Subscribe to RSS Feed

சுயமாக சிந்திப்பவனே முன்னேறுகிறான்

on March 22nd, 2009 by sakthi

0060-0502-1819-31211

 

 

சிந்திக்கும் திறன் மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஏனைய விலங்கினங்கள் சிந்திக்கும் திறன் பெற்றிருக்கின்றனவா இல்லையா என்பது கேள்விக்குரியவனாகவே இருக்கின்றது.

 

 

ஏனேனில் அவர்களின் சிந்திப்பின் பலன்களை செயல்களில் காட்டும் திறன் அவைகளுக்கு குறைவாகவே இருக்கிறது.

 

 

இந்தக் கருத்தில் என்னுடன் வேறுபடுபவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இங்கே நான் சொல்ல விழையும் கருத்தின் உள்ளார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கை எனக்குள்ளது.

 

 

இப்படியான சிந்திக்கும் திறன் எத்தனை பேரால் அதனுடைய முழுத்தகமைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி.

 

 

சிந்திப்பதனால் ஒரு மனிதன் தன்னைத் தானே ஆய்வு செய்யும் திறமை பெறுகிறான். தன்னைத்தானே அறியும் திறன் ஒரு மனிதனுக்கு மற்றவருடைய நிலையை உணரும் சக்தியைக் கொடுக்கிறது.

 

 

அந்த உணர்வின் அடிப்படையில் அவனுடைய எதிர்பார்ப்புக்கள் குறைகின்றன.

 

 

விளைவு அவன் வாழ்வில் ஏமாற்றங்கள் தவிர்க்கப்படுகின்றன.

 

 

என்ன சக்திதாசன் காலாட்சேபம் செய்வது போல அளந்து கொண்டே போகிறார் என்று எண்ணுகிறீர்களா ?

 

 

என்னுடைய அனுபவத்தின் வாயிலில் நின்று நான் என்னை நானே பலமாய்க் கேட்கும் கேள்விகள் தான் உங்கள் காதுகளில் ” உன்னை ஒன்று கேட்பேன் ” வடிவில் வந்து விழுகின்றன.

 

 

பலசமயங்களில் என்னுள் இருந்த புரிந்துணர்வின் பற்றாக்குறையால் மனிதாபிமானம் பலமிழந்து போனதை நான் இப்போது உணர்கிறேன்.

 

 

செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்னும் காரியங்களின் வரைமுறைகள் என்னும் எல்லகளுக்கப்பால் எனது செய்கைகள் ஊர்வலம் சென்று விட்டு வந்ததை நான் இப்போது உணர்கிறேன்.

 

 

காலங்கடந்து இப்போது உணர்ந்து என்ன பயன்? உங்கள் கேள்வி என் காதுகளில் விழுகிறது. அதில் தொனிக்கும் உண்மையின் வலுவும் எனக்குப் புரிகிறது.

 

 

உணர்ந்த உண்மைகளைப் அன்புள்ள நெஞ்சங்களுடன் பலமாகச் சிந்திக்கும் காரணம், என்னுடைய சுயவிமர்சனம் யாராவது ஒருவரின் மனதில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த வழிகோலுமோ? என்னும் ஒரு நப்பாசையே !

 

 

இந்தச் சிந்திக்கும் திறனற்ற காரணத்தினால் தான் பல திருமணங்கள் திசையற்றுப் போகின்றன. பல குழந்தைகளின் வளர்ப்புக்கள் பாதைகளை மாற்றுகின்றன. ஏன் பல போர்களுக்கு ஆரம்பமாகக் கூட இவை இருந்திருக்கின்றன.

 

 

திருமணவாழ்வில் பலர் (நான் ஆண் என்பதால் ஆண்களின் கோணத்தில் பார்க்கிறேன்) எமது லட்சியங்களையும், நோக்கங்களையும் கொள்கைகளையும் முதன்மைப் படுத்துகிறோமே தவிர எமது வாழ்க்கைத்துணையின் அபிலாஷைகளையோ, ஆசைகளையோ, லட்சியங்களையோ நினைவில் கொண்டுவரத் தவறி விடுகிறோம்.

 

 

ஏன் பல உதாரணங்களில் அப்படி ஒன்று எமது வாழ்க்கைத்துணைக்கு இருப்பதைக் கூட மறந்து விடுகிறோம்.

 

 

எம்மை நியாயப்படுத்த எமக்கு முன்னால் வழ்ந்தவர்களின் வழிமுறைகளையும் ( அது சரியோ, தவறோ என்று கூடச் சிந்திக்காமல்) , கலாச்சாரம் என்னும் பெயரால் விதிக்கப்பட்ட நியாயமற்ற கட்டுப்பாடுகளையுமுப்யோகப்படுத்திக் கொள்கிறோம்.

 

 

எனக்குத் தெரிந்த ஒருவர் 1970களில் ஈழத்தில் திருமணமாகி லண்டனுக்கு வந்தவர். தனது மனைவி சேலையைத் தவிர வேறெதுவும் அணியக்கூடாது என்னும் கட்டுப்பாட்டை அவர் மனைவி மீது திணித்தார். ( அப்போது அதுதான் சமுதாயப்பார்வையாக இருந்திருக்கலாம்).

 

 

ஆனால் அவர் மனைவி வெளியே சென்று வெள்லை இனத்தவர்களுக்கு மத்தியில், அவர்களுக்கு நிகராக உழைத்து மாதாமாதம் வீட்டுக்குச் சம்பளம் கொண்டு வ்ருவதை அனுமதித்தார்.

 

 

அந்தப்பெண் தனது ஆசிய உடையான சேலையை அணிந்து கொண்டு வெள்ளை இனப்பெண்களுக்கு மத்தியில் பணிபுரியும் போது தனது மனதில் தோன்றும் தாழ்வு மனப்பான்மையைப் பற்றி தனது கணவனுக்கு மணிக்கணக்காக புரியவைக்கப் பாடுப்பட்டும், அவர் சிந்திக்கத் தவறிவிட்டார்.

 

 

விளைவு அந்தப்பெண் தனது பணிக்காலம் முழுவது மனம் நிறைந்த சுமையுடன் வாழ்ந்து சமீபத்தில் இவ்வுலகை விட்டு மறைந்தார்

 

 

ஆனால் அதே நபர் தனது மகள் திருமணத்துக்குப் பின் சிலவகையான ஆடைகளை அணிவதைத் தடுத்த தனது மாப்பிள்ளையைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

 

 

அவரைப் பார்த்த எனக்கு அவர். அவரிடம் இருந்த சிந்திக்கும் தன்மையை அடகு வைத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது.

 

 

அவரின் மனைவியின் சிந்திக்கும் மனோபாவமும், நியாயமான அறிவுரைகளும் இல்லாதிருந்திருந்தால் அவரது மகளின் வாழ்வு விவாகரத்தில் முடிந்திருக்கும்.

 

 

அப்போது கூடத் தனது மனைவியின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை, கணவனை மதிக்கும் அருமையான குணாம்சத்தை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

 

 

சிந்திப்பின் வலிமை, அது கொடுக்கு நிரந்தர அமைதி அதைப் பரிபூரணமாக உணர்வதிலேதான் உள்ளது.

 

 

சிந்திப்பின் மூலம் ஒருமனிதன் தன்னைப் புடம் போட்டுக் கொள்கிறான். அது அவனை வாழ்க்கையில் முன்னேற்றப்பாதைக்குத் தள்ளுகிறது.

 

 

பின் ஏன் சுயமான சிந்திப்பு என்று கூறுகிறோம்?

 

 

மற்றொருவர் உங்கள் மனதில் தூண்டும் சிந்தனை சிலசம்யங்களில் ஒருதலைப்பட்சமாக இருக்கலாம். அந்தச் சிந்தனையின் பலனாக அவர் இலாபம் அடைபவராக இருக்கலாம். எனவே மற்றோருவரின் மூலம் கிளறப்படும் சிந்தனை என்னும் புழுதி அடங்கி, தானே சுயமாக சிந்தித்து ஏற்படுத்து வத்திக்குச்சியின் இனிய நறுமணம் போன்ற சிந்தனைப் படலமே உபயோகமாகவிருக்கும்.

 

என்ன சக்திதாசன்? உங்களை நீங்களே மறுதலிக்கின்றீர்களே ! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

 

அதாவது உங்களது பதிவு யாராவது ஒருவருடைய மனதில் சிந்தனைத்தூண்டினால் போதுமானது என்று கூறும் நீங்களே, மற்றவர்களால் தூண்டப்படும் சிந்தனை ஆரோக்கியமற்றது என்று கூறுவது போல் தெரிகிறதே என்ற உங்களது சந்தேகம் எனக்குப் புரிகிறது.

 

ஒருவரது மனதில் சிந்தனையைத் தூண்டுவதற்கும், தனது சிந்தனயைத் திணிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர்வீர்கள் என்பது எனது நம்பிக்கை.

 

சிந்திக்கும் தன்மையின் குறைவினால் மனத்தளவில் பலரினால் பாதிக்கப்ப்ட்டிருக்கும் நான் என்னை நானே சிந்தித்து விமர்சிக்கும் தன்மையை ஓரளவு கடைப்பிடிப்பதனால் சில நிகழ்வுகளுக்கு விளக்கத்தைக் கொடுக்கக் கூடியதாக் இருக்கிறது.

 

சுயமான சிந்திப்பின் மூலம் தன்னையும் முன்னேற்றிக் கொண்டு, தான் வாழும் சமுதாயத்தையும் முன்னேற்றும் வல்லமை நான் காணும் அனைத்து இளநெஞ்சங்களிலும் இருக்கிறது.

 

எமது சமுதாயத்தின் வருங்காலத் தூண்கள் நீங்கள். உங்களின் விழிப்புணர்விலே பல மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்பட்டு, பல பொக்கிஷங்களான கலாச்சார நியதிகள் காக்கப்பட்டு, ஆண், பெண், இன, மத வேறுபாடுகள் களைந்தெறியப்படும் என்னும் நம்பிக்கை என் நெஞ்சில் அசைக்கமுடியாதவாறு நிலை கொண்டுள்ளது.

 

அன்புடன்

சக்தி

 

 

| Posted in உன்னை ஒன்று கேட்பேன் ....

Leave a Reply