Subscribe to RSS Feed

கடந்ததும் கற்றதும்

on January 10th, 2009 by sakthi

கடந்து வந்த பாதையில் நான் கற்றுவிட்ட பாடங்கள் ஆயிரம். ஒவ்வ்வொன்றும் ஒரு விதம், ஒன்றையொன்று மிஞ்சும் வகை.

அரசியல் என்னும் சதுரங்கத்தில் ஆரவாரம் இல்லாமல் நடந்து முடிந்த ஆட்டங்கள் ஆயிரம்.

பிரதமர் என்னும் சாரதி ஆசனத்தில் வந்தமர்ந்த இங்கிலாந்துப் பிரதமர் தனது நாட்டை எந்தத் திசையை நோக்கி நகர்த்தியுள்ளார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சிபீடத்தில் அ

மர்ந்திருக்கிறது இங்கிலாந்தின் தொழிற்கட்சி. இயற்கையாக இக்கட்ச்சி இடதுசாரி சோஷலிஷக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவர்களின் பத்து வருட காலத்தில் எத்தனை தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது என்னும் கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே.


இடதுசார சோஷலிஷ கொள்கைகளை மட்டும் முன்வைத்து இங்கிலாந்தில் தேர்தல்களில் ஜெயிக்க முடியாது என்பதை பதினெட்டு வருட கால எதிர்க்கட்சி வாசம் , லேபர் கட்சிக்கு கற்றுக்கொடுத்திருந்தது என்பதுவே உண்மை.


தேர்தலில் வெற்றிபெற்று தாம் மீண்டும் அரசமைக்க வேண்டுமானால் தமது இடதுசாரக் கொள்கைகளை வலதுசாரத்துக்கு கொஞ்சம் இழுக்க வேண்டியிருந்தது என்பதை லேபர் கட்சி உணர்ந்து கொண்டது.


இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன? தொழிற்சங்கங்கள் அதற்கு முந்தைய லேபர் அரசாங்கத்தை ஆட்டிப்படைத்ததன் விளவே அது என்றுகூடச் சொல்லலாம்.


தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. ஆனால் இங்கிலாந்தில், எழுபதுகளின் முடிவில் தொழிற்சங்கங்களுக்கிருந்த செல்வாக்கை அரசாங்கத்தை மிரட்டிப் பணியவைக்க அவர்கள் பயன்படுத்தியதால், சாதாரண மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்கள்.


மக்களின் நன்மைக்காக் உழைக்கிறோம் என்று சொன்னவர்களிடம் காணப்பட்ட சோம்பேறித்தனௌம், மகளின் மீதான அசட்டையும், தொழிற்சங்கங்களை எதிர்க்கும் வலதுசாரக் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது.


விளைவு தொழிற்சங்கங்களின் முதுகெலும்பை முறிக்கும் சட்டங்களை அமுல்படுத்துவேன் என்று சொல்லி இரும்பு மனுஷி மார்கிரெட் தாட்சரின் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி 1979ல் பதவிக்கு வந்தது.


இங்கிலாந்தில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரை, தாம் ஒரு படி மேலே உயர்த்தி நடுத்தர வர்க்கத்தினராகி விட்டோம் என்று நம்பப்பண்ணும் ஒரு உத்தியை அவர்கள் கையாண்டார்கள்.


அதுவரை அரசாங்கத்தினால் குறைந்த வாடகைக்கு கவுண்சில்கள் மூலம் வாடகைக்கு கொடுக்கட்ட வீடுகளை, அவ்வீடுகளில் குடியிருப்போரே மலிந்த விலையில் வாங்கலாம் என்னும் சட்டத்தைக் கொண்டு வந்து, வாடைக்கு குடியிருந்த உழைக்கும் வர்க்கத்தினரை, வீட்டின் உரிமையாளர்களாக்கினார்கள்.


விளைவு, தாம் மத்தியதர வர்க்கத்தினர் என்னு மாயையினுள் அவர்கள் விழுந்தனர். இதனால் அதைத் தொடர்ந்து லேபர் கட்சியை பதினெட்டு வருடங்கள் அஞ்சாதவாசம் செய்ய வைத்தார்கள் கன்சர்வேடிவ் கட்சியினர்.


தொழிற்சங்கங்களினால், உழைக்கும் வர்க்கத்தினருக்காக உருவாக்கப்பட்ட லேபர் கட்சி, தமது சோஷலிசக் கொள்கைகளை மாற்றியமைத்து மத்தியதரவர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் கட்சியாக தம்மை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.


அதன் விளைவாகவே டோனி பிளேயரின் தலைமையில் லேபர் கட்ச்சி 1997ம் ஆண்டு அரசமைத்தது.


பொருளாதாரக் கொள்கைகளினால் தான் ஒவ்வொருமுறையும் செல்வாக்கிழக்கும் லேபர் கட்ச்சி, இம்முறை தனது புத்தியைத் தீட்டிக் கொண்டது. முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளை இறுகப்பற்றிக் கொண்டது.


விளைவு உழைக்கும் வர்க்கத்தின் உடமை எனக் கணிக்கப்பட்ட லேபர் கட்சிக்குப் பல பணமுதலைகளின் ஆதரவு கிடைத்தது.


அந்தவழியே தான் இன்று பிரதமர் கார்டன் பிறவுண் நாட்டைக் கட்டி இழுக்கிறார். அவரது கஷ்டகாலம் இதுவரையும் பொருளாதார வனப்புக்குள் மூழ்கியிருந்த இங்கிலாந்தை விட்டு அதிர்ஷ்டம் அகன்றது.


அவரது தூரதிர்ஷ்டமோ என்னவோ கார்டன் பிறவு/ண் பிரதமாராகும் போது அவரைச்சுற்றி ஒரு வலை அவரை இறுகப் பின்னியது..


ஈராக், உலகப் பொருளாதாரம் என்னும் பலமுனைத்தாக்குதல்களினால் அல்லாடிப்போயிருக்கிறார் நமது பிரதமர்.


ஆனாலும் கறுத்த முகில்களினூடு ஒரு வெள்ளிடை மலை தெரிவது போல அவருக்கு ஒரு சிறிய நம்பிக்கை இருக்கிறது. செல்வாக்குச் சரிந்து தரையில் விழுந்து கிடக்கிறது. இனிக் கீழேபோக முடியாது போன்றதொரு உணர்வு.


இனி எந்தப் பக்கமாக அசைந்தாலும் அது மேல்நோக்கித்தான் இருக்கும் என்று நம்புகிறார்.


அரசியல்வாதிகளின் நடவ்டிக்கைகளுக்கும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் சம்ம்மந்தம் இருக்கிறது.


மாற்றத்தை விரும்பும் மக்கள், அந்த மாற்றத்தினால் உருவாகும் விளைவுகள் தமது சொகுசு வட்டத்திற்கு எதுவிதமான இடையூறும் செய்துவிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்./


இந்த எதிர்பார்ப்பே அரசியல்வாதிகளை தமது துணிச்சலான கொள்கைகளை முன்னெடுக்கத் தடுக்கும் காரணிகளாகின்றன.


உதரணமாக, ஜயையோ இங்கிலாந்துக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கெல்லாம் காரணம் இங்கே வந்து இத்தனை வெளிநாட்டவர்களை குடியேற அனுமதித்த அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கையே எனக் கூப்பாடு போடுகிறார்கள் ஒருபுறம்.


மறுபுறத்தில், இங்கிலாந்தில் உள்ள குறைந்த ஊதியமளிக்கும் கடினமான பணிகளில் அமரும் இந்த வெளிநாட்டவர்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகளை ஏற்றுக் கொள்ள யாருமே முன்வருவதில்லை.


இத்தகைய மனோபாவம் கொண்ட மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் தம்மைத்தாமே மாற்றிக் கொள்கிறார்கள்.


தாம் அடுத்த தடவை பதவிக்கு வந்தாலென்ன, இல்லாவிட்டால் என்ன நாட்டின் நன்மை கருதி சில முக்கிய மாற்றங்களை எடுக்கப்போகிறேன் என்னும் துணிச்சல் கொண்ட அரசியல் தலைவர்கள் யாருமே இருப்பதில்லை..


தமது தேவைககளை முதன்மைப்படுத்தி, சமுதாய நன்மைகளை புறந்தள்ளும் தன்மை சமூகத்தில் புரையோடிபோயிருப்பதால் சமுதாய நலன்களை முன்னிலைப்படுத்தும் திட்டங்கள் மக்களிடையே வரவேற்பு பெற்றிராதவையாக இருந்தால் அவற்றை முன்னெடுக்க அரசியல்வாதிகள் தயங்குகிறார்கள்.


ஒருகாலத்தில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மிகவும் பரந்த அளவில் அனைத்து மக்களுக்கும் இலவச சிகிச்சை என்னும் கொள்கையின் அடிப்படியில் செயற்பட்டு வந்தது.


ஆனால் இன்றோ இலவசமான வைத்தியம் என்னும் பெயர் இருந்தாலும் ஒரு மாவட்டத்தில் ஒரு நோய்க்கு உபயோகிக்கும் மருந்தினை மற்றொரு மாவட்டம் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் தமது பட்ஜெட் இடம் கொடுக்காது என்னும் காரணத்தினால் உபயோகிக்கத் தடை விதிக்கிறது.


விளைவு…..


உதாரணமாக வட இங்கிலாந்திலும், தென் இங்கிலாந்திலும் ஒரே விதமான புற்று நோய்க்குள்ளான இரு நோயாளிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, புற்றுநோயின் நிவாரணத்துக்கு மிகவும் உதவுகிறது என்று கருதப்படும் மருந்து ஒரு நோயாளிக்கு கிடைக்கக் கூடியதாகவும், மற்றொரு நோயாளிக்கு கிடைக்க முடியாததாகவும் இருக்கிறது.


ஒருவர் எத்தனை காலம் வாழமுடியும் என்னு தீர்மானத்தை வெறும் பட்ஜெட்டின் அடிப்படையில் இந்தச் சுகாதார அமைப்புக்களின் நிர்வாகிகள் தீர்மானிக்கிறார்கள்.


இத்தகைய பாரபட்சம் காட்டப்படும் நடவடிக்கைகள் நவீன காலத்தில் வைத்தியம் உட்பட அனைத்துமே வியாபாரக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படவேண்டுமென்ற வாதத்தின் கீழ் புதைக்கப்படுகிறது.


அரசாங்கம் மக்களின் வைத்தியத்துக்காக செலவிடும் பணம், அதே மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் அறவிடப்படுகிறது என்பதால் அதனைச் செலவழிக்கு விதத்தில் தாம் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும் என அந்த வரியைச் செலுத்தும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவே மக்களின் எதிர்பார்ப்புகளுகமையவே நாம் செயற்படுகிறோம் என்று தம்மை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது.


இங்கேதான் மக்களின் எதிர்பார்ப்பு “தாம்” என்னு வலயத்தினுள் நின்று கொண்டு “நாம்” என்னு மகத்துவத்தை மறந்து போகிறது என்னும் பயங்கர உண்மை புலப்படுகிறது.


ஆனால் இத்தகைய சமூகத்தினுள் ஒரு அங்கமாகத்தான் நானும் புதைந்து போயிருக்கிறேன் என்பதுவே உண்மை.


இது என்னை நோக்கி நானே பார்க்கும் ஒரு உள்முகமான சுயபார்வை என்று கூடச் சொல்லலாம்.


நாம் எதையும் குறை கூறும் போது நாமும் அந்தக் கூட்டத்தில் ஒரு அங்கம் என்பதைப் பலசமயங்களில் மறந்து போகிறோம் என்பதுவே உண்மை.


ஈழத்திலிருந்து புலம்பெயார்்ந்து இங்கிலாந்தில் நான் வாழத்தொடங்கி, மாணவன், வாலிபன், குடும்பஸ்தன் என்னும் ஒவ்வொரு கட்டத்தினுள் நுழைந்ததும் என்மீது மற்றையோருக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, எனக்குச் சமூகத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அந்தந்தக் காலத்தில் என்மீது விதிக்கப்படும் கடமைகளுக்கேற்ப மாற்றமடைந்து வந்திருக்கிறது என்றே கூறவேண்டும்.


மாணவனாக இருக்கும் போது அரசாங்கம் கல்விக்கு உதவிப்பணம் கொடுக்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த நானே, அப்போது மாணவர்களுக்களிக்கப்படும் உதவி மக்களின் வரிப்பணத்திலிருந்தே அறவிடப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவில்லை.


ஆனால் அதே நான் பணிபுரியத்தொடங்கி வரி செலுத்தத்தொடங்கியதும், வரிப்பணத்தில் கல்விக்காக உதவி பெற்று கல்வியில் அக்கறை செலுத்தாது அதனை விரயம் செய்யும் மணவர்களைக் கண்டதும் ஏனோ எனது வரிப்பணத்தை விரயஞ் செய்கிறார்கள் என்னும் எண்ணத்தில் ஆழ்ந்து போகிற நிகழ்வுகளும் உண்டு.


இதை எதற்காக இங்கே நான் கூறவிழைகிறேன் என்றால் என்னைப்போன்ற பலர் சேர்ந்ததே சமூகம். இந்தச் சமூகத்தின் எதிர்பார்புக்களைப் பிரதிபலிக்க்கும் அரசியல்வாதிகளே அரசாங்கம் அமைக்கிறார்கள்.


அதே நாம் மீண்டும் அந்த அரசியல்வாதிகலின் நடவடிக்கைகளை விவாதிக்கிறோம். இது ஒரு முடிவிலாச் சக்கரம்.


இந்தச் சுற்றல் என்று நிற்கிறதோ அன்று தான் விடிவெள்ளி முளைக்குமோ ?


சக்தி சக்திதாசன்

10.01.2009

 

| Posted in சத்தமுமில்லை யுத்தமுமில்லை

3 Responses to “கடந்ததும் கற்றதும்”

 1. Amalorpavanathan
  January 10th, 2009 at 8:11 am

  Very well written. Love to read more of your writing.

 2. ganesh chandra
  January 10th, 2009 at 9:22 am

  Sakthi

  Italics la full article ezhudhatheenga.. padika kashtama iruku. Doctor visit article fulla .. red color la irundhathu..makes reading difficult.

 3. sakthi
  January 10th, 2009 at 10:57 am

  அன்பின்ன் கணேஷ்,

  அன்பான கருத்துக்கு நன்றீக. கவனித்து பதிவீடு செய்கிறேன்.
  அன்புடன்
  சக்தி

Leave a Reply