Subscribe to RSS Feed

நாகரீகம் என்றால் என்ன ?

on March 19th, 2009 by sakthi

0060-0502-1819-31212

 

நாகரீகமாக நடந்து கொள் !
மேலைத்தேசத்து நாகரீகம் !
நாகரீகமான சமுதாயம் !

 

இவையெல்லாம் எமது அன்றாட வாழ்விலே நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் . இந்த நாகரீகம் எனும் சொல்லின் அர்த்தம் எதனை வைத்து எடைபோடப்படுகின்றது ?

 

இதன் ஆரம்பம் எங்கே ? முடிபு எங்கே ?

 

நாகரீகம் எனும் போது அவைகளை நாம் பலவாறாகப் பார்க்கின்றோம் . நாகரீகமான பேச்சு , நாகரீகமான உடை,நாகரீகமான பழக்க வழக்கங்கள் என நாம் நாகரீகத்தை வகைப்படுத்திக்கொள்கின்றோம்.

 

இவைகளின் உண்மை அர்த்தங்களை நாம் அறிவோமா ? இல்லை என்பது எனது அநுமானம்.

 

ஏன் என்று கேட்கின்றீர்களா ?

 

நாகரீகம் என்பது மனிதநேயம் , மனிதப்பண்பு ஆகியவற்றில் இருந்து திரிபடைகின்றன. ஒரு விருந்தாளி எமது
வீட்டிற்கு அழையாமலே வந்துவிட்டாலும் கூட வாருங்கள் , உட்காருங்கள் , என்ன சாப்பிடுகின்றீர்கள் ? என உபசரிக்கின்றோம்.

 

இதை நாம் நாகரீகம் என்றே கூறுகின்றோம் ஆனால் , பின்தங்கிய நாகரீகமற்ற சமுதாயம் என எமக்கு நாமே முத்திரை குத்திக்கொள்ளும் எமது சமுதாயத்தின் அங்கங்களான எமது பெற்றோர் , மற்றையோர் இந்த வழிமுறையைக் காலம் காலமாக கடைப்பிடித்து வருவதைக் காண்கின்றோம்.

 

அப்படியானால் எதை நாகரீகம் என்கின்றோம்? .

 

வெள்ளை வெளேரென வேட்டி , சட்டை அணிந்துவரும் ஓர் கிராமவாசியையும் , சாதாரண டிராயர் , சார்ட் போட்டுவரும் ஓரு நகரவாசியயும் பார்க்கும்போது யாரை நாகரீகமிக்கவர் என்று கூறுகின்றோம் ? எதை வைத்துக் கூறுகின்றோம் ?

 

மிகவும் பணிவாக , கேட்போரின் மனம் புண்படாதவாறு ஓர் ஆங்கில வார்த்தையும் கலக்காது , சுத்தமான கிராமப்புர தமிழைப் பேசும் ஒருவரையும் , வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலப் பதங்களை தமது சம்பாஷணையில் புகுத்திக்கொண்டு கேட்போரின் மனம் குத்தும் வகையில் பேசும் ஓர் “படித்தவர்” எனப்படுபவரையும் சந்திக்கும்போது , எது நாகரீகத்தின் அளவுகோளாகின்றது ?

 

இது மிகவும் சிந்திக்கப்படவேண்டிய ஓர் கேள்வியாகும்.

 

உடைகளில் கூட , அரைகுறையாக உடை அணிந்துவரும் ஓர் இளம்பெண்னும் , மேலைநாட்டு உடைகள் ஆனால் மிகவும் கச்சித பாணியில் அணிந்துவரும் பெண்னும் ஒன்றாய்க் காணுகையில் யாரை நாகரீகமிக்கவர் என்போம் ?

 

இது மிகவும் அடிப்படையான கேள்விதான் . எம்மை தப்புவித்துக் கொள்ளும் விதமாக , அரைகுறை ஆடையணிந்தவர் அநாகரீகமானவர் என்று சொல்வது மிகவும் சுலபம் . ஆனால் மனச்சுத்தியோடு நியாயமாக  என்ன
விடையளிப்பீர்கள் ?

 

சிந்திக்கும்போது குழப்பமாகவிருக்கின்றது இல்லையா ?

 

எமக்கு விடை தெரியும் என்று முற்றுமுழுதாக நாம் நம்பும் விடயங்கள்கூட திரும்பத் திரும்பக் கேட்கப்படும்போது எம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.

 

பேச்சினிலே நாகரீகம் வேண்டும் என்று சொல்கின்றோம் , மற்றவருடைய மனம் புண்படாது பேசுவது நாகரீகம் என்கின்றோம்.

 

அதேகுரலில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதே என்கின்றோம்.

 

அப்படியானால் எம்மைவிட வயதில் முதிர்ந்தவர் ஒருவர் நம் கண்முன்னே பிழையாக நடந்துகொள்கின்றார் என்றால் அதைப்பார்த்துக்கொண்டு வாளாவிருப்பது நாகரீகமா? அன்றி ஆத்திரமூட்டாவகையில் அவர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என்று அவருக்கு அதைத் தெரியப்படுத்தி அவர் மீண்டும் அப்படி நடக்காது இருக்க உதவுவது
நாகரீகமா? 

 

என்ன தோழர்களே ! கேள்விகளுக்குமேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போகின்றான் என்று
எண்ணுகின்றீர்களா ?

 

சில சமயங்களில் கேள்விகளே கேள்விகளுக்கு விடையாகின்றன. கேள்விகளே சிந்தனை ராட்டினத்தைச் சுழற்றத்
தொடங்கும் விசையாகின்றன.

 

ஏன் இதைப்பற்றி கூறுகின்றேனென்றால் , சிலருடன் பேசிய ஓரிரு கணங்களிலே , சிந்திப்பதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் இவர் நாகரீகமற்றவர் என முடிவெடுத்துவிடுகின்றோம்.

 

இது மிகவும் விமர்சிக்கப்படக்கூடிய ஓர் செய்கையாகும்.உண்மையை அப்படியே எடுத்துக்கூறி மனதினில் ஒன்றையுமே மறைத்து , புறம் கூறாமல் வாழும் மனிதரைக்கூட இதனால் நாகரீகமற்றவர்கள் என வர்ணிக்க இடமிருக்கின்றது.

 

மனிதநாகரீகம் என்று ஒன்றை இதுவரை எவருமே வரையறுத்துக் கூறவில்லை. காலத்துக்காலம் , இடத்திற்கு இடம் நாகரீகம் மாறுபட்டு , திரிபடைந்து வந்திருக்கின்றது.இதை மிக முக்கியமாக அலச வேண்டியுள்ள காரணாம் யாதெனில் , தம்மை நாகரீகமானவர்கள் என தமக்குத்தானே வரையறுத்துக்கொண்டு மற்றையோர் மனத்தை புண்படுத்தும் செய்கைகளை பலர் புரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலை எமது கண்முன்னாலேயே நடைபெறும் ஓர் காலமிது.

 

நாகரீகம் என்பது சிலசமயங்களில் நாங்கள் வாழும் நாட்டிற்கேற்ப , உடைகளில் தங்கியிருக்கலாம் , ஆனால் அரைகுரை ஆடையணிந்து நடத்தலோ அன்றி நாகரீகம் எனக்கூறி அளவுக்கதிகமாக மதுபானங்களையருந்தியோ நடப்பது என்றுமே ஒர் மனிதனை நாகரீகமானவன் என்று பெயர்கொள்ள வைக்காது.

 

நாகரீகம் தவறான முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக விஞ்ஞான வளர்ச்சியை ஒதுக்கும் ஓர் நிலை வந்துவிடக்கூடாதே எனும் ஓர் ஆதங்கமே என்னை இதை அலசிப்பார்க்க உந்தியது.

 

விஞ்ஞான வளர்ச்சி வேறு , அவசர நாகரீக ஆத்திரம் வேறு . விஞ்ஞான வளர்ச்சியின் நிமித்தம் கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்களை , நாகரீகத்தின் அர்த்தம் புரியாத சிலர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுவது , விஞ்ஞானத்தை ஒதுக்க வழிகோலக்கூடாது.

 

எம் மனத்திற்கு உண்மையானவராக , மற்றையோரின் மனம் புண்படாதவகையினில் , பிறர் தாம் அறியாமல் செய்யும் தவறுகளை சரியான வகையில் சுட்டிக்காட்டி நடப்பது நாகரீகத்திற்கு புறம்பானதல்ல.

 

மறந்து விடாதீர்கள் !

 

நல்ல மனிதன் , நாகரீகமுள்ளவனே !

| Posted in உன்னை ஒன்று கேட்பேன் ....

Leave a Reply