில் வீசியெறியப்பட்டது போன்ற ஒரு உணர்வு. என்னை நானே பராமரிக்க வேண்டிய ஓர் நிர்ப்பந்தம் ஆனால் இப்போது எண்ணிப் பார்க்கையில் அந்த அனுபவம் தந்த பாடங்கள் ஆயிரமாய்க் கொட்டினாலும் கிடைக்காது.

 

எனது அந்த மாணவப் பருவத்திலிருந்து இன்றைய குடும்பத் தலைவன் எனும் பருவம்வரை இங்கிலாந்து ,
காலத்தால் கண்ட மாற்றங்கள் ஏராளம். 

 

காலநிலையில் மாற்றம் , இங்கிலாந்து நாட்டு மக்களின் மனநிலையில் மாற்றம் , விஞ்ஞானத்தில் மாற்றம் ,
தமிழ்ச் சமுதாயத்தின் வெளிப்பார்வையில் மாற்றம் இப்படியாக இங்கிலாந்தின் மாற்றங்களின் பட்டியல்
இந்த 34 வருட காலத்தில் பலவழிகளில் நீண்டு கொண்டே போயிருக்கின்றது.

 

சமீப காலங்களில் இங்கிலாந்து நாட்டில் நாம் அனுபவிக்கும் இந்த முற்றிலும் மாறுபட்ட காலநிலை முன்பொரு பொழுதிலும் காணாத வகையினில் மாறுபட்டிருக்கின்றது . கோடை காலங்களின் வெப்பம் அதிகமாக
பொழிகின்றது , அதேசமயம் இலையுதிர்காலத்தில் அதிவேகமான காற்று அநேக விபரீதங்களை
ஏற்படுத்துகின்றது.

 

அத்தோடு மட்டுமல்லாமல் கோடைகாலங்கள் வழக்கத்திற்கு விரோதமாக புரட்டாதி மாதம் வரை நீண்டு செல்லும் ஓர் நிலைப்பாட்டைக் காண்கின்றோம் . இதற்கு காரணமாக சூழலைப் பாதுகாக்காமையை பல விஞ்ஞான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

நான் வந்த காலங்களுக்கும் , இப்போதைய காலத்திற்கும் இடையே ஓர் வேறுபாடாக இங்கிலாந்தில்
வியாபித்திருக்கும் இந்திய உணவுச்சாலைகளைக் குறிப்பிடலாம். எமது தேச உணவு வகைகள் இங்கிலாந்து தேசத்தவரிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது எனலாம்.

 

அது மட்டுமன்றி , ஸ்ரீலங்கா உனவு வகை , மலேசிய உணவுவகை , சிங்கப்பூர் உணவு வகை என பல சர்வதேச உணவு வகைகளை பரிமாறும் உணவு விடுதிகள் மலிந்து காணப்படுகின்றன. இந்திய , ஆசிய சமையலலுக்குத் தேவையான சமையல் பண்டங்களை வாங்கக்கூடிய கடைகள் , முக்கிய நகரங்களில் உள்ள எல்லாத்
தெருவுகளிலேயும் காணப்படுகின்றன.

 

நான் வந்த அந்தக் காலகட்டங்களிலே , எமது ஆசிய உணவை உண்பதற்கு , இங்கே குடும்பமாக வசித்து வந்த இந்தியர் அல்லது இலங்கை நண்பர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் .அல்லாவிட்டால் இருந்த அந்த சில இந்திய உணவு விடுதிகளில் மிகவும் விலை கொடுத்து அந்த வகையான உணவை அருந்த வேண்டும்.

 

ஆனால் இன்றுள்ள இளைஞர்கள் அதிர்ஷ்டமிக்கவர்கள் .

 

அப்பப்பா !

 

ஆசிய உணவு கிடைக்காத இடமேயில்லை என்றே கூறலாம் . அது மட்டுமல்ல , வியாபாரப் போட்டிகளின்
நிமித்தம் மலிந்த விலைகளில் இந்த உணவு கிடைக்கும் ஒரு கால கட்டமாக இருக்கின்றது.

 

இங்கிலாந்திலுள்ள ஆசிய வர்த்தக நிலயங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா . வாரம் ஒரு தமிழ் சினிமாப் படம் பல இடங்களில் திரையிடப்படுகின்றன. வி.சி.டி , ஆடியோ , டி..வி.டி தமிழ்த் திரையுலக சாதனங்கள் மிகவும் மலிந்த விலையில் வாங்கக் கூடிய பல தமிழ் வர்த்தக நிலையங்கள் இயங்குகின்றன.

 

இந்து ஆலயங்கள் , தமிழ்ப்பாடசாலைகள் என பல தமிழ்க் கலாச்சார அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ளன.
விரதங்கள் , திருவிழாக்கள் எமது நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதை விட மிகவும் தீர்க்கமாக இங்கே
கடைப்பிடிக்கப்படுகின்றது.

 

தமிழ்க் குழந்தைகளுக்கு  இசை , நாட்டியம் , மிருதங்கம் , புல்லாங்குழல் போன்ற கலைகள் மிகவும் இளம் வயதிலிருந்தே போதிக்கப்படுகின்றது. ஒரு பக்கம் , தமிழ் கலச்சாரத்தின் பராமரிப்பைக் கண்டு மகிழ்ந்தாலும் , மறுபுறம் இது ஒரு சமுதாய நாகரீகம் எனும் போக்கில் சிறுவர் , சிறுமிகள் கட்டாயப் படுத்தப் படுகின்றார்களோ என ஒரு ஜயம் மனத்தை உறுத்துகின்றது.

 

ஆயிரக்கணக்கில் செலவு செய்து நட்டிய அரங்கேற்றங்கள் நடைபெறுகின்றன . இங்கிலாந்துத் தமிழ்ச் சமுதாயம்
மிக வேகமாக , மூர்க்கத்தனமாக கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்றோம் என்றெண்ணி இந்தச்சுழிக்குள்
மீளமுடியாமல் சிக்கி விடுவார்களோ ? என ஓர் கருத்து பல நல்லெண்ணம் கொண்ட நெஞ்சங்களில்
நீந்துகின்றது.

 

ஆம் காலத்தினால் தமிழ்ச்சமுதாயம் இங்கிலாந்தில் கண்ட மாற்றங்கள் அளவிலடங்கா .

 

இங்கிலாந்து மக்கள் வேற்றின மக்கள் கொண்ட மனப்பன்மையும் இந்தக் கால இடைவெளியில் பல
மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

 

எப்படி என்கின்றீர்களா ?

 

அன்றைய காலத்திலே இங்கிலாந்திலே வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் , ஒன்றில் மாணவர்களாகவோ அன்றி அந்தஸ்து மிகுந்த பதவிகளையோ வகித்து வந்தார்கள் எனவே அவர்களை நோக்கிய மற்றைய சமூகங்களின்
பார்வைகளும் வித்தியாசமானதாக மிகுந்த ஒன்றாக இருந்தது.

 

ஆனால் இன்றைய இங்கிலாந்தில் வேற்று இனத்தவரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததின் காரணத்தால் ,
நிறவெறிக் கட்சிகளுக்கான ஆதரவு இங்கிலாந்து மக்களிடையே கூடி இருக்கின்றது. இதன் நிமித்தம் தமிழ்ச்
சமுதாயத்தின் மீதான பார்வையும் இந்த வெளிச்சத்திலேயே பார்க்கப்படுகின்றது.

 

சமீபகாலங்களிலே இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியும் பல ஆயிரம் இலங்கைத் தமிழர்கள்
குடியேறியுள்ளார்கள். இவர்களில் பெரும்பான்மையனவர் சட்டம் , ஒழுங்கு ஆகியவற்றைக் கடைப்பிடித்து
வருகின்றபோதும் , சில தமிழிளைஞர்களின் முறையற்ற நடத்தையினால் அது முழுச் சமூகத்தையே தாக்கும் ஓரு
நிலமையேற்பட வழிவகுக்கலாம்.

 

ஆனால் இந்தக் காலத்தின் மாற்றத்தோடு ஏற்பட்ட நன்மைகளை நோக்கினால் !

 

இலங்கை , இந்திய கலாச்சாரங்களின் மகிமை , இங்கிலாந்தின் பெரும்பான்மை மக்களுக்கு புரியக்கூடிய ஓர்
சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான அளவில்
பங்களிப்புச் செய்கின்றார்கள்.

 

பல தமிழர்கள் வணிகத்துறையிலே ஈடுபட்டிருப்பது , அவர்கள் கடின உழைப்பாளிகள் எனும் கருத்தை
இங்கிலாந்து மக்களிடையே உலாவுவிக்கின்றது. விஞ்ஞான வளர்ச்சியின் துரித வேகம் எமது தாய்நாடுகளுக்கு பரவும் வேகம் அதிகரிக்கின்றது.

 

மேலும் பல தமிழர்கள் வெளிநாடுகளில் உழைப்பதன் மூலம் அவர்களது குடும்பங்கள் , உறவினர்களின்
பொருளாதாராச் சிக்கலுக்கு சிறிய விடிவு காணக் கூடியதாகவுள்ளது.

 

இங்கிலாந்து ஒரு தேசமாக இந்த 34 ஆண்டுகளில் பல மாற்றங்களுக்குள்ளாகியிருப்பது வெளிப்படை. இங்கிலாந்து பெரும்பான்மை மக்கள் வெளிநாட்டு விடுமுறைகளை மேற்கொள்ள இங்கு வசிக்கும் வெளிநாட்டுக்காரரின்
தாக்கம் உதவியிருக்கின்றது.

 

விவாகரத்து , மற்றும் திருமணம் புரியாமல் ஒன்றாய் வாழ்வது , கருச்சிதைவு இவைகளும் இந்த காலத்தோடு
ஏற்பட்ட மாற்றங்களினால் அதிகரித்த நிலை ஏற்பட்டுள்ளது.

 

இங்கிலாந்துத் தமிழர்களின் காலத்தோடு கூடிய மாற்றம் மிகையானதுதான். தமது தாய்நாடுகளை விட்டு வெளியே வந்த தமிழர்கள் , ஒரு புதிய சூழலில் தமது சமுதாயம் சுழல்வதை உணர்ந்துள்ளார்கள்  .

 

நாகரீகம் , மற்றைய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆஅகியவையும் எமது சமூகத்திடையே முன்னேறியுள்ளது.

 

மிகவும் பரிதாபகரமான நிலமை என்னெவென்றால் , எமது தாய்நாடுகளில் நாம் வசிக்கும்போது எமது உள்ளத்தில்
புரையோடிப்போயிருந்த சில மூட நம்பிக்கைகள் மாத்திரம் இந்தக் காலத்தின் மாற்றத்தை எதிர்த்து இன்ன்னமும் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதே !

 

ஒவ்வாதவற்றைக் காலத்தோடு களைவோம் , ஒத்தவைகளை கவசமாக அணிவோம் , வாருங்கள் 21ம் நூற்றாண்டுக்குச் செல்லுவோம்.

| Posted in சத்தமுமில்லை யுத்தமுமில்லை

One Response to “காலத்தோடு சந்தித்த மாற்றங்கள் – இங்கிலாந்து”

  1. Kiri Kamal
    March 19th, 2009 at 8:52 am

    Very nice one…

    Thankz to share ur memories…!!!

Leave a Reply