Subscribe to RSS Feed

நீண்டதோர் பாதை நெடிந்ததோர் பயணம்

on March 12th, 2009 by sakthi

கண்ணுக்கெட்டிய தூரம் வரை முடிவேயில்லாத நெடுஞ்சாலை . அப்பப்பா ! அதில் சந்திப்புக்கள் எத்தனை !
விளக்கமற்ற விலாசங்கள்,வேண்டாத உறவுகள்,நீங்காத சோகங்கள் . தொடங்கியவுடனே முடிந்திடும் பயணங்கள்,
முடிக்க ஏங்கியும் முடியா பயணங்கள்.கால்களின்றி கைகளால் தவழும் உயிர்கள் , கைகளின்றி கால்களால் உண்ணும் உடல்கள்.

என்ன ! குழம்பி விட்டீர்களா ?

எம் நிலையிலா வாழ்க்கையைத்தான் நீண்டதோர் பயணம் என நான் விளித்துள்ளேன். சாலைதான்
முடிவில்லாதது, அதில் வரும் சந்தோஷமான திருப்பங்கள் தீடிரென முடிந்து விடும் , சோகமான வளைவுகளோ
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சாலையினில் வரும் சந்திப்புக்களை முன் கூட்டியே பார்த்து விடலாம் ஆனால் எமது வாழ்வின் சந்திப்புகள் எதிர்பாராமல் வரும் பின் அதே வேகத்தில் எதிர்பாராமல் மறைந்து விடும்.

சில சந்திப்புபுக்கள் எமது இதயத்தில் சுகமான ராகங்களை மீட்டிக் கொண்டிருக்கும். காலமெல்லாம் ஆனந்த பைரவியில் திளைக்கப் போகின்றோம் என மூடத்தனமாக நாமெண்ணும்போது , முஹாரி ராகம் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றது.

 

துன்பத்தில் அழுந்தி திக்கித் திணறி மூச்சுத் தடுமாற இனியும் தாங்க முடியாதப்பா என்னைக் கொண்டு
சென்றுவிடு என்று கதறும் போது ஓலைக் கூரையின் இடவெளிக்கூடாக ஒரு கீற்று ஒளி வருவது போல , எங்கோந் இருந்து ஒரு துளி நம்பிக்கை துளிர் விடும் ஒர் செயல் நடைபெறுகிறது.

 

மீண்டும் எழுகின்றோம் பயணத்தைத் தொடர்கின்றோம்.

 

இன்பம் ,துன்பம் இரண்டுமே வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் என மிக அழகாக விளக்கங்களை எடுத்து
வீசினாலும் ஏனோ துன்பங்கள் வரும்போது மட்டும் இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. எமது கண் முன்னால் நாம் காணும் மற்றவரின் மகிழ்ச்சியோ அன்றி அவர்களின் வசதியான வாழ்க்கையோ எமக்கில்லையே என்றொரு ஆதங்கம் அந்தரங்கத்தில் ஊஞ்சலாடுகிறது.

 

மற்றைய மனிதரின் சிரிப்பின் பின்னால் ஒரு கண்ணீர் நதி ஓடக்கூடும் எனும் உண்மை மட்டும் ஏனோ இதயத்தைத் தீண்ட மறுக்கின்றது .

 

இல்லாததைத் தேடி எங்கெங்கோ ஓடுகின்றோம் அப்போ எதிர்த்திசையில் இருந்து எதிர்பாராதது
கிடைக்கின்றது,அதையும் பெற்றுக்கொண்டு இன்னும் நாம் தேடியதை தேடிக் கொண்டே ஒடுகின்றோம். எத்தனையோ நல்ல உள்ளங்கள் பாதையில் எதிர்ப்படுகின்றன.ஆனால் அவசரத்தில் அந்தர லோகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் எமக்கு அவை தென்பட மறுக்கின்றன.

 

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகான இயற்கைக் காட்சிகள் இரைந்து கொண்டே எம்மைக் கடக்கின்றன,
ஒரு நிமிடம் நின்று , நிறுத்தி மூச்சு விட்டு அந்த இயற்கையை ரசிக்க மறுக்கின்றோம்.

 

நீண்ட பாதையின் நெடிய பயணங்கள் இலேசான இதயங்களினால் அனுபவிக்கப் படுகின்றன , கனத்த
நெஞ்சங்களால் சுமக்கப் படுகின்றன.

 

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமேயல்லாது சுமக்கக் கூடாது.

 

உள்ளங்களைக் கிள்ளி விட்டு அவை சிரிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது . மலர்களை கசக்கி விட்டு மணம் பரப்ப வேண்டுமென எதிர்பார்க்கக் கூடாது.

 

உண்மையை நாம் பேசாமல் , நேர்மையாய் நாம் நடக்காமல் அவை அனைத்தும் எமக்கு மற்றவர்களால் நிகழ்த்தப் பட வேண்டும் என கனவு காணக் கூடாது.

 

உள்ளத்தின் பலஹீனங்களை உண்மையாய் என்று ஏற்றுக் கொள்ளத் துணிகின்றோமோ ? அன்று எமது
பயணத்தின் பாதையில் மலர் தூவப்படும் , கனவுகளுக்கு வர்ணம் தீட்டப்படும் , கண்ணை மூடினால் தூக்கம்
தானாகவே கண்களைத் தழுவிக் கொள்ளும்.

| Posted in சத்தமுமில்லை யுத்தமுமில்லை

Leave a Reply